ஏர் பிடித்த கரங்களெல்லாம் தம்
இதயமதால் நன்றி சொல்லக்
காத்திருந்த தைப் பொங்கல்
கனிந்திங்கே வந்ததென்றால்
சொல்லவா வேண்டும் ?
உழவர்கள் மனம் போல
உள்ளும் புறமும் வெள்ளையடித்து
முற்றத்தில் கோலம் போட்டு
வெடி முழக்கத்தோடு
கதிரவன் எழும் முன் எழுந்து
தலை வாழை இலை போட்டு
நிறை குடமும் வைத்தங்கே
புதிய கரும்போடு பூ பழங்களும்
புத்தொளி வீசும் குத்துவிளக்கேற்றி
திக்கெட்டும் ஒளி பரப்பும் தெய்வத்தை வணங்கி
இல்லத் தலைவனும் தலைவியும்
புதுப் பானையை அடுப்பில் ஏற்றி
புது மஞ்சளைக் காப்பாய்க் கட்டி
புத்தரிசி இட்டு இனிய
பொங்கலது பொங்கி வரும் வேளையிலே
சுற்றம் சூழ நின்று
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் என்று
உள்ளத்தில் ஆனந்தம் பொங்க
கதிரவனுக்கும் பூமித் தாய்க்கும்
கால் நடைகளுக்கும்
கலப்பைகளுக்கும் கூட
நன்றி சொல்லும் பெருநாளாய்
உழவர்கள் திருநாளாய்
அன்று எங்கள் வாழ்வெல்லாம்
அலங்கரித்த தைப் பொங்கலது
இன்று எங்கள் வாழ்வினிலே
இல்லையடி தை மகளே!
குத்து விளக்குகள் சரிந்த பின்னால்
குல விளக்குகள் துலங்குவது எப்படி?
பொத்தி வைத்த துயரனைத்தையும்
பொங்கலாகப் பொங்கட்டுமா இங்கே?
அத்தி பூத்தது போல்
ஆனந்தம் சில நொடி தான்
பொத்தி வெடித்து உடலைப்
பிளந்த காட்சி நாம் மறப்பதெப்படி?
கொத்தி விறகாக்கி
வண்டில் கலப்பை எல்லாம்
எரித்த பின்னால்
கத்தி முனையில் நின்று கொண்டே நாம்
களிப்புடனே பொங்கல் பொங்குவது எப்படி?
அந்தக் கடந்த காலம் திரும்பி வருமா ?
நாம் பட்ட துன்பம் மறைந்திடுமா?
உடைந்த பானைகளும் கேட்கிறதே
உழவர்கள் படும் துயரைத் தீர்ப்பதாரு?
வருந்துகின்றோம் தை மகளே உன்னை
வணங்கக் கூட கைகளின்றி
உலகில் மக்கள் பசியைப் போக்கும்
உழவர்கள் எமக்கேன் இந்த நிலமை!
கன்று பசி கிடக்க
காய்ந்த மாடுகள் கண்ணீர் வடிக்க
பட்டி பெருகுவதெங்கே?
பால் பானைகள் தான்
பொங்குவதெங்கே ?
பச்சை அரிசி அதைப் பார்த்தே
பல காலங்கள் ஆகிப் போச்சே!
உத்தரத்தில் செருகி வைத்த கத்திகள்
ஒவ்வொன்றாக எரிஞ்சு போச்சே!
இனிச் சூடு மித்தித்த கால்கள் இங்கே
சுறணையற்றுக் கிடக்கும் போது
ஏரைப் பிடிப்பதாரு ?
எம் நிலத்தை உழுவதாரு ?
ஏனம்மா இப்படி ?
வற்றாத பொங்கலது
வழிந்தோடுது கண்களிலே இனிச்
செத்தாலும் மறக்க மாட்டோம் நாம்
சேமித்த துக்கம் அப்படி!
எமக்குப் பொற் காலம்
என்று வருமோ?
போ மகளே
மென்று துயர் கொன்று உடல் அதை
வென்று வரும் இவ் வேதனை
என்று தணியுமோ
நீ அன்று வருவாய்
இன்று எமக்கில்லைத்
தைப் பொங்கல்
சென்று வா தை மகளே!
மீண்டும் ஒரு நன் நாளுடன்.
குறிப்பு :சென்ற ஆண்டு தைப் பொங்கல் திரு நாளை ஒட்டி
கவிதை அரங்கு நிகழ்வுக்காக நான் எழுதிய கவிதை இதனைக்
கண்டு ரசித்த அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
உரித்தாகட்டும் !.....
கவி அரங்க சிறப்புக் கவிதை மிக மிக அருமை
ReplyDeleteபதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி ஐயா .இது சென்ற ஆண்டுக்கான கவியரங்கக் கவிதை இந்த ஆண்டுக்கான இனியன கூறும் கவிதை நாளை வெளியிடப்படும் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா .
Deletetha.ma 1
ReplyDeleteமிக்க நன்றி ரமணி ஐயா .
Deleteபொற்காலம் மீண்டும் விரைவில் வரத் தான் போகிறது பாருங்கள்.
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள் !
நிட்சயமாக வரும் தோழி .தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .
Deleteதங்களின் கவிதையைக் கண்டு நெஞ்சம் கனக்கின்றது. ஆயினும் -
ReplyDeleteகாலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்.
அந்த நாளும் வந்திட வேண்டும்!..
பாரம்பர்ய பண்பாட்டுப் பெருமைகளை மறவாதிருப்போம்!..
பொங்கலோ பொங்கல்!..
இனிமையான நற் கருத்து. உங்கள் அனைவரினது மனதையும்
Deleteமகிழ வைக்கும் பொங்கல் திரு நாள் கவிதை நாளை வெளியிடவுள்ளேன் இருப்பினும் தங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா !
எமக்குப் பொற் காலம்
ReplyDeleteஎன்று வருமோ ??????.............
சேமித்த துக்கம் மாறி பொற்காலம் பொங்கட்டும்..!
மிக்க நன்றி தோழி வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் .
Deleteதைமகளை எண்ணி தையல் நீ வடித்திட்ட
ReplyDeleteகவிதை விம்மி வெடிக்குதே நெஞ்சு
தங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.....! தோழி
உங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் தோழி .
Deleteமிக அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும்,உங்ககுடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழி இதே வாழ்த்துக்கள் தங்களுக்கும் உரித்தாகட்டும் .
Deleteபொற்காலம் விரைவில் வருமென நம்பிக்கையோடு இருப்போம் அம்மா...
ReplyDeleteதித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
இனிய நற் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா .
Deleteதங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !
தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteSUBBU THATHA
"பொத்தி வெடித்து உடலைப்
ReplyDeleteபிளந்த காட்சி நாம் மறப்பதெப்படி ?...." என
நீங்க கேட்டதை
நானோ இறுதிப் போரில்
முள்ளிவாய்க்காலில் கண்டேன்!
தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்
மிக்க நன்றி ஐயா வருகைக்கும் பொங்கல் திரு நாள் வாழ்த்திற்கும் !
Deleteஅழகான கவிதை
ReplyDeleteஇனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிக்கும் வாழ்த்திற்கும் .
Deleteஉங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
உங்கள் மனதின் பாரம் புரிகிறது வெகு விரைவில் விடியல் கிடைத்து பொங்கலோ பொங்கல் என்று மகிழத்தான் போகிறோம் கவலை வேண்டாம்.
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள், எனது வாழ்த்தை மருமகளுக்கும் சொல்லி விடுங்கள்....
மிக்க நன்றி சகோதரா நிட்சயம் சொல்லி விடுகின்றேன் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
Deleteவணக்கம் அம்மா
ReplyDeleteநம்பிக்கையோடு வாழ்க்கையின் நகர்வோடு ஓடிக் கொண்டிருப்போம். எதுவாகினும் எதிர்கொள்வோம்.
--------
தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..
மிக்க நன்றி சகோதரா மனம் கவர்ந்த பொங்கல் திரு நாள் வாழ்த்திற்கும் இனிய நற் கருத்திற்கும் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
Deleteஅகலாது ஆசனமிட்டு அமர்ந்துவிட்ட தாயக உணர்வு எங்களுக்கு!
ReplyDeleteசிறப்புப் பொங்கலிடச் செவ்வானச் சூரியன் வரவுக்காய் காத்திருப்போம்!
அருமையான கவிவரிகள்!
மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனித்திடும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் தோழி!
மிக்க நன்றி தோழி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDelete