4/30/2014

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக..


உழைக்கும் மக்கள் வாழ்வுயர
ஒன்று சேருவோம் நாங்கள்
ஒற்றுமையாய் நின்றுலகில்
வெற்றி காணுவோம் .....

அடுக்கடுக்காய் உயருகின்றான் அரசியல்வாதி
அடிமைப் பட்ட ஏழைகளின்  உழைப்பையே நம்பி
பிணத்து மேல நடந்ததெல்லாம் போதுமடா சாமி
பிஞ்சு மனம் கல்லுடைத்தால் கிளம்பிடுமே சுனாமி ...

மரத்துக்கும் மனிதனுக்கும் பேதமுண்டடா
மாசு பட்ட சிலருக்கு எல்லாம் ஒன்றடா....
இனத்துவேசம் காட்டிக் காட்டி வெட்டி எறிவார்
ஈன்றெடுத்த தாய் மண்ணைத் தட்டிப் பறிப்பார்  ....

நடத்தை கெட்ட நாய்களுக்குப் புத்தியும் இல்லை
நம்பி நம்பி வாழ்வோர்க்குச் சக்தியும் இல்லை
குடத்துக்குள் எரியுதடா குத்து விளக்கு
கோவப் பட்டால் வந்திடுமே அந்த வழக்கு ...

படிச்சவனும் ஏமாந்து பல்ல இழிக்கின்றான்
பழக்க தோஷம் மாறாமல் கொல்ல நினைக்கின்றான் !
இனத்துக்குள் பாவப் பட்ட எம்மினத்தைப் பாரு
இரக்கமுண்டெல் எம்முடனே நீயும் வந்து செரு ....

தொழிலாளர் ஒற்றுமை தான் ஓங்கிட வேண்டும் 
தோல்விகளைத் தகர்த்தெறிந்து உயர்ந்திட வேண்டும் 
அநியாயம் செய்வோரை எதிர்த்திட வேண்டும் 
ஆண்டாண்டு காலமாக நலன் பெற வேண்டும் ....


                                                             
                                                
                                            கலியுகத்தில் இதுவும் கடந்து போகும்....

(படங்கள் :இணையத்தில் பெற்றுக் கொண்டது .நன்றி )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/21/2014

சிவன் இன்றிச் சீவன் ஏது ...

                                 

துன்பம் வரும் போதினிலும் சிவன் நாமம்
துவண்டு விழும் போதினிலும் சிவன் நாமம்
இன்பம் வரும் போதினிலும் சிவன் நாமாம்
ஈற்றில் செல்வம் வரும் போதும் சிவன் நாமம்

சிந்தையிலே சிவன் இருக்கப் பயமேது ?...
சீற்றம் கொள்ளும் நாகம் முன்னும் கிடையாது !!
எந்தன் உயிர் என்னிடத்தில் இல்லையடி
ஏழ்பிறப்பும் வேண்டும் இந்தத் தொல்லையடி

அம்மையப்பன் பதம் பற்றி வாழ்ந்திடவே
ஆகுதியாய் இவ்வுடலை நான் துறப்பேன்
செம்மையான நினைப்பிது தான் மாறாது
சிவன் அருளைப் பெறும் வரைக்கும் ஓயாது ...

ஒளவையைப் போல் மன உறுதி வேண்டுமிங்கே
அடைக்கலமாய் அவனருளை நாம் பெறவே
சிந்தையிலே நாண் ஏற்றி எக்கணமும்
சீர் பெற்றார் அறுபத்தி மூவரும் தான் !!

விந்தையான அவன் நாமம் சொல்லச் சொல்ல
விரும்பிய நற் பொருள் கூடும்  மெல்ல மெல்ல
இந்த சுகம் இன்ப சுகம் இணையே அற்ற
ஈசனருள் பெற்றவர்க்கும் அடிமை நானே....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/18/2014

காக்கா காக்கா கீக்கீ கீக்கீ கூக்கூ கூக்கூ.....




காக்கா காக்கா
கீக்கீ கீக்கீ
கூக்கூ கூக்கூ
கேக்கே கேக்கே
எங்கே ...அந்த சத்தங்கள்?
இனிதாய்த் தொடரும் முத்தங்கள்
எங்கே அந்த சத்தங்கள்?
இனிதாய்த் தொடரும் முத்தங்கள்

                                       (காக்கா காக்கா..)

வண்ணம் கொஞ்சும் தாய் நாடே
வணக்கம் என்றன் தாய் நாடே
தன்னந் தனிமை ஆனோமே
தாயைப் பிரிந்து போனோமே...

உன்னைப் போலொரு அழகிய நாடு
உலகில் இல்லையடி!
கண்ணைத் திறந்தால் மூடும் வரைக்கும்
காதல் தொல்லையடி!

தென்னை பனையை மறப்பேனா?
சுகம் தேடும் வயல்வெளி மறப்பேனோ?
கொல்லைப் புறத்தை மறப்பேனோ- நான்
கோயில்  குளங்களை  மறப்பேனோ?

                                                           (காக்கா காக்கா..)

வண்ணத் தாமரை மலர்கள் பூக்கும்
வசந்தம் நிறைந்த பொன்னாடே
எண்ணம் முழுதும்  நீதானே அட
ஏற்றம் மிகுந்த தாய் நாடே .....

கண்களிரண்டும் தூங்காதே
காதல் கீதம் ஓயாதே...
உன்றன் மடி தான் சொர்க்கமடி -இங்கு
ஏழையானோம் எம் தாயே ....

கிட்டிப் புல்லு அடித்து நானும்
கீழே விழுந்தேன் வலிக்கலியே....
எட்டிப் போன நாள் முதலாய்
எந்தன் நினைவுகள் உறங்கலியே

கட்டில் மெத்தை சுடுகுதடி
களத்து மேட்டை மறவேனே
தொட்டில் பழக்கம் சுடு காடு வரையாம்
சொன்னார் அது தான் உண்மையடி

எங்கே அந்த சத்தங்கள்
இனிதாய்த் தொடரும் முத்தங்கள் ......

                                                    (    காக்கா காக்கா)

  படம் :கூகிளில் பெற்றுக்கொண்டது .நன்றி                                                  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/16/2014

காலம் போகும் போக்கில் தானே மனிதன் போகிறான்



காலம் போகும் போக்கில் தானே
மனிதன் போகிறான்
அவன் போகும் போது செய்யும் செயலை
அவனா செய்கிறான் ?..........

ஆட்டிப் படைக்க ஒருவன் உள்ளான்
அதை நாம் அறியணும்
அந்த ஒருவன் செய்யும் செயலை நினைத்தே
புருவம் உயத்தணும் ........

கருவம் கொண்டு நான் நான் என்றவர்
கண்ணை இழந்தவரே
மனக் கண்ணை இழந்த மனிதர் மட்டுமே
கடவுளை மறந்தனரே ...

உடலும் உயிரும் அவன்பால் இருக்க
ஊளையிடலாமா ?.....
ஊனுடலை மத்தித்துக்
கடலைத் தாண்ட  காலம் வகுத்தவரே ..

கடலும் வானும் காணும் யாவும்
கடவுள் படைத்தது அந்தக்
கடவுள் இல்லை இல்லை என்றவர்
கதையை யார் தான் முடித்தது ?...

உருளும் உலகின் தத்துவத்தை
உணர்வாய் இந்நாளில் அதை
உணர மறந்து உடலை வதைத்து
உயிரைக் குடிப்பவரே .......

ஆடும் ஆட்டம் அடங்கும் ஒரு நாள்
ஆட்டிவிப்பவனால் அந்த
ஆட்டம் நின்றால் கூட்டம் மறையும்
அதையும் உணர்வாயே ...

நோட்டுக் கட்டின் தைரியத்தால் மனம்
நோக நடப்பவரே
உடல் நொந்து வெந்து போகும் போது
சிந்தை செய்பவரே .....

பாட்டுக்காக எழுதும் தத்துவம்
என்றே கொள்ளாதீர் எங்கள்
பாட்டன் பாட்டி முப்பாட்டன் தொழுத கடவுளை
முந்திச் செல்லாதீர்........

                                            (     காலம் போகும் போக்கில்)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/12/2014

எரிமலை இங்கே குமுறுதடா



எரிமலை இங்கே குமுறுதடா..
எங்கள் இதயமும் அதிலே கருகுதடா...
உரிமைகள் இழந்த பறவைகள் எம்முன்
உலகமும் ஊமை யானதடா .....

கொடியவர் ஆட்சியில் மனம் மகிழ்ந்து
சதி கூட்டணி அமைத்துத் திரியுதடா ...
வறியவர் வாழ்வதை நினைத்தவர் யாரோ..
வறுமையின் பிடியினுள் நாடும்  போகுதடா ..

பனிமலை இங்கே உருகிட வேண்டும்
பகைவரின் உடல் அதில் மிதந்திட வேண்டும்
இயமனும் இங்கே மகிழ்ந்திட வேண்டும் எம்
இதயமும் அதனால் உயிர் பெற வேண்டும் ...

தமிழரின் தாகம் அடங்கிடுமா  சொல் ?...
தாயகம் மீட்க்காமல் உறங்கிடுமா  சொல்?..
நரிகளை வெல்லும் காலம் வரும்
நன்மைகள் கூடும் நேரம் வரும் ...

சிறகுகள் இழந்த பறவைகளே எம்
சிந்தையில் நின்றாடும் உறவுகளே
தினசரி இறந்து பிறவாதீர் -எந்தத்
திசையிலும் தனிமையில் செல்லாதீர் ...

கழுகுகள் சுற்றிடும் தீவு இங்கு
கருணைக்கு என்றும்  இடம் கிடையாது
வருவது வரட்டும் என நினையாதே
வருந்திடும் எங்கள் உறவுகளே .......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/11/2014

அன்னை பூமியே எம் ஆருயிரே



பட்டுப் போன மேனியும்
பழுதடைந்த கண்களும்
வட்டமிட்டு நெஞ்சுக்குள்
வலி உணர்த்திச் செல்லுதே!

கட்டித் தங்கம் உன் மடியில்
கவலை தீர நாம் உறங்கும்
எட்டிப் போன காலங்களை
எளிதில் மறக்க முடியாதே !

ஈழத் தாயே உனக்காக
ஈசன் திருவடி தொழுகின்றோம்!
பாழாய்ப் போன உனதழகைப்
பழுது பார்க்கச் சொல்கின்றோம்!

வீர மறவர் வாழ்வனைத்தும்
வீழ்ச்சி கண்டு போனாலும்
ஈரம் என்றும் காயாது எம்மை
ஈன்றெடுத்த தாய் நாடே!

கோரப் பல்லும் சடை முடியும்
கொல்லும் மாமிச வெறியர்களைக்
காலம் வெல்லும் வெல்லும் வரைக்
காத்திருப்போம் உனக்காக!

நீரும் நெருப்பும் சாட்சி சொல்ல
நீதி தேவதை அவளருளாலே
பாரம் குறையும் குறையும் அந்நாள்
பறந்து வருவோம் உன் மடி தேடி ...

ஏழைக் கவிஞரும் பாவலரும்
என் தாய் அழகைத் தான் ரசிப்பார்!
பாழும் மனத்தில் எந்நாளும்
பாசம் ஒன்றைத் தான் நினைப்பர்!

வாழ வைக்கும் காலம் வரும்
வாடி நிற்கும் என் தாயே!
ஆழப் பதிந்த உணர்வுகளால்
அழுத்திச் சொல்வோம் இதைத் தானே!                                             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/09/2014

வார்த்தைக் கடலில் தத்தளிக்கிறேன்


வார்த்தைக் கடலில் தத்தளிக்கிறேன்
வானவில்லைப் போல் முக்குளிக்கிறேன்
மூச்சும் பேச்சும் தளர்ந்து போனதே -விழி
மூடும் எண்ணம் இன்னும் இல்லையே .....

அன்பே அன்பே உன்றன்  ஞபகம்
என்னைக் கொல்லுதடி!
அதை நான் சொல்ல வரும்போதெல்லாம்
அழுகை வருகுதடி!

பெண்ணே பெண்ணே பேசாயோ?
உயிர் மூச்சே நீயும் பேசாயோ?
கண்ணே கண்ணே பேசாயோ?
என் கனவே நினைவே பேசாயோ?

தன்னந் தனிமையில் வாடும் என்னைத்
தரையும் ஏற்க மறுக்குதடி
கண்ணில் இருந்து வடியும் நீரால்
கடலும் இங்கே பெருகுதடி ..

உருகும் இதயம் உன் பெயர் சொல்லி
ஊனுடலை இங்கே வதைக்குதடி
வருடும் காற்றும் வசந்தம் இழந்து
வாழ்வில் தீயை மூட்டுதடி ...

இன்பக் கனவே இனிய நினைவே
என்னைத் தேடி வருவாயோ?
துன்பக் கடலை நான் தாண்டிடவே
துடுப்பாய் இங்கு  வருவாயோ?

முள்ளில் ஆடும் பறவை என்றன்
மூச்சுக் காற்றே நீ வர வேண்டும்
உயிரில் எழுதிய வரியே என்றன்
உணர்வே நீ  வர வேண்டும் ...

வர வேண்டும் வர வேண்டும்
விழி வாசல் தேடி வர வேண்டும்
தர வேண்டும் தர வேண்டும்
என் உயிரை என்னிடம் தர வேண்டும் ...

நீயில்லாமல் நானா சொல்லடி என்
நெஞ்சைத் திருடிய பைங்கிளி ?
ஓ ..ஓ ..பெண்ணே என் கண்ணே
உயிர் மூச்சே இங்கு நீதானடி ...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/04/2014

அட்சய பாத்திரம் கையிலேந்தி


அட்சய பாத்திரம் கையிலேந்தி
அடைக்கலமானோம்  உன்னிடத்தில்
இச்சையைக் களையும் பெருமானே
ஈஸ்வரனே அருள்வாயே ....

பட்டினிச் சாவை எட்டிடும் தீவில்
பகலைக் காண முடியாதா ?....
ஓர் உத்தமி இங்கே அழுகின்றாள்
அந்த உயிர்களைக் காக்க முடியாதா ?....

சிவனே சிவனே சிவனே என்று
சிந்தை மயங்கி நின்றோமே
உலகைக் காக்கும் இறைவா உனக்கும்
இந்த உண்மை ஒரு நாள் புரியாதா ..

கர்வம் கொண்ட அரக்கர்கள் முன்
கண்ணீர்ப் பூக்களைச் சொரிகின்றோம்
இதயம் இதயம் கருகையிலும்
இறைவா இறைவா என்கின்றோம் ..

மலரும் நினைவுகள் அழிகிறதே அங்கு
மர்மக் கொலைகளும் தொடர்கிறதே
உயிரைக் கையில் ஏந்தும் எங்கள்
உணர்வே செத்துப் போகிறதே ..

குட்டித் தீவில் செந்நீர் ஆறு
குமுறிக் குமுறி ஓடுவதா !.......
எட்டுத் திக்கிலும் சாபம் வந்து
எங்கள் உயிர்களை  வாட்டுவதா ....

மங்கள நாணை ஏற்றி விடு
மனமது மகிழ வாழ்த்தி விடு
திங்களை அங்கே திகழ விடு
தீவினை அகற்றி வாழ விடு ....

                                     (      அட்சய பாத்திரம்)

(படம் .கூகிளில் பெற்றது :நன்றி )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.