11/26/2014

கனவு சிதைந்ததா?... காற்றில் பறந்ததா? ....





கனவு சிதைந்ததா?...
காற்றில் பறந்ததா? ....
கணித மேதையே சொல்லடா -உன்றன்
கணக்குத் தப்பெனக் கொள்ளடா ...

விழியில் ஈரம் காய்ந்து போகுமா? -எங்கள்
விடுதலை தாகம் ஓய்ந்து போகுமா ?...
இடிந்து போனது போதுமடா ..
இருகரம் கூப்பினோம் வாருமடா...

 மரணத்தை நேசிக்கும் மாவீரர்  உள்ளத்தில்
மாபெரும் இலட்சியம் உள்ளதடா அந்த
இலட்சியம் வென்றிட  எமக்கும்  தான்
இங்கொரு இடை வெளி தேவையடா ...

பறவைக்கும் சொந்தமாய்க்  கூடுண்டு
அன்பைப் பகிர்ந்திட என்றுமே தாயுண்டு
எமக்கிங்கே உலகினில்  என்னவுண்டு ?...அட
எறிகணை தரும் வலி தான் உண்டு ....

எதிரியின் கனவுகள் சிதைந்திட வேண்டும்
எமதுயிர்க் கொடி மண்ணில் பறந்திட வேண்டும்
இலட்சிய வேங்கைகள் சிரித்திட வேண்டும்
ஈழத்தாய் மடியினில் தூங்கிட  வேண்டும்

அகதியின் வலி இது புரிகிறதா ?.....
உயிர் ஆகுதியாவது தெரிகிறதா?..

எடு எடு தொடு தொடு கணைகளை விடு விடு
என மனம்  இங்கு வலிக்குதடா ...
அந்த வலி தரும் ஓசையில் எதிரியின் ஆசைகள்
நிட்சயம் ஒரு நாள் வீழுமடா ....

பனி மலை உருகிடும் வேகம்
அதை விடப் பெரியது எம் தாகம்
விரைவினில் ஈழத்தை வெல்லும்
அந்த விடுதலை தாகத்தைக் கொல்லும்

                                                                (     கனவு சிதைந்ததா?...)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/10/2014

சாவு மலியும் தேசத்தில் இருந்து ஓர் அழுகுரல் ! கேட்கிறதா ?



உயிரைக் கொல்லும் நோய் பெருகி
உணர்வைத் தின்னப் பார்க்குதடா!
துயிலும் இல்லம் பலரையும் இங்கே
துரத்திப் பிடித்து மடக்குதடா !

வழமை நிலைமை மாறும் போதும்
வாழ்வில் அச்சம் மூளுதடா!
களவும் பொய்யும் சுயநலத்தால்
கட கட கடவென வளருதடா !

மலையைப் போல சுமை தாங்கி
மனதும் மரத்துப் போனதடா!
அலையும் புத்தி ஞாபகத்தை
அறவே இழந்து வாடுதடா!

இயற்கை அளித்த கொடையெங்கே!
இதயம் கேள்வி கேட்குதடா !
திரும்பிப் பார்த்தால் எம் வாழ்க்கை
திருட்டுப் போனது புரியுதடா!

பயிலும் கல்வி அறிவெல்லாம்
பகட்டாய் எண்ணத் தோன்றுதடா !
கணக்கில் புலியாய் இருந்தமனம் இன்று
கணணியை நம்பி வாழுதடா !

செயற்கை செய்த சாதனை எதுவோ அதைத்தான்
செத்தவர் பட்டியல் காட்டுதடா !
இயற்கையைப்  பேணும் நல்லெண்ணம் இனி
இருந்தால் மட்டுமே உலகம் உய்யுமடா !


இயற்கை என்பது இறைவன் கொடுத்த 
வரம் !
செயற்கை என்பது மனிதன் தேடிக் கொண்ட 
சாபம்! 
வரமா சாபமா வாழ்விற்குகந்தது ?...
சிந்திப்போம் !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11/04/2014

முன் நின்று காப்பவனே !



மனமென்னும் மாளிகையில் மரத்துக் கிடக்கும்
மனிதநேயம் இப்போதே விழிக்க வேண்டும் !
இனபேதம் மதபேதம் பார்த்தே நாளும்
இன்னலுறும் நிலையிங்கே மறைய  வேண்டும் !

தினந்தோறும் நற்கருமம் நிகழ வாழ்வில்
தீமைகளை இவ்வுலகம் எதிர்க்க  வேண்டும் !
வனவிலங்கு போல்வாழும் வாழ்வின் கொடுமை
வருங்கால சந்ததிக்கும் புரிய வேண்டும் !

வருவாயைக் காரணமாய் வாழ்வில் கொண்டு
வகுத்த நீதி  அத்தனையும் முடங்க வேண்டும் !
பெரும் சேதம் விளைவிக்கும் துர்புத்தி
பெருமான உனதருளால் ஒழிய வேண்டும் !

அரும்பாடு பட்டு உய்யும் எங்கள் வாழ்வு
அன்பாலே எந்நாளும் தழைக்க வேண்டும் !
விரும்பாத எச்செயலும்  தீண்டா வண்ணம்
விடையேறி வந்தெம்மைக் காக்க வேண்டும் !

பிடிவாத குணம் மண்ணில் மறைய வேண்டும்
பிறர் வாழ வாழ்த்தும் எண்ணம் நிறைய வேண்டும் !
அடியோடு வெறுப்புணர்வு அகல வேண்டும்
அழகான சிந்தனைகள் பெருக வேண்டும் !

இளகாத மனமெங்கும்  இளக வேண்டும்
இரக்க குணம் அனைவருள்ளும் சிறக்க வேண்டும் !
தளராத நம்பிக்கையைத் தந்தருள வா
தர்மத்தின் திருவுருவே தரணி தனிலே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.