2/02/2014

எங்கு செல்வேன் உனைப் பிரிந்து



புள்ளிக் கோலம் அழியாமல் 
பூவின் அழகு குறையாமல் 
வள்ளிக் கணவன் அருளாலே 
வந்தாள் தந்தாள் பாவிங்கே 
அள்ளிக் கொழித்த  உடற் பிணியால் 
அடங்க மறுத்த வலி தணிந்து 
தள்ளித் தள்ளிப் போவேனோ என் 
தங்கத் தமிழே வாழிய நீ !...

செந்தேன் மழையில் நான் குளிக்க 
சேரும் காலம் பொற் காலம் 
வெந்தேன் உடல் நலக் குறைபாட்டால் 
வேங்கை இனத்தின் நாயகி தான் 
நொந்தேன் இருப்பினும் விடுவானோ 
நோயைத் தீர்க்கும் கந்த குருவைப் 
பணிந்தேன் துணிந்தேன் வந்துதித்தேன் 
பழம்பெரும் தமிழே வாழிய நீ ..

கங்கை வற்றிப் போனாலும் 
காவிரி வற்றிப் போனாலும் இந்த 
மங்கை உள்ளம் வற்றாது 
வலுவாய் நிற்கும் என் தாயே 
சங்கை முழங்கு என் சார்பில் 
சாகேன் வருவேன் பாவிசைப்பேன் 
நங்கை மனம் போல் எந்நாளும் 
நற் தமிழே உயிரே வாழிய நீ 



18 comments:

  1. தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அருளை வேண்டி தமிழ் தாயை வேண்டி வாழ்த்தி அழகான அகவல் "பா" மாலை" சூட்டி உள்ளீர்கள்!! தங்களது இனிமையானத் தமிழைக் கேட்கும் அந்தத் தமிழ் கடவுள் தங்களிடமுள்ளத் தமிழ் தாயை இன்னும் வாழ்த்திடுவார்! செம்மையானத் தமிழ்! இன்பத் தேன்வந்து காதினில் பாய்வது போல்!!! அருமை!!!

    வாழ்த்துக்கள்! தொடர்கின்றோம்!!

    ReplyDelete
  2. கங்கை வற்றிப் போனாலும்
    காவிரி வற்றிப் போனாலும் இந்த
    மங்கை உள்ளம் வற்றாது
    வலுவாய் நிற்கும் என் தாயே !..

    வாழ்க வளமுடன்.. வாழிய.. வாழியவே!...

    ReplyDelete
  3. ஆகா...! வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  4. கங்கை வற்றிப் போனாலும்
    காவிரி வற்றிப் போனாலும் இந்த
    மங்கை உள்ளம் வற்றாது
    வலுவாய் நிற்கும் என் தாயே
    சங்கை முழங்கு என் சார்பில்
    சாகேன் வருவேன் பாவிசைப்பேன்
    நங்கை மனம் போல் எந்நாளும்
    நற் தமிழே உயிரே வாழிய நீ

    மங்கை உன் மனத்தைக் கண்டு
    மெய் சிலிர்த்தேன் பெண்ணே
    பூக்கும் உன் பூக்கள் எல்லாம்
    செழிக்கும் பாரில் கண்ணே..!

    அருமை தோழி !நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  6. வணக்கம்
    என்ன வரிகள்.... நற்கவி தந்து எங்கள் உள்ளங்களை நெகிழ வைத்து விட்டிர்கள்.. வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. இந்த அழகுமிகு பாடலை
    சுப்பு தாத்தா ஒரு கிராமீய மெட்டில்
    ஒரு களத்து மேட்டில் நின்று கொண்டு
    பாடுகிறார்.
    https://www.youtube.com/edit?video_id=QBn5PzEbdp8&video_referrer=watch
    எச்சரிக்கை:
    சுப்பு தாத்தா .பாடகர் அல்ல.
    அவருக்கு மெட்டு அமைக்கத்தான் தெரியும்.

    அவர் ஒரு திவாகரும் அல்ல.
    அளகேசனும் அல்ல.

    ஆனால் அழகான தமிழ் கவிதைகளை
    ரசித்திடும் இசை அன்பன்.

    அம்பாள் அடியாள் வாழ்க.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  9. கங்கை வற்றிப் போனாலும்
    காவிரி வற்றிப் போனாலும் இந்த
    மங்கை உள்ளம் வற்றாது //

    வாழ்க வாழ்க தமிழே நீ வாழ்க...!

    ReplyDelete
  10. அள்ளிக் கொழித்த உடற் பிணியால்
    அடங்க மறுத்த வலி தணிந்து//

    வலி ஒழிந்து சுகம் சேர
    நிச்சயம் அருள்வாள்
    எங்கள் அன்னை மீனாட்சி
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  11. "பழம் பெரும் தமிழே வாழிய நீ" என வாழ்த்தும் தங்களைப் பாராட்டுகிறேன்.

    தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete
  12. உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் தோழி. பிணி தீர்க்காவிடினும் வலிமறக்கச்செய்யும் வல்லமை நம் தமிழுக்கு உண்டு. மனமும் உடலும் விரைவில் தேற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  14. தமிழ் தாய்க்கு பாமாலை சூட்டிய தங்களுக்கு வாழ்த்துக்கள்.

    "//நங்கை மனம் போல் எந்நாளும்
    நற் தமிழே உயிரே வாழிய நீ //" - வாழ்க தமிழ்

    ReplyDelete
  15. வழர்க இன்னும் பல கவி எப்போதும் வாழும் தமிழ்.

    ReplyDelete
  16. கவிதை அருமை! ஆனால் அதில் வலி, முக்கியமாக மன வலி புலபப்டுகிறது! உடல் நலத்தைக்கவனியுங்கள். நிச்சயம் தமிழ்த்தாய் உங்களை விட்டு எங்கும் போக மாட்டாள்! தன் தமிழால் உங்களை நிச்சயம் குண‌ப்படுத்துவாள்!

    தலைப்பு மிக அருமை!

    ReplyDelete
  17. மா மா காயில் மயங்கும் மனதும்
    தேனாய் இனிக்கும் தெள்ளுதமிழ் பாடல்
    காணக் கிடைக்குமோ கனிபோல் இனிமை
    எல்லாம் உண்டேன் இதயம் மகிழ்ந்தேன் ..!

    அருமை அருமை பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்
    இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........