11/28/2013

காலை இளந் தென்றற் காற்றே


காலை இளந் தென்றற் காற்றே
கண் சிமிட்டும் நேரம் இதோ!
பூவும் இலையும் தலையை ஆட்டப்
புன்னகை வருகிறதே!

சோலை வண்ணம் என் எண்ணம்
கூடும் நேரம் இந்நேரம்
மாமன் நெஞ்சில் மஞ்சம் போடும்
தோழி நான் தானே!

                                              ( காலை இளந் )

தாயைப் போன்ற உள்ளத்தில்
தாவிக் குதிக்கும் கிள்ளை நான்
காலம் எல்லாம் நம் சொந்தம்
காண வேண்டும் ஊர்கோலம் ..

ஆசை உள்ள நெஞ்சுக்குள்
ஆலவட்டம் நான்  போட
மீசை துடிப்பதேன் மச்சானே! - நீ
பேசும் வார்த்தைகள் நான் தானே?

                                                       
கூவும் குயிலும் மயிலும் எங்கே
நாம் கூட்டுச் சேர்ந்த பொழுதினிலே
ஆட்டம் பாட்டம் கும்மாளம் தான்
அடடா சிரித்திடும் வெண்மேகமே!

ஊரைக் கூட்டித் தாலி கட்டி
உறவை வளர்த்த மச்சானே
நீ நாரைப் போல சேர்ந்திருந்தால்
எந்நாளும் இங்கே கொண்டாட்டம்தான் ......

                                                      (  காலை இளந்)


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/24/2013

கார்த்திகை 27 கண்களில் ஒளிதீபம் ஏற்றுங்கள்


மறவர் புகழ் பெருமை காக்து
மண்ணில் புதைந்த வீரர்களே!
உறவு எங்கள் உறவு நீங்கள்
உயிரில் கலந்த தீபங்களே!

ஒளியைத் தந்து விழியைத் திறந்து
ஒதுங்கி நின்று காத்திடும்
மனதின் எண்ணம் மலருவது திண்ணம்
மறுமுறை பூப்பாய் கார்த்திகைப் பூக்களே!

அழுத விழிகள் சிரிக்கும் காலம்
அருகில் வந்து சேர்ந்திடும்!
அமுத மொழியில் உரைத்த சத்தியம்
அகிலம் முழு(வது)ம் பரவிடும்!

விதியின் பாதை சதியை விலக்கி
விடுதலைக்கு வித்திடும்!- இந்த
மொழியின் வலிமை உணரும் தருணம்
உனது கானம் ஒலித்திடும்!

எளிமையான வாழ்க்கைச் சூழல்
எம் இனத்தின் பலத்தைக் காத்திடும்!
என்றும் இல்லா ஆனந்தத்தில்
மனங்களிங்கே  திங்கள் போல சிரித்திடும்!

பொங்குதமிழ்க் குலத்தின் மரபே!
மாவீரத் திலகங்களே!
சங்கெடுத்து முழங்குகின்றோம்
உனது சத்தியம்தான் வெல்லுமிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/23/2013

அதர்மத்தின் துணைகொண்டு தர்மத்தை அழிப்பீரோ




அதர்மத்தின் உச்சியில் நின்று
ஆணவத்தினால் மதிகெட்டு
விட்டெறியும் வார்த்தை அம்புகளுக்கு
வானவில்லும் வீழ்ந்திடுமா சொல்?

மதிகெட்டவர்கள்
மனதில் உறுதியற்றவர்கள்
கொலைக் களத்தையே விரும்பும்
கொள்ளிவாய்ப்  பேய்கள்

நீதி  அறியாதவர்கள் பிறரது
நின்மதியை விரும்பாதவர்கள்
சாதிக்க நினைப்பவை யாவும்
சர்வ நாசமாகும்!

மோதிப்பார் உலகினிலே
மோகத்தில் தழைத்தவர்கள்
பாதிப்பேர் அழியக் கண்டு
பரிகசிக்கும்  நன் மனங்களும் இன்று!

நீதிக்கே தண்டணையா!
இதை நிலவுலகம் தாங்கிடுமா!
பாதிப்பு அறியா மனமே
உன் நினைப்பு நிறைவேறாதிங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/03/2013

வெற்றி வேலாயுதப் பெருமானே

வெற்றி வேலாயுதப் பெருமானே
வெற்றி கிட்டியதே உன்றன் அருளாலே
பற்றியதே பாசம் மலை போலே உயிர்
மெச்சிடுமே  கந்தன் உனைத்தானே .....

உற்ற துணை என வந்த பெருமானே
கொடும் சூரரை வதைத்த மயிலோனே
நற்றமிழைத் தந்த முருகா எம்மை
எந்நாளும் காத்திட இங்கு வருவாயே ....

முக்கனியில் சிறந்த கனியோனே உன்னை
முன் நிறுத்தி விரதம் இருந்தோமே
அற்புதங்கள் நிகழ்த்த வாருமையா
ஆறுபடை வீடு கொண்ட எம் பெருமானே ...

முக்தி தரும் ஞான மொழியோனே எங்கள்
முன் வினையை அகற்ற வருவாயே
பக்தி தரும் பார்வை உனதாகும்
பன்னிரு கரத்தான் நீயே  எமக்கு வரமாகும் ....

கந்தன் என வந்த எங்கள்
தண்டபாணித் தெய்வமே உன்றன்
கந்த சஷ்ட்டி கவசம் சொன்னால்
இன்பம் வந்து சேருமே ....

                             (  வெற்றி வேலாயுதப் பெருமானே )
                                                         



தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/01/2013

தீப ஒளியது அசைந்தாட



தீப ஒளியது அசைந்தாடத்
தீமைகள் எல்லாம் பறந்தோடத்
தெய்வீக ஞானத்தில் உள்ளங்கள் மகிழ்ந்தாடவே
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே

பாவத்தின் பங்கதை நீ நீக்கிட உலகில்
பாசத்தை எந்நாளும் உருவாக்கிட
எங்கள் தேசத்தின் நன்மைக்கும் வழி காட்டிட
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே

கோரப் பல் விழிப் பார்வை விலகட்டுமே உலகில்
கோடாடி கோடி நன்மைகள் பெருகட்டுமே  ..........
தூரத்தில் நீயிருக்கும் போதினிலும் இங்கும்
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே ......

ஊரோடு கூடி வந்தோம் காப்பெடுத்து
உயிர் ஊட்டத்தை நீயளிக்க வேண்டும் என்று
போராடும் எங்களுக்குச் சக்தி தந்து
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே .....

பூவோடு மஞ்சளிங்கே நிலைத்திடவும்
புரியாத புதிர் எல்லாம் விலகிடவும் 
பேசாத வார்த்தைக்கும் அர்த்தம் தந்து
தேவி உன் அருளாட்சியும்  நிலைக்கட்டுமே ...






தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.