8/30/2014

கவிதைப் போட்டி -2014 (2வது பட இணைப்புக்கான கவிதை )


                                                             (  பட இணைப்பு -2)

                                                    தீயே.. தீயே.. தீர்ந்துவிடாதே!      

தீயே ..தீயே.. தீர்ந்துவிடாதே! சில
தியாகம் இன்னும் இருக்கிறதே!
உடல் எரியும் உள்ளம் எரியாது
உணர்வுகளைக் கொல்ல முடியாது!

மனிதனை மனிதன் மறக்கிற பொழுதினில்
மரணமும் இனிக்குமடா! -ஒரு
புனிதனை உயர்வாய் நினைக்கிற பொழுதுதான்
பூக்களும் சிரிக்குமடா!

எரிமலை எங்களைத் தாக்கிடும் பொழுதினில்
எதிரிக்கு மகிழ்ச்சியடா!
நாம்  உன் எதிரியு மில்லை
நண்பனு மில்லை ஏனிந்த சூழ்ச்சியடா?

கொடுமைகள் கண்டு கொதிப்பவன் அவனே
கோடியில் ஒருத்தனடா!
எம்  கோபமும் தாபமும் நியாயமே இங்கு
ஏன் இந்த வருத்தமடா?

சிலைகளை உடைத்து எறிகிற பொழுதிலும்
சிந்தையில் வலிக்குமடா! நீ எங்கள்
சீவனை வதைத்துப் போகிற பொழுதிலா
சிரிப்பொலி கேட்குமடா!

விடுதலை தாகம் எம துயிர் தேகம்
வீணரே அறிவீரோ! எங்கள்
விரல்களை வெட்டி எறிவதால் மட்டுமே
வெற்றியைக் காண்பீரோ?

                                                             (  தீயே ..தீயே. தீர்ந்து விடாதே !)

                                                 
  
தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர்  ரூபன் ,யாழ்பாவாணன் 
ஐயா இணைந்து   நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் 
போட்டி 2014 க்குரிய கவிதை இது .பங்குபெறும் அனைவருக்கும் என் 
                                               இனிய நல் வாழ்த்துக்கள்                                                   
                             http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/29/2014

கவிதைப் போட்டி -2014 (அம்பாளடியாளின் கவிதைகள் )

                                                       (  பட இணைப்பு -1)


தீபாவளித் திருநாளை முன்னிட்டு சகோதரர் ரூபன் மற்றும் யாழ்ப்பாவாணன் ஐயா இணைத்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி -2014க்குரிய கவிதை இதோ ...


                               திருடா திருடா    

தேன் சுரக்கும் பார்வை என்றன்  பார்வையோ!
தீந்தமிழில் நீ வடிக்கும் கோர்வையோ?
வான் பரப்பில் வந்து போகும் தென்றலே
வர்ண ஜாலம் காட்டு என்றன்  முன்றலில்

மான்  விழியின்  ஒளிநுதல் நீயல்லவா?
மறைந் திருந்து பார்பதிலே வல்லவா !
நான்  விரும்பும் ஓவியமே என் மன்னவா இங்கு
நோன்பிருந்து பார்த்த கதை சொல்லவா ?

பால் மணக்கும் பாவை இவள்  முகத்திலே
பார்த்ததெல்லாம் நிறைந்திருக்கும் உன் அகத்திலே
கால் முளைத்து கை முளைத்து கற்பனை
கனவு காண வைத்ததுவா என் அப்பனை?

வேல் முருகன் மால் மருகன் நீயடா!  உனக்கு
வள்ளி என்றும் வாழ் நாளில் நான்தானடா!
தோல் சிவக்கும் முன்னாடி வந்திங்கே உன்றன்
தோல்வி தனை ஒப்புக்கொள்ளத்  தென்பெங்கே?

திண்ணையிலே காத்திருக்கும் எழில் ஓவியமே! எனைத்
தெம்மாங்குப்   பாட வைக்கும்  காவியமே !
வெண்ணையினைத் தான் திருடிச் செல்ல வந்தேன் உன்றன்
விழியொளியில் அகப்பட்டேன் திருடன் ஆனேன்!

கண்ணெதிரே  காண்பதெல்லாம் கனவா!  நினைவா !நீ
கண்டாங்கிச் சேலை கட்டிய மலரா! நிலவா!
பெண்ணழகை பேரழகை என்ன சொல்வேன்! -இன்னும்
பெருமைகொள்ள வைக்குதடி என்றன்  உயிரே !

                                                                                                                
இப் போட்டியை நிகழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கும் இப் போட்டியில் பங்கு பெறும் அனைத்து சொந்தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் !

                                      வாழ்க தமிழ் !வளர்க நின் பணி !
                      http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/26/2014

அருளும் நீயே பொருளும் நீயே






அருளும் நீயே பொருளும் நீயே
        ஆதி அந்தம் அனைத்தும் நீயே !
வெருளும் மனத்தின் சக்தி  நீயே
   வேண்டும் வரத்தை அளிக்கும் தாயே!
உருளும்   உலகில் உனையே நினைத்தேன்
    ஊனுட லிலும் அதையே தரித்தேன்
இருளைப் போக்க  வருவாய் தாயே
    என்றும் நல்லருள் தருவாய் தாயே ...

துணிவைத்    தந்து காக்கும் சக்தியே 
   துணையாய் என்றும் விளங்கும் சக்தியே 
பணிவை  எம்முள் வளர்க்கும் சக்தியே 
   பாசம்   நிறைய வைத்த சக்தியே 
அணியும் உடையும் நீதானே என்றும்
   அன்பாய் மானம் காப்பவளே! துயர்
தணியும் வரையும் வந்த ருள்வாய்
     தூய  சக்தியே துணை நீயே !

முக்கனிச் சாற்றை ஏந்தி வந்தோம்
    மூத்தவள் உனக்கே படைத்து நின்றோம்
எக்கனிச் சாற்றையும் மிஞ்சிடும் சுவையே
    ஏழை எம் மனத்தினில்  குடிபுகுவாய்
துக்கனி வாரணி நீயம்மா எமக்கு !
    தோணியும் ஏணியும் நீயம்மா !
பக்க விளைவினைத் தடுத்தருள்வாய் -செல்லும்
    பாதையில் ஒளியாய் நின்றருள்வாய்

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தியே
   உயிர் களைக்காக்கும் மகாசக்தியே
நாம் சக்தி  பெற்றிட வந்தருள்வாய்
   நல்லதைக் கெட்டதைச் சொல்லிடுவாய்
காம்புகள் பூக்களைத் தாங்கிடலாம்
   கதிரவன் துணையென நின்றிடலாம்
வேம்புகள் நச்சினைப் போக்கிடலாம்
    வேதமே உனையிவை வென்றிடுமோ !
 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/23/2014

பேராசை துறத்தலே மிக நன்று !



நல்ல நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும்!
நாள் முழுதும் இன்பமாக வாழ வேண்டும்!
அல்லல்களைப் போக்கும்  சக்தி எம்மிடத்திலே
அடங்கி ஒடுங்கிக் கிடப்பதையே  உணர வேண்டும்!

வில்லங்கத்தை எவருமிங்கே விலக்க வேண்டும்
வீதியிலே இறங்கும் போதும் அமைதி வேண்டும்!
மெல்ல மெல்லத்தான் வாழ்வில் உயர வேண்டும்!
மேதினியில் புகழ் நிலைக்க உழைக்க வேண்டும்!

பொய்யாலே கோட்டை கட்டியவர் வாழ்ந்ததுமில்லை!
போதுமென்ற மனம் படைத்தவர் தாழ்ந்ததுமில்லை !
மெய்யாலே  மேன்மை குன்றிப் போனதுமில்லை!
மிருதுவான நற்குண மிருந்தால் தொல்லையுமில்லை !

கொய்யாதே பிறர்    வாழ்வு கூந்தலுமில்லை!
கோவத்தால் ஆனதிங்கே    ஒன்றுமேயில்லை !
தொய்யாத பண்புள்ளவர் தோத்ததுமில்லை!
தோல்வி என்ற வாசகத்தைப் பார்த்ததுமில்லை !

எண்ணாதே எவருமிங்கே சளைத்தவரில்லை!
இறுமாப்பு உடையவர்கள் பிழைத்ததுமில்லை !
மண்ணாசை பெண்ணாசை தந்த பெரும் தொல்லை
மானத்தை எந்நாளும் விட்டு வைத்ததேயில்லை !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/22/2014

வெண்கொற்றக் குடையின் கீழே



வெண்கொற்றக் குடையின் கீழே
    வீற்றி  ருக்கும் பெருமானே
பெண்பட்ட பாட்டை அறிந்தும்
    பேசா திங்கே இருப்பாயோ !
புண்பட்ட மனத்தின் வலியைப்
     புறம் தள்ளி வணங்குகின்றோம் 
கண்பட்டுப் போன குடியைக்
     காத்தருள வர வேண்டும்...

மான் என்றே துரத்திப் பிடிப்பார்
  மயில் என்றே ஆட்டிவிப்பார் !
ஏன் என்று வினவா திருந்தால் 
  எந் நாளும் துயரைக் கொடுப்பார் !
நான் என்ற அகந்தை யுடையோர் 
  நலன் குன்றிப் போக அருள்வீர்
வான் சிந்தும் மழையின் ஆற்றல்
  வற்றாது காக்கும் இறைவா !..

பெண்ணுக்குச் சம உரிமைதனை 
  போற்றும்  வகையில் தந்தவனே!
விண்ணுக்கும் வேந்தே ஒளியே
  வெண்தாமரை மலரே கனியே !
மண்ணுக்குள் விழைந்த பொருளே
   மாவிளக்கே எங்கள் தோரணமே
கண்ணுக்குள் எம்மை வைத்துக்
  காத்தருள    வர வேண்டும் !..........

                                           
   
 


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/20/2014

தூது வரும் வேளையிலா துவண்டு கிடப்போம்



தூது வரும் வேளையிலா துவண்டு கிடப்போம்
 துய்ய நின் பாதத்தைத் தொழுது ஜெயிப்போம் !
சூது  கவ்வும் இடத்திலெல்லாம் தோன்றும் சக்தியே
  சித்த மெல்லாம் உன் நாமம் பத்தி எரிகவே !
சாது எங்கள்  மனத்தினிலே வீரம் பொங்கவே
  சக்தி கொடு எந்நாளும்  வெற்றி கிட்டவே!
காது குளிர அழைக்கின்றோம்  தேவி துர்க்கையே
   கருணையோடு களமிறங்கி காத்தருள்கவே !

பஞ்சமியில் படை திரட்டி வந்த துஷ்டரை
    பரலோகம் அனுப்ப வல்ல சக்தி நீயடி !
தஞ்சமென்று நின் பாதம் தொழுது நிற்கின்றோம்
    தாயே          வா தர்மத்தைக் காத்து அருளிட !
வஞ்சகரால் வந்த துயர் நெஞ்சைக் கொல்லாமல்
   வாழ்   வெல்லாம் ரணமாகி வருந்திப் பிழைக்காமல்
பஞ்சமா பாதகத்தை அழித்து ஒழிக்க வா .....
    பார் போற்றும் சக்தியே நின் பாதம் பணிகிறோம் ..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/13/2014

இரங்கல் பாவைக் கேட்டுக் கேட்டு


இரங்கல் பாவைக் கேட்டுக் கேட்டு
இதயம் இங்கே வலிக்குதடா ........
உரங்கள் மேலும் போட்டுப் போட்டு விதியும்
உரசிப் பார்த்து மகுழுதடா ...

வரங்கள் அருளும் சாமிக்கும் தான்
வாழ்க்கை இங்கே கசக்குதடா ....
சுரங்கள் தப்பிப் போன கீதமே எம்
சொந்த மண்ணில் ஒலிக்குதடா  .....

நிலை(மை) மாறும் மாறும் மாறும் என்ற
நினைப்பும் செத்துப் போனதடா......
தலை தாழும் நிலையில் வாழும் ஆசைகள்
தானாய் ஓடி மறையுதடா .....

தமிழா தமிழா தமிழா எங்கள்
தாயின் மடியைப் பார்த்தாயா !!..
ஒருதாய் பெற்ற பிள்ளைகள் எங்கள்
உணர்வை ஒன்று சேர்ப்பாயா ...???

மரங்கள் பேசி மகிழும் மண்ணின்
மகிமை உணர்த்த உறவுகள் நாம்
தரங்கள் பார்த்துப் பிரியும் போது
தாக்கம் இனியும் பெருகுமடா .......

அடிமை விலங்கை உடைத்தெறியும்
ஆயுதம் என்றுமே ஒற்றுமை தான்
விடை நீ கூறு எம் விழியைப் பாரு
வீதியில் போகட்டும் வேற்றுமை தான் ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/09/2014

அழுகிற குழந்தையின் குரலொலி கேட்டு



அழுகிற குழந்தையின் குரலொலி கேட்டு
அம்மா துடிக்கின்றாள்
அவள் அடி மடி மீது கையை வைத்தவன்
இடியாய் இடிக்கின்றான்

கொலைவெறி கொண்ட நாகமும் நரியும்
கூட்டாய்ச் சதி செய்ய
எதிரியின் கைகளில் மலர்களைத் தந்து
எங்கே நான் செல்ல ?......

விடியலைத் தேடும் பறவைகள் இவர்களின்
முடிவை யார் அறிவார் ?..!!
கருணையின் கடலே கற்பகத் தீவே
காப்பாய் மிக நன்றே .....

பொழுதுகள் புலருது பூக்களும் கருகுது
பூமியில் தினந்தோறும்
அழுபவர் குரல்களை நசுக்கிடும் கொடியவர்
அழிவுற வழி செய்வாய் ....

தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தாளமும் தப்பாமல்
எடு எடு வேலைத் தொடு தொடு நாளும்
எதிரியின் பலம் குன்ற ...

சூரனை வதைத்த நாயகனே
சுப்ரமண்ணிய பாலகனே
பூரண நிலவே பொற்குடமே
புதுயுகம் அமைத்துத் தந்திட வா ....


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8/01/2014

மரண ஓலம் கேட்கிறதே


மரண ஓலம் கேட்கிறதே எங்கள்
மனதை அதுதான் தாக்கிறதே....
இரண்டுங் கெட்ட நிலையினிலே எங்கள்
இருதயம் இங்கே துடிக்கிறதே ....

வெடி குண்டு வைத்துத் தாக்காதே
விடியலை எங்கும் போக்காதே
தீவிரவாதம் ஒழிக ஒழிகவென
தீட்டிய பாக்களை வெறுக்காதே ......

                                       (மரண ஓலம் கேட்கிறது )

குழந்தைகள் செல்லும் பஸ்சினில் கூட
குண்டுகள் வைப்பதில் நியாயமென்ன ?....
எதிரியைக் கொல்லும் கொலைவெறியதனால்
எவரையும் அழிப்பதில் நீதி என்ன ?.....

மனித மனங்களில் குரோதங்கள் இதை
மாற்றிட வேண்டும் வாருங்கள் ........
உலகம் அழிவதைப் பாருங்கள் இதை
ஒவ்வருவருமே உணருங்கள் ......

                                        (மரண ஓலம் கேட்கிறது )

சங்கடம் முத்திப் போன சாலையில்
சத்தியம் என்றும் நிலைக்காது
உங்களில் ஒருவர் இறந்திடும் பொழுதிலும்
உணர்வுகள் வேறென இருக்காது .......

பகுத்தறிவுள்ள மனிதர்கள் நாங்கள்
பதற்றம் கொள்ளக் கூடாது
எடுத்ததெற்கெல்லாம் கோவப்பட்டு
எறிகணை வீசக் கூடாது .....

                                       (மரண ஓலம் கேட்கிறது )

மதம் என்ன இனம் என்ன ???...
மனிதனின் குணம் என்ன
அறிந்தது அறிந்தது போதுமடா
இறக்கிற மனிதனின் தொகைகளைக் கண்டு
இருதயம் துடிக்க வேண்டுமடா ...........

கொல்லும் வரைத்தான் கொலைவெறி இங்கே
கொன்றவர் எவரும் வென்றதில்லை .....
நெல்லும் புல்லும் அழிந்த உலகினில்
நிட்சயம் உயிர்கள் பிழைப்பதில்லை ....

                                              (மரண ஓலம் கேட்கிறதே....)

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.