1/20/2013

கண்ணைக் கட்டிக் காட்டுக்குள்ளே விட்டதாரோ!....



கண்ணைக் கட்டிக்
காட்டுக்குள்ளே விட்டதாரோ!
ஏழை இவள்  எண்ணங்களை
ஒன்னொன்னாகச் சுட்டதாரோ!

உன் பெயரைச் சொல்லும் போது
உள்ளம் அழுதே!- இந்த
உள்ளத்திலே உள்ளதெல்லாம்
ஊமை நெஞ்சைக் கொல்லுதே!

மண்ணுக்குள்ளே போகும் போதும்
உன்னை நினைப்பேன் என்றும்
தன்னந் தனிமையில் நின்று நானும்
வாழ்வை  வென்று காட்டுவேன்!

பெண்ணுக்குள்ள வீரம் அதை
என்னென்று நினைத்தாய்!
இந்தப் பூவுக்குள்ளும் சோகம்
அதை ஏனோ விதைத்தாய்?

அன்னமிட்ட கைகளுக்கு வந்த விலங்கு
இது உள்ளவரை உள்ளத்திலே ஏது சிரிப்பு?..
புன்னகையை உன்னுறவால் நானும் துறந்தேன்
இந்தப் புத்தி கெட்ட சீவனுக்குப்  போதும் இதுவே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/17/2013

உன் பெயரதை எழுதி வைத்தேன் ...


உன் பெயரதை எழுதி வைத்தேன்
எவரும் அறியாமல் நான்
உனக்காகக் காத்திருந்தேன்
எதுவும் புரியாமல்

விண் தாண்டிச் சென்றாயோ!
வெண்ணிலவாய்த் தேய்ந்தாயோ!
பெண்ணே உன் ஞாபகங்கள்
என் நெஞ்சைக் கொல்கிறதே!
                                           
ஊமத்தம் பூக்கள் என்னை
உரசித்தான் பார்க்கிறதே!
நீ தொட்ட மேனி தொட்டு
புது உறவொன்றைக் கேட்கிறதே!

யாருக்குப் புரியும் அம்மா என்
ஜாதகத்தில் உள்ளதெல்லாம்!
வேர் அற்ற மரம் போல்
நானும்தான் வாடுகின்றேன்

நீதிக்குப் பின் பாசம் என்றாய்
நீ இன்றி நானா சொல்லு?
என்னை சோதிக்கும் மலரே உன்றன்
வாசத்தை ஏன் விட்டு சென்றாய்!

சோகத்தில் தள்ளாடினேன்
என் சொந்தம் அது நீயல்லவோ
ஆனந்தக் கூத்தாடி வா அன்பே
ஆருயிர் போகும்  முன்பே!

விதியோடு போராடி
என்னைச் சேர வா ............
வெண்ணிலவே நீ இல்லாது
இந்த வானம் தாங்குமா?

விழி நீரால் கோலம் இங்கே
உனக்காக நான் போடுறேன்
எனக்காக யாரும் இன்றி
என் சீவன் வாடுதிங்கே.....

                                     ( உன் பெயரதை )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/13/2013

பொங்கலோ பொங்கல் !!.........


பக்திப் பரவசத்தோடு என்றும்
அன்பும் அறனும் கலந்து
இன்பம் என்ற சொல் அது எல்லோர்
இதயம் அதிலும் பொங்கட்டும் !

முத்திக் கனிந்த கனி போல் சுவை
முன்னேறும் வாழ்வில் நிலைத்திடவே
எத்திக்கிலும் இருந்து நன்மைகள்
இடர்கள் களைந்து  பொங்கட்டும்!

தத்தித் தவழ்ந்து தவழ்ந்து மனிதன்
தரையில் நடந்து திரிந்து இதுவரைப்
பட்ட  துயர் நீங்கிடவே  உலகில்
இனிதே பாலும் தேனும் பொங்கட்டும்!

சுற்றம் நன்மை பெற்றிடவும் ஏங்கும்
உயிர்கள் சுகமாய்  வாழ்ந்திடவும்
குற்றம் குறைகள் நீங்கி நல்ல
குதூகலமான நாட்கள் பொங்கட்டும்!

பெற்ற தாயைப் போலென்றும்
போற்றும் எம் தேசம் அதில் எந்நாளும்
சத்தம் சலனம்  இன்றி மிகு
சமத்துவம் பேணும் நிலை பொங்கட்டும்!

கற்றுக் கொடுத்த நன் நெறியில்
எம் காலம் முழுவதும் வாழ்ந்திடவே
ஒற்றுமை என்பது குறைவின்றி
ஒளிபோல் எங்கும் பொங்கட்டும்!


பொங்கும் செல்வம் பொங்கட்டும்!
புவிமேல் இன்பம்  பொங்கட்டும்!
எங்கும் மங்களம் பொங்கட்டும்!
எதிலும் கருணை பொங்கட்டும்!

வாழ்வில் சாந்தம் பொங்கட்டும்!
வளமார் வாழ்வு இனிக்கப் பொங்கட்டும்!
வேண்டும் சுகமது பொங்கட்டும்
விழிகளில் ஆனந்தம் பொங்கட்டும்!
தேனும் பாலும் கலந்து நல்ல 
இனிய பொங்கல் திருநாள் நல் 
வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே!!...

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

1/04/2013

என் தாய் பிறந்த நன்நாளிது !....


அன்பு செய்ய அன்னை வேண்டும்
எம்மை ஆதரிக்க அன்னை வேண்டும்
துன்பம் போக்க அன்னை வேண்டும்
மனம் தூய்மை பெறவும் அன்னை வேண்டும்!....

தன்னிறைவைக் கொடுப்பவள் தாய்
தரமாய் எம்மை வளர்ப்பவள் தாய்
இன்பம் தந்து மகிழ்பவள் தாய் அந்த
இறைவனையும் படைத்தவள் தாய் !...

கண்ணுறங்க நான் மறந்தேன் உன்னால் 
கனவினிலே தினம் மிதந்தேன் ...........
இன்னும் நூறு ஜென்மம் தொடரினும் 
உனக்கென நான் இங்கு காத்திருப்பேன்...

வெண்ணிலவை சாட்சி வைத்து
விடியும் அந்தப் பொழுதினிலே
உன்னருகில் நான் இருப்பேன்
என் உணர்வுகளை அன்று நீ அறிவாய் ......

நான் செய்ததொரு தவறும் இல்லை
இந்தச் சீரழிந்த உலகினிலே .............
மீண்டும் உன் மடியில் நான் உறங்க
வரம் ஒன்று தந்து இங்கே வாழ்த்து தாயே !!!!!....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.