4/10/2016

பாவலர் பயிலரங்கில் நான் தொடுத்த வெண்பா மாலை!



(இரு விகற்ப நேரிசை வெண்பா)
தந்தை தாய்!
தந்தை பொருளீட்டித் தந்தெம்மைக் காத்திடினும்
இந்த உலகத்தில் எப்போதும்! - வந்த
துயரறுத்து வாழ்வளிக்கும் துாயநற் தெய்வம்!
தயவொளிரும் தண்டமிழ்த் தாய்!

தந்தை துணையின்றித் தள்ளாடும் வாழ்வுற்றும் 
சிந்தை இழக்காமல், சீர்தேடி - எந்த
நிலையிலும் எம்மை நிலத்தில்வாழ் வித்துத்
தலைநிமிரச்  செய்பவளே தாய்!

காய் கனி!
காய்த்த மரமென்றும் கல்லடிக்குத் தப்பாது!
ஆய்ந்திதனை ஆற்றுகவே நற்பணிகள் - ஓய்வின்றித்
தன்னுயிரைத் தந்து தரணிக்கு வாழ்வளிக்கும்
கன்னல் மனமே கனி!

காய்போல் சுவைகொண்டு கன்னிமனம் இங்கிருந்தால்
வாய்ப்புண்டோ காதல் வளர்ந்தோங்க! - சேய்போல்நின்
அன்புக்கு நான்ஏங்க அள்ளித்தா! தேன்சிந்தும்
கன்னம்தான் செம்மாங் கனி!

காதல் கமழும் கவி!
கண்ணெதிரே வந்தநிலா! கள்ளமிலா வெள்ளைநிலா!
பெண்ணவளை யான்கண்டு பேச்சிழந்தேன்! - மண்மீது
மோதல் புரியாமல் மூச்சிரைக்கச் செய்கின்றாள்
காதல் கமழும் கவி!

தேன்குடிக்க வந்தேனே தேடியிங்(கு) உன்னிடத்தில் 
நான்விரும்பும் நன்மலரே சொல்லிங்கே! -ஊன்மறந்தேன்
ஆதலினால் ஆதரிப்பாய் நீயேதான் என்னுயிருள்
காதல் கமழும் கவி!

போதாது போதாது போ!
இன்தமிழே! என்னுயிரே! இன்றுலகம் என்பாவைப் 
பொன்னென்று போற்றிடினும் பூச்சூடி!- நின்றாலும்
காதுபடச் சொல்வேன்யான் கற்றதெல்லாம் என்வாழ்வில் 
போதாது போதாது போ!

பூக்கும் கவிதைப் பொழில்
பொன்னான இவ்வுலகில் பொய்யுரையேன் எப்போதும்!
மின்னலிடைக் காரிகையே! மீன்விழியால்! -அன்புகொண்டு
தாக்கியென்றன் தாரமென வந்தவளே என்னுயிருள்
பூக்கும் கவிதைப் பொழில்!

கண்ணுக்குக் கண்ணான காதலியின் பொன்மேனி
வண்ணத்தை நான்கண்டு வாடுகிறேன் - எண்ணத்தில்
தாக்கத்தைத் தந்து தழைத்த தமிழாலே 
பூக்கும் கவிதைப் பொழில்!

கொட்டும் மழையிலும் கோடை வெயிலிலும் 
எட்டியெங்கும் போகாமல் எப்போதும்!-கட்டுண்டு 
காக்கும் கருணைக் கடலேதான் என்வாழ்வில் 
பூக்கும் கவிதைப் பொழில்!

முகம்!
இன்னலுறும் வேளையிலும் இன்பத்தேன் சிந்துமுனை
என்னுயிராய்க் கொண்டேனே என்வாழ்வே!-இன்றதனால்
நித்தமுனை நான்வேண்டி நீண்டதவம் பூண்டிருப்பேன்
முத்தமிழே காட்டு முகம்!

இன்னலுறும் வேளையிலும் இன்பத்தேன் சிந்துமுனை
என்னுயிராய்க் கொண்டேனே என்வாழ்வே!-இன்றதனால்
நித்தமுனை நான்வேண்டி நீண்டதவம் பூண்டிருப்பேன்
முத்தமிழே காட்டு முகம்!

மொழி !
எத்தனை வேடமிட்டும் என்னபயன்! இவ்வுலகில்
சித்தத்தைச் சித்தரிக்கும் ஓவியமாய் - நித்திலமே
என்னருகில் நீயிருக்க இன்பத்தேன் சிந்தும்!உன்
முன்னாலே தோற்கும் மொழி!

ஊர்!
வந்தாரை வாழ்விக்கும் வன்னிமண் பூத்திருக்கும்
செந்தாழைப் பூவழகைச் சேர்த்தணைக்க - இந்திரனும்
தேரேறி வந்திடுவான் தேவருமே கண்டுவக்கும்
ஊரெங்கள் பொன்னான ஊர்!

கற்றவரும் மற்றவரும் கண்டுவப்பார்! பாப்புலமை 
பெற்றவரும் வந்திங்குப் பேறுறுவார்! - உற்ற
துணையாய்த் துணிவூட்ட பாட்டரசர் தந்த
இணையற்ற பக்கம் இது!

பாவெழுதும் ஆசை பலமடங்கு ஓங்கிடவே
பாவளம் தந்திட்ட பாட்டரசர்! - கூவும்
குயிலினை என்னெஞ்சக் கூட்டுக்குள் வைத்தார்!
உயர்கவி நுட்பம் உரைத்து!

என்னுயிர்க் கூட்டிலே இன்தமிழ் வாழ்வதை
நன்குணர்ந்து ஈந்தனை நற்பயன்! - கன்னல்
கவிபாடும் ஆசானே! கற்றதைக் கொண்டு
புவிதனில் சேர்ப்பேன் புகழ்!


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.