11/28/2013

காலை இளந் தென்றற் காற்றே


காலை இளந் தென்றற் காற்றே
கண் சிமிட்டும் நேரம் இதோ......
பூவும் இலையும் தலையை ஆட்டப்
புன்னகை வருகிறதே ........

சோலை வண்ணம் என் எண்ணம்
கூடும் நேரம் இந்நேரம்
மாமன் நெஞ்சில் மஞ்சம் போடும்
தோழி நான் தானே ...........

                                              ( காலை இளந் )

தாயைப் போன்ற உள்ளத்தில்
தாவிக் குதிக்கும் கிள்ளை நான்
காலம் எல்லாம் நம் சொந்தம்
காண வேண்டும் ஊர்கோலம் ..

ஆசை உள்ள நெஞ்சுக்குள்
ஆலவட்டம் நான்  போட
மீசை துடிப்பதேன் மாமா நீ
பேசும் வார்த்தைகள் நான் தானே ...

                                                ( காலை இளந் )
                                                       
கூவும் குயிலும் மயிலும் எங்கே
நாம் கூட்டுச் சேர்ந்த பொழுதினிலே
ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான்
அடடா சிரித்திடும் வெண்மேகம் தான் ....

ஊரைக் கூட்டித் தாலி கட்டி
உறவை வளர்த்த மாமாவே
நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
எந்நாளும் இங்கே கொண்டாட்டம் தான் ....

                                                      (  காலை இளந்)  


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/24/2013

கார்த்திகை 27 கண்களில் ஒளிதீபம் ஏற்றுங்கள்


மறவர் புகழ் பெருமை காக்து
மண்ணில் புதைந்த வீரர்களே
உறவு எங்கள் உறவு நீங்கள்
உயிரில் கலந்த தீபங்களே ......!!!!!

ஒளியைத் தந்து விழியைத் திறந்து
ஒதுங்கி நின்று காத்திடும்
மனதின் எண்ணம் மலருவது திண்ணம்
மறுமுறை பூப்பாய் கார்த்திகைப் பூக்களே ...

அழுத விழிகள் சிரிக்கும் காலம்
அருகில் வந்து சேர்ந்திடும்
அமுத மொழியில் உரைத்த சத்தியம்
அகிலம் முழு(வது)ம் பரவிடும் ......

விதியின் பாதை சதியை விலக்கி
விடுதலைக்கு வித்திடும் இந்த
மொழியின் வலிமை உணரும் தருணம்
உனது கானம் ஒலித்திடும் ...........

எளிமையான வாழ்க்கைச் சூழல்
எம் இனத்தின் பலத்தைக் காத்திடும்
என்றும் இல்லா ஆனந்தத்தில்
மன(ங்கள்)ம்  திங்கள் போல சிரித்திடும்

பொங்கு தமிழ்க் குலத்தின் மரபே
மாவீரர் என்னும் வேங்கைகளே
சங்கெடுத்து முழங்குகின்றோம்
உனது சத்தியம் தான் யெயித்திடும் ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/23/2013

அதர்மத்தின் துணைகொண்டு தர்மத்தை அழிப்பீரோ
அதர்மத்தின் உச்சியில் நின்று
ஆணவத்தினால் மதிகெட்டு
விட்டெறியும் வார்த்தை அம்புகளுக்கு
வானவில்லும் வீழ்ந்திடுமா சொல் ?...

மதிகெட்டவர்கள்
மனதில் உறுதியற்றவர்கள்
கொலைக் களத்தையே விரும்பும்
கொள்ளிவாய்ப்  பேய்கள்

நீதி  அறியாதவர்கள் பிறரது
நின்மதியை விரும்பாதவர்கள்
சாதிக்க நினைப்பவை யாவும்
சர்வ நாசமாகும் ..........

மோதிப்பார் உலகினிலே
மோகத்தில் தழைத்தவர்கள்
பாதிப்பேர் அழியக் கண்டு
பரிகசிக்குது நன் மனங்களும் இன்று ...

நீதிக்கே தண்டணையா
இதை நிலவுலகம் தாங்கிடுமா
பாதிப்பு அறியா மனமே
உன் பருப்பு வேகாதிங்கே ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/21/2013

இறைவனை விட்டு விடு நீ நீயாகவே இரு அது போதுமிங்கேஇரவும் பகலும் வாழ்வினிலே
இரண்டறக் கலந்த போதினிலும்
நிலைமையை உணர்ந்து வழி செய்து
நின்மதியாகவே தான் வாழுகின்றோம் ....

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு
ஒற்றுமையாக வாழ்வதற்கும்
பகுத்தறிவொன்று போதாதா இருந்தும்
படைத்தவன் மேல் வீண் பழி தான் எதற்கு ?..!!

மனிதனே செய்யும் தவறுகளுக்கு
மனிதனே தான் இங்கு பெரும் பொறுப்பு
விதைப்பதைத் தானே அறுவடை செய்யலாம்
விடை சொல்லு மானிடா பகை எதற்கு ?....

இறைவனை மிஞ்சிட சக்தியும் இல்லை
இனி இதை மறந்தால் எமக்குப் புத்தியும் இல்லை
மனிதனின் கர்வம் அழிந்திட வேண்டும் இங்கே
மறுபடி உலகம்  தழைத்திட வேண்டும் ....

பொறுமையில் சிறந்த குணத்தாலும்
பொக்கிசமான பெரும் கொடையாலும்
வறுமையைப் போக்கி நல்லுணர்வாலே
வசந்தத்தைக் காண்போம்  வாழ்வினிலே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/20/2013

வெற்றிக் கனியே உன்னால் தான் விடியும் இவ்வுலகம்


திருக்குறளின் பொருளறிந்தும் பயன் தான் என்ன
திருந்தாத மானிடர் தம் வாழ்வில் இங்கே
ஒருப் புகழும் சேராது மயக்கம் இதனால்
ஒன்றுபடு ஒற்றுமை தான் வாழ்வின் இன்பம்

மருத்துவரும் பொருளீட்டக் கொன்றார் உயிரை
மண்ணாசை பொன்னாசை பெரிதேயென்று
அரசியலும் அப்படித் தான் வாழ்வில் இன்று
அலங்கோலம் இதை விடவும் உண்டோ சொல்லு?..

படித்து வரும் படிப்பெல்லாம் பண்பைத் தந்தால்
பக்குவமாய் இவ்வுலகம் முன்னேறிச் செல்லும்
எதற்கெடுத்த போதினிலும் சண்டை என்றால்
என்றுணர்வார்  தம் தவறை உணரா மனிதர் ?....!!!!

வியப்புடனே இமை சுருங்கப் பார்ப்போர் முன்னால்
வித்தை கற்ற அறிவாளி தன் பேச்சால் வெல்வார்
நிரந்தரமோ பிறர் வாழ்வையும்  இதுவே அழிக்கும்
நிலை குலைந்த தர்மத்தால் இங்கும் நீதி தான் தோற்கும்

அறிவிருந்தால் போதாது அன்பும் தான் வேண்டும்
அனைத்துயிரும் சமம் என்ற பண்பும் தான் வேண்டும்
கருவியல்ல நாம் மனிதரென்று உணரடா மனிதா நீ
கற்ற கல்வி கொண்டுலகில் வெற்றி தா என்றும் ........


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/14/2013

தமிழீழத் தாயின் தன்னிகரற்ற வாழ்த்துக்கள்அன்பாய்ப் பேசும் பேச்சினிலும்
அழகாய்ச் சிரிக்கும் சிரிப்பினிலும்
தென்பாய் நடக்கும் நடையினிலும்
தேனே உன்னில் என்னைத் தான் கண்டேன் !!!

வெண்பா எழுதத் துடிக்கையிலும்
வெறுப்பாய் என்னைப் பார்கயிலும்
கண்பார்வையின் அசைவினிலும்
கனியே உன்னில் என்னைத் தான் கண்டேன் ..!!!

அண்ணன் தம்பி தங்கையுடன்
ஆடிப் பாடி மகிழ்கையிலும்
மலர்ந்த முகத்தில் எதைக் கண்டேன்
மலரே உன்னில் என்னைத் தான் கண்டேன்...

சட்டப் புத்தகம் போல் என் முன்
நீ சண்டைகள் போடும் போதெல்லாம்
கண்ணே மணியே எதைக் கண்டேன்
கரும் புலியே உன்னில் என்னைத் தான் கண்டேன் !

கொட்டும் மழையில் நீ நனைகையிலும்
கொள்கை மாறா உன் பேச்சினிலும்
கட்டிக் கரும்பே எதைக் கண்டேன்
கண்ணே உன்னில் என்னைத் தான் கண்டேன் ...

தமிழிச்சி என்று சொன்னாலே இன்றும்
தரணியில் அனைவரும் வியப்புறுவர்
உன்றன் பரம்பரை  தழைத்திடவே
ஒவ்வொரு நாளும் வாழ்த்துரைப்பேன்

அகர முதல  எழுத்தையே
அன்றும் இன்றும் சுவாசிக்கும்
எங்கள் பரம்பரை உட்பட
அனைத்துக் குழந்தைகளும் வாழியவே ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/10/2013

திறமைக்கே எங்கும் முதலிடம் கொடுக்க வேண்டும்


அறிவுச் சுடரை ஏற்றி வைக்கும்
ஆசான் மனதில் அழுக்கிருந்தால்
விளையும் பயிர்கள் என்னாகும் ?...அவை
வீணாய்ப் போகும் வாழ்நாளில்......

பணமாய்க் கொட்டும் இடம் பார்த்து
பயிற்சி அளிக்க நினைப்பவர் முன்
கனமாய்க் கனக்கும்  மனங்களிங்கே அதன்
கண்களுக்கு வேலையென்ன ?...................

அழவும் தொழவும் தான் தெரியும் நல் 
அறிவை வளர்க்கத் துடிப்பவர்க்கு  -இந்த
நிலைமை அறிந்த எவரேனும் அவர் தம்
நினைப்பை மாற்றுதல் தான் தர்மம் ....

விலகும் நிலைக்குக் கலை வந்தால்
உலையில் மீன் போல் உடல் துடிக்கும்
இதையும் அறிய மாட்டாரோ இவர்கள்
இதயம் என்ன காட்டாறோ ?...............

பொருளின் மீதே பற்றுடையார்
இருளை அகற்ற ஏன் வந்தார் ?.......
நிலவை அழைக்க நினைக்காதார்
நினைப்பால் துயரம் துயரம் தான் இங்கே ....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/03/2013

வெற்றி வேலாயுதப் பெருமானே

வெற்றி வேலாயுதப் பெருமானே
வெற்றி கிட்டியதே உன்றன் அருளாலே
பற்றியதே பாசம் மலை போலே உயிர்
மெச்சிடுமே  கந்தன் உனைத்தானே .....

உற்ற துணை என வந்த பெருமானே
கொடும் சூரரை வதைத்த மயிலோனே
நற்றமிழைத் தந்த முருகா எம்மை
எந்நாளும் காத்திட இங்கு வருவாயே ....

முக்கனியில் சிறந்த கனியோனே உன்னை
முன் நிறுத்தி விரதம் இருந்தோமே
அற்புதங்கள் நிகழ்த்த வாருமையா
ஆறுபடை வீடு கொண்ட எம் பெருமானே ...

முக்தி தரும் ஞான மொழியோனே எங்கள்
முன் வினையை அகற்ற வருவாயே
பக்தி தரும் பார்வை உனதாகும்
பன்னிரு கரத்தான் நீயே  எமக்கு வரமாகும் ....

கந்தன் என வந்த எங்கள்
தண்டபாணித் தெய்வமே உன்றன்
கந்த சஷ்ட்டி கவசம் சொன்னால்
இன்பம் வந்து சேருமே ....

                             (  வெற்றி வேலாயுதப் பெருமானே )
                                                         தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/01/2013

தீப ஒளியது அசைந்தாடதீப ஒளியது அசைந்தாடத்
தீமைகள் எல்லாம் பறந்தோடத்
தெய்வீக ஞானத்தில் உள்ளங்கள் மகிழ்ந்தாடவே
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே

பாவத்தின் பங்கதை நீ நீக்கிட உலகில்
பாசத்தை எந்நாளும் உருவாக்கிட
எங்கள் தேசத்தின் நன்மைக்கும் வழி காட்டிட
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே

கோரப் பல் விழிப் பார்வை விலகட்டுமே உலகில்
கோடாடி கோடி நன்மைகள் பெருகட்டுமே  ..........
தூரத்தில் நீயிருக்கும் போதினிலும் இங்கும்
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே ......

ஊரோடு கூடி வந்தோம் காப்பெடுத்து
உயிர் ஊட்டத்தை நீயளிக்க வேண்டும் என்று
போராடும் எங்களுக்குச் சக்தி தந்து
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே .....

பூவோடு மஞ்சளிங்கே நிலைத்திடவும்
புரியாத புதிர் எல்லாம் விலகிடவும் 
பேசாத வார்த்தைக்கும் அர்த்தம் தந்து
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே ...


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.