5/08/2016

பாட்டுக்கோர் புலவன் பாரதி!

                                           


பாரதியார் போலிங்குப்  பாரினிலே  கண்டதில்லை
வீரத்தில் யாமறிந்த  விற்பன்னன்!-ஏரெடுத்து
இங்குளுதான் எம்மனத்தைத்  தங்கத் தமிழாலே!
பொங்கட்டும்   இன்பப் பொழில்!

போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார்
ஏர்முனைக்(கு)  ஈடான என்றுமவன்!- கூர்விழிமுன்
யார்வந்து நின்றாலும் யானை வலிமையென
பாரதிக்கே கிட்டும் பரிசு!

பொல்லாத  சாதிவெறி போனதெங்கே என்றறியார்
எல்லாமும் எம்மறவன் பாட்டின்முன் !-நில்லாதே
ஓடியதாம்!  என்றுமவர்   ஒப்பற்ற பாடலினால்
தேடியிங்குத் தந்திட்டார்  தேன்!


அச்சமின்றி நாம்வாழ அம்புவியில் தெம்புதந்து
இச்சைகளைத் தீர்த்துவைக்கும் இன்பாவே!-துச்சமென
எண்ணிநிதம் தூற்றுவோரை எந்நாளும் வெல்லத்தான்
கண்ணாக நின்றொளிரும்  காண்!

தாலாட்டிச் சீராட்டித்  தாய்பாடும்  பாட்டினுள்ளும்
காலமெல்லாம் கண்டுணர நற்கருத்தால் !-கோலமிட்டார்
கோடிமுறை கேட்டாலும் கொண்டசுவை மாறாது!
நாடினார்க் கெய்தும் நலம்!

பெண்ணடிமை இல்லையென்று பேரெழுச்சி கொண்டிங்குக்
கண்ணான பாரதியே கன்னலென  !- எண்ணற்ற
பாட்டிசைத்து பாரிலெம்மை வாழவைத்தார்  இன்றவரால்
ஏட்டினிலும் எம்முயர்வைக் காண்!

நாட்டிற்கு நன்மைசெய்து நற்புகழின்  உச்சிதொட்டார்
ஏட்டினிலே பாரதிக்கும் ஈடுண்டோ !- பாட்டிசைக்க
பாரதத்தாய்  ஈன்றெடுத்த  பாவலனைக்  காவலனை
வேரெனவே காணும் விழி!

பாடுங்கள் பார்போற்றும் பாரதியின் பாடலைத்தான்
தேடிவரும் இன்பமிங்கே தேனாறாய் !-நாடுங்கள்
நற்கருத்தை நாட்டுக்கும் இன்றதுவே நன்மைதரும்!
பெற்றவரம் தந்துவக்கும்   பேறு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/01/2016

சொல்வேந்தர் சுகிசிவத்தின் பேச்சைக் கேளீர்!



சொல்வேந்தர் சுகிசிவத்தின் பேச்சைக் கேட்டுச்
....சொக்காத மனமும்தான் சொக்கிப் போகும்!
எல்லாமும் எமக்கிங்குத்  தெரியும் என்றே
.....எண்ணிநிதம்   பேசுகின்றோம் உலகில் இன்றே!
இல்வாழ்வு சிறப்பதற்கும் எல்லை இல்லா
 .....இடர்மூழ்கிப் போவதற்கும் எடுத்துக் காட்டாய்
நல்லதையே நாளுமிங்கு உரைக்கும் அன்பர்
.....ஞானத்தைக் கண்டுள்ளம் வியப்பில் மூழ்கும்!

தித்திக்கும் எம்மனத்தில் தேனும் பாயும்
.........தீராத காதலொடு  நிலவும் காயும்!
எத்திக்கும் அவர்பெயரைச் சொல்லிப் பார்க்கும்!
.......இருவிழியும் செவியிரெண்டும் இன்பம் கொள்ளும்!
வித்தைக்கு அதிபதியாள் நாவில் நின்று
......விளையாடும் செயலைத்தான் உணர்த்திச் செல்லும்!
இத்தகைய பேச்சைத்தான் கேட்க வேண்டும்
.......இன்பமுடன் இவ்வுலகில் நாமும் வாழ!

கண்ணாரக் காணாத ஒன்றை வைத்துக்
....கதைபேசித் திரிகின்றார் கயவர் நாளும்!
எண்ணத்தில்  தோன்றுவதை எல்லாம் கோர்த்து
..... இன்றுலகில் பேசுகின்ற பேச்சைக் கேட்டால்
புண்ணாகித் தான்போகும் மனமும் இங்கே
......புழுவொன்று தீமேலே விழுந்தாற்  போல!
பண்பாடு நிறைந்தவரே அந்தப்  பேச்சால்
......பாழாகிப் போனவரை எண்ணிப் பாரீர்!

நல்லதையே நாளுமிங்குக்  கேட்க்க வேண்டும்!
.....நாம்பேசும் பேச்சும்தான் இனிக்க வேண்டும்!
இல்லாத கதைபேசும் நட்போ  டிங்கு
....இருக்கின்ற உறவைதாம் துறக்க வேண்டும்!
பொல்லாங்குச்  சொல்வோர்குத் துன்பம் ஏது
.....பொய்பேசி நாள்முழுதும் இன்பம் காண்பார்!
வில்லங்கம் விளைவிப்பார் அவரே நாளை 
......வீதியிலும்  நிற்கவைப்பார் விழித்துக் கொள்வீர்!

பட்டதுன்பம் அத்தனையும் பறந்து போகும்!
......பாரினிலே வாழவழி தெரிந்து போகும்!
சட்டத்தைப் படித்தாலும் மேடை ஏறிச்
......சத்தியத்தைப் பேசுகின்றார் உலகில் இன்று!
முட்டாளும் சுகிசிவத்தின் பேச்சைக் கேட்டு
......முன்னேறிச் செல்லுகின்ற காலம் தன்னில்
விட்டத்தை நோக்கியிங்கு அழுதல் நன்றோ!
......விழிசிந்தும் கண்ணீரைத் துடைத்துக் கொள்வீர்!                                                       
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.