9/25/2014

கம்பன் புகழைப் பாடு மனமே !


கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்  !-செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள்  இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் !
நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே
கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?!
செம்பட்டுப் போன்றே செழிப்பு!

அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே
கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும்
சுவைக்கும்  பொருளைச்  சுரந்தவர் கம்பர் !
அவைக்கும் அவரே அழகு !

பாட்டால்  உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே 
வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே
போதும் அரும்பாக்கள்  ஓதும் பொழுதினிலே!
காதும் குளிரும் கமழ்ந்து !

கவிச்சக் கரவர்த்தி கம்பனைப் போற்ற  
புவிமேல் புலரும் புதுமை!- தவிக்காதே
காக்கும் கடவுளும் கம்பரே!இன்பமாய்
வாக்கும் மணக்கும் மலர்ந்து !



அலைந்து திரிந்தே  அமுதெனக் கொண்டேன்!
சிலைபோல் மிளிரும் சிறந்து ! கலைமகள்
அந்தாதி கம்பர் அளித்த செல்வம் ! போற்றுக!
நந்தவனம் ஆகும் நினைவு!

நாமகள்  அன்பினை நாளுமே பெற்றகம்பர் 
வாழ்வினைக் கண்டிட  ஆசையோ !-பாவினைப்
பாடும் மனமேநீ   பாடுக அந்தாதி
கூடிடும் இன்பம் குவிந்து !

கலைவாணி நற்கருணை கண்களிலே தங்கும்!
தலையையும் காக்கும் தழைத்து!- மலையின்ப 
அந்தாதி பாடினால் அன்னைக் கதுபோதும்!
சந்தன வாசத் தமிழ் !

ஆய கலைகள் அறுபத்து  நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார் !- தேயவழி  
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து !

கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் 
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர் !- அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு !


                                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/23/2014

சகல சௌபாக்கியங்களும் அருள்பவளே !


நாடும் மக்களும் நலன் பெறவே சுகம்
தேடும் விழிகளைக் காத்தருள்வாய்
பீடும் பெருக்கிப் புவி மேலே எந்நாளும்
கூடும் மகிழக் குடி புகுவாய் !

வாடும் உலகின் வாட்டம் தீர்பவளே!
காடும் சிறக்கக் கைகொடுப்பாய் விழி
மூடும் போதும் உன்னாமம்
சூடும் மனத்தில் சுடர்ந்திடுவாய் !

பாடும் குயிகளும்  பாடி மகிழ்ந்தட
பாட்டாய் என்றும் நீ வருவாய்
ஓடும் நதிகளும் உன்பேர் சொல்லிட
ஓங்கும் நல்வளம் தந்தருள்வாய் .!

ஆடும் அசையும் உயிர்களெல்லாம்
ஆடிப் பாடி மகிழ்ந்திடவே எந்நாளும்
போடும் தாளம் தப்பாமல்- புவிமேல்
புலரும் புன்மையைப் புடைத்தெறிவாய் !

ஈடு இணைகள் அற்றவளே 
இனிக்கும் தேனாய் நிற்பவளே 
மேடு பள்ளம் அறிந்திங்கே 
மேன்மையுறவும் செய்திடுவாய் !

கேடு வந்து விளையாமல் 
கேட்கும் வரத்தைத் தந்தருள்வாய் 
வீடும் சிறக்க வந்தவளே! 
வீசுக  தென்றலாய் எம்முள்ளே ..

                                                   
                                           
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/21/2014

சோகம் தவிர்த்து வா சொக்க வைக்கும் கவிக்குயிலே !



வானம் வசப்பட வேண்டுமெனில் எந்நாளும்
கானம் இசைத்திடு காவியமே !- ஊனமது
பார்ப்பவர் கண்ணுக்கே! பாராதே நல்மனமே!
வார்த்துக் கொடுப்பாய்  வளம் !

சினத்தால்  அழியாத சிந்தையும் உண்டோ!
மனத்தை அடக்கு(க )  மகிழ்ந்து !-இனத்தின் 
பெருமையும் ஏற்ற புகழும்  தழைக்க
வருவதை  ஏற்கும்  விருப்பு

ஒதுங்கும் மனத்தை உணர்ந்தே தவித்தேன்!
பதுங்கிடல்  நன்றல்ல பெண்ணே !-பிதுங்கும்
விழிநீர்  தவிர்த்து வருவாய் விரைவாய்!
பழியாவும்  போக்கும்  பயன்!

கடமை உணர்ந்த கவிக்குயிலே!  இன்றே 
மடமை தவிர்ப்பாய் மகிழ்ந்து !-உடமை 
எமக்குத் தமிழாகும் இன்னுயிரே வாவா !
சுமப்போம் மகிழ்வாய்ச் சுடர்ந்து !

இன்பத் தமிழால் இனித்திடலாம் வான்நிலவே !
துன்பம் தரித்துத் துவளாமல்!- அன்பை
உணர்த்தும் கவிதை புனைந்தாலே போதும்!
கணத்தில் மறையும் கசப்பு!

கற்றோர் புகழக் கவிதந்து எந்நாளும் 
பெற்றோர் மகிழப் பெருமையுறு !-உற்றதுணை
நற்றவத்தால் வந்ததிந்த ஞானம் எனப்போற்று!
வற்றாது தங்கும்  வளம் !

(படம்: கூகுளில் பெற்றுக்கொண்டது .நன்றி !)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/18/2014

விநாயகர் வெண்பா



பொங்கும் கடலாய்ப் புலமை பொலிந்திட
எங்கும் நிறைந்த இறையவனே - தங்கிடச்செய் 
மங்கல வாழ்வினை! வாவா முதல்வனே!
பொங்கல் சுவையைப் பொழிந்து!

எண்ணும் பொழுதினில்  ஏற்றம் மிகுந்திட 
கண்ணாய் வருவாய்  கணபதியே! - விண்ணும் 
அசைந்திட மண்ணும் அசைந்திட நன்றே 
இசைவுடன் காப்பாய் இனித்து!

அறுகம்புல் மாலை அணிந்திட  என்னுள் 
நறுந்தமிழ் ஈன்றவனே ! நாளும் - பெறுகின்றேன்  
உன்னால் உயா்வாழ்வும்!   ஓங்கு தமிழ்வாழ்வும்!
என்னால் எதுவும் இலை!

கந்தன் மனங்குளிரக் காட்சியைத் தந்தவனே! 
சிந்தை மணக்கின்ற சிற்பரனே! - விந்தையாய் 
ஆனை முகத்தவனே! ஐந்து கரத்தவனே! 
ஞானம் புகட்டுவாய் நன்கு! 


                                                                    

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/17/2014

எதைத் தேடி என்ன கண்டோம் !


பாழாய்ப் போன கனவுகள் வந்து
பாடாய் படுத்தும் அந்நாளில்
தேளாய் கொட்டும் நினைவுகள் தவிர்ப்பீர் !
தென்னாடுடைய சிவனை நினைந்து !

உண்ணும் போதும் உறங்கும் போதும்
உணர்வுகள் சிறந்தே விளங்கட்டும்!
மண்ணும் மதிக்க வாழ்வோர் தமக்கு
மனதினில் சங்கடம் மறையட்டும் !

எண்ணம் இனிதாய் இருக்கும் போதும்
எதையோ எண்ணி வருந்தாதே !
கண்ணை ஈர்க்கும் மாயையை என்றும்
கடவுள் போலக் கருதாதே !

விண்ணும் மயங்க மண்ணும் மயங்க
வித்தைகள் யாவரும் கற்றிடலாம்
உன்னுள் இருக்கும் உணர்வை வதைத்து
உயரப் பறக்க நினைக்காதே !

பொன்னைப் போல பொருளைப் போல
பொருந்திய மேனியைக் காத்திடுவீர் !
எண்ணம் சிறந்து விளங்கிட நாளும்
இனியன பேசி மகிழ்ந்திடுவீர் !

வாழும் போது வாழா மனிதன்
வாழ்வில் கண்ட பயன் யாது!
ஊழும் துரத்த உணர்வுகள் துரத்த
ஓடும் காலம் திரும்பாது !

மாழும் வரைக்கும் மாடாய் உழைத்து
மண்ணில் சரிய நினைக்காதே  !
சூழும் இன்பச் சுடரைத் தவிர்த்து
சுமைகள் சுமந்து செல்லாதே !

வேகும் கட்டை !வெந்த பின்னால்
விரும்பும் வாழ்வு கிட்டாது !
சோகம் தவிர்த்து வாழும் வரைக்கும்
சொந்தம் எதுவும் நிலைக்காது !

காலம் வெல்லும் வெல்லும் என்றே
கண்ணை மூடித் திரியாமல்
வாழும் போதே வாழ்வை ரசித்து 
வாழக் கற்றுக் கொள்வோமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/15/2014

பொன்விழா வாழ்த்து !

                                                                             
                                     


கவிஞர் கி. பாரதிதாசனார்

பொன்விழா வாழ்த்து!



பொன்விழாக் காணுபுகழ்ப் பாரதி தாசனே!

தன்னுயிர்போல் கொண்டாய் தனித்தமிழை! - இன்புற்று

வாழ்கவே பல்லாண்டு! வண்டமிழாய் எந்நாளும்

சூழ்கவே இன்பம் சுரந்து!



பார்புகழ வாழ்கின்ற பாரதி தாசனே!

சீர்பெறுவாய் அன்னை செழுந்தமிழால்! - நேர்நிகர்

இல்லாதான் என்றே உலகம் இயம்பிடவே

எல்லாப் பெருமையும் எய்து!



களிக்கின்ற கம்பன் கழகத்தைக் காத்தே

ஒளிர்கின்ற பாவலனே! ஓங்கிச்  - செழிக்கின்ற

இல்லறம் காண்க! இனியதமிழ்ச் சீரேந்தி

நல்லறம் காண்க நயந்து!



அல்லும் பகலும் அயரா துழைத்திங்கு

வெல்லும் கவியே! வியன்தமிழே! - வல்லகவி

பாரதி தாசனே! பல்லாண்டு வாழ்கவே!

பூரண விண்மதியாய்ப் பூத்து!



வல்லகவி கம்பன் மலரடியை நன்கேத்தி

நல்லகவி பேசுகின்ற நாவலனே! - தொல்லைகளைப்

போக்கும் புலமைமிகு பாரதி தாசனே!

பூக்கும் தமிழுன் பொழில்!

                                                                           



                                                                     கவிஞர் அம்பாளடியாள். சுவிற்சர்லாந்து.

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/14/2014

இது அம்பளடியாளுக்குக் கிடைத்த விருது !


ஆஹா ...என்ன ஓர் அருமையான விருது !இது எனக்கே எனக்கா !இன்றைய நாள் என் வாழ் நாளில்  மறக்க முடியாத நாளாக அமைவதற்கு இந்த விருதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது இதை  இட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் நான் மட்டும் எப்படி இந்த மகிழ்வினைத் தனித்து அனுபவிப்பது ?இந்த விருதினைப் பெறுவதற்கு மூல காரணமே என் வலைத்தள சொந்தங்கள் தாங்கள்  தானே ! எந்தப் பாடலை எழுதினாலும் எந்தக் கவிதையை  எழுதினாலும் அதற்கு உயிரோட்டமுள்ள நற் கருத்துக்களை இட்டுக் கௌரவித்து மேலும் ஊக்கமளிப்பவர்கள் தாங்கள் தானே ! ஆதலால் முதற்கண் என் வலைத்தள சொந்தங்களுக்கும் குறிப்பாக இந்த விருதினை எனக்கு வழங்கிக் கௌரவித்த திரு .துரை செல்வராஜூ  ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .சிறப்பான ஆன்மீகப் பகிர்வினை அள்ளி அள்ளி வழங்கும் ஐயா அவர்கள் இந்த விருதினைப் பெறுவதற்கு முன்னர் ஒரு சில நிபந்தகளையும் அறிவித்திருந்தார் !

                                 அதாவது இவ் விருதினைப் பெற்றுக் கொண்டவர்கள் முதலில் இவ் விருதினை வழங்கிக் கௌரவித்தவரின் தளத்திற்கு இணைப்புக் கொடுக்க வேண்டும் .http://thanjavur14.blogspot.ch/2014/09/blog-post84-blog-award.html மிக்க நன்றி ஐயா! தாங்களும் மென் மேலும் இது போன்ற விருதுகளைப் பெற வேண்டும் என்றே வாழ்த்துகின்றேன்.

அடுத்து பெற்றுக்கொண்ட விருதினைத் தளத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் .முதல் வேலையே அது தானே விடுவோமா :))) போட்டும் விட்டேன்! கூடவே என்னைப் பற்றி ஏழு விஷயங்களைச்  சொல்ல வேண்டும் .சொன்னால் போச்சு! இதோ அந்த ஏழு விஷயங்கள் ......


  1. முழுநேர இல்லத்தரசி :)
  2. கலையார்வம் அதிகம் ஆதலால் எதையும் விட்டு வைப்பதில்லை சிலை செய்வது ,சித்திரம் வரைவது கவிதை எழுதுவது ,பாடல்கள் எழுதுவது  பட்டியல் இப்படியே நீண்டுகொண்டே போகும் :)எல்லாம் ஒரு முயற்சி தான் :)
  3. இசை என்றால் உயிர்!( ஐயா இளையராஜாவை நேரில் காண வேண்டும் என்பது என் கடசி  ஆசை !)
  4. கூடவே இன்னொரு கடசி ஆசையும் உண்டு அது பாடல்மேல் உள்ள காதலால் வந்த ஆசை ஜானகியம்மாவை நேரில் கண்டு தொழ வேண்டும்! 
  5. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளது (சிறு வயது முதல் ஆதலால் இந்தியாவில் உள்ள மொத்தக் கோவில்களுக்கும் சென்று வர வேண்டும் !)
  6. இயற்கையை அதிகம் நேசிப்பவள் .
     7  .எதையாவது ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம்  மிகுந்தவள் .                                                                    
இனி நான் செய்ய வேண்டியது இந்த விருதினை நிபந்தனைகளுக்கு உட்பட்டு இன்னும் ஐந்து பேருக்கு வழங்க வேண்டும்  . அந்த வகையில் நானும் ஓர் ஐந்து பேரை இங்கே தேர்வு செய்துள்ளேன் .இவர்களைப் பற்றி அதிகம் நான் எதுவும்  சொல்லத் தேவையில்லைக்   காரணம் இவர்களின் படைப்பாற்றல் அனைவரும் அறிந்ததே .
  • கவிஞர். கி  .பாரதிதாசன் ஐயா 
  • புலவர் இராமனுசம் ஐயா 
  • அன்புச் சகோதரி ராஜி 
  • தோழி அருணா 
  • சகோதரர் ஊமைக்கனவுகள் (இவரது உண்மையான பெயர் தெரியாததனால் புனைப் பெயரைப் பகிர்ந்துள்ளேன்  மன்னிக்கவும் )
வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே ! வளமான ஆக்கங்கள் வான் போல பரவட்டும் ....       

அட கவிதை எழுதத் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால்  சிலை எப்படிச் செய்வாக :)) 


                                                இப்படித்தான் இதோ பாருங்கள் ..
   

                                                                           நன்றி ....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/12/2014

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!...


அன்பைப் பொழிவோம் எந்நாளும்
அதுவே வாழ்வின் பயனாகும் !
இன்பம் துன்பம் எல்லாமும்
இறைவன் விட்ட வழியாகும் !

அன்னல் காந்தி மகானைப்போல்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்!
இன்னல் வந்த போதினிலும்
இயல்பாய் என்றும் இருந்திடுவோம் !

தன்னைத் தந்து உழைப்பவரின்
தன்மானத்தை மதித்திடுவோம்!
எண்ணக் கருத்தை எவர் சொல்லினும்
ஏற்றுக்கொண்டு சரி செய்வோம் !

பஞ்சம் வந்த போதினிலும்
பகிர்ந்து உண்ணப் பழகிடுவோம்!
தஞ்சம் என்று வருவோர்க்கெல்லாம்
தளராதிங்கே உதவிடுவோம் !

வள்ளல் குணத்தை வளர்த்திடுவோம்
வாழ்வில் இன்பம் கண்டிடுவோம்!
தெள்ளத் தெளிவாய் பொருள் விளங்கத்
திறமை கொண்டு வாதிடுவோம் !

உள்ளம் மகிழ்வாய் இருந்திடவே
உழைப்பை நாளும்  நம்பிடுவோம்!
அள்ள அள்ளக் குறையாத
அறிவை என்றும் வளர்த்திடுவோம் !

தானம் தர்மம் செய்திடுவோம்!
தரத்தை நாளும் உயத்திடுவோம்
கானம் இசைத்து மகிழ்ந்திடுவோம்!
கனவில் கூட அமைதி கொள்வோம் !     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9/07/2014

எதைக் கற்றுக் கொண்டாய் இயற்கையையும் மிஞ்சுவதற்கு !




கற்றுக் கொடுத்த பாடமெல்லாம்
கனவில் நினைவில் நிக்குதடா!
அற்றுப் போன  நீதிக்கே
அகிலம் தவியாய்த் தவிக்குதடா!

உற்றுப் பார்த்தால் உள்ளுக்குள்
உணர்வே மெல்லச் சாகுதடா!
பற்றுப் பாசம்  எல்லாமும்
பகட்டு வேஷம் தானோடா!

அண்ணன் தம்பி உறவுக்கும்
அர்த்தம் உண்டோ இந்நாளில்?
எண்ணும் போதே வலிக்குதடா
எங்கள்  இதயம் துடிக்குதடா!

மண்ணும் பெருமை குன்றிடவே
மனிதம் மறந்து வாழ்கின்றீர்!
விண்ணும் வியக்க உயர்ந்தவரே
விடிவை இங்கும் தடுக்கின்றீர்!

அள்ளிக் குண்டை விதைக்கின்றீர்!
அன்னை மடியைச் சிதைக்கின்றீர்!
பள்ளிப் பாடம் இதுவோடா?
பலதும் கற்ற மானிடனே!

முள்ளில் விழுந்த சேலையைப்போல்
முடிவும் விதியின் கைகளில்தான்!
துள்ளிக் குதித்தும் பயனுண்டோ
துயரம் மிகுந்த வாழ்வினிலே!

எல்லைக் கோட்டைத் தாண்டிவிட்டீர்!
எங்கும் அமைதியைச் சீண்டி விட்டீர்!
சண்டை இட்டே  சாவதற்காய்
சரித்திரம் மேலும் படைக்கின்றீர்!

புல்லும் இங்கே முளையாது
புழுக்களும் இங்கே வாழாது!
தொல்லை மிகுமே வாழ்நாளில்
துளையுண்ட பூமியின் சாபமிதே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.