5/06/2017

காத்திருந்த கனவுகள்!


தேவதை என் விழிதன்னில் பட்டாயடா
இன்பம் தந்தாயடா!
என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே!
எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே!
காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய்
கருவிழியுள் வாழுகின்ற ஒளியானாய்!
தேடலில் இவள் வாழ்வு கழியுதே!
தேவகானம் ஒன்று மட்டும் தொடருதே!
நான் தேடும் சொர்க்கம் நீயடா!
நாணத்தை விட்டுவந்தேன் பாரடா!
குழலோசை காதில் கேட்காதோ!
குயிலென்றன் ஆசையைத் தீர்க்காதோ!
உன்னைக் கண்ட நாள்முதலாய்த் தூக்கம் போனதே
இவள் நெஞ்சில் ஏக்கம் வாழுதே!
காதலுக்குப் பச்சைக்கொடி காட்டாயோ!
கன்னி மன வீணையதை மீட்டாயோ!
காத்திருந்த என் கனவைப் பாரடா
பதில் ஒன்று கூறடா!
பூபாளம் இசைக்கின்ற நேரம்
இவள் நெஞ்சில் ஏனிந்தப் பாரம்!

நிலா முறத்திற்கு மிக்க நன்றி!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/27/2017

சிற்பங்கள் கண் திறந்தால்!சிற்பங்கள் கண் திறந்தால்!
------------------------------------------------------------------------------

சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்!
சிங்காரத் தமிழின்மேல் காதல் கொள்ளும்! 
அற்பமாயை உலகினிலே யாவும்பொய்யே!
அருந்தமிழ் தந்தசுகம் ஒன்றே மெய்யாம்!

மண்தோன்றி கல்தோன்றும் முன்னாலே தோன்றினாள்! 
மாமனத்துள் ஆணிவேராய் ஊன்றினாள்! 
கண்டுக்கொள் கடலுக்குள் சாட்சிகள் தூங்குதே! 
காணத்தான் மனமிங்கே எந்நாளும் ஏங்குதே! 

முத்தமிழாள் முத்தமிட்டால் உயிர் சிலிர்க்கும்!
மூவுலகும் மனத்திரையில் கை குலுக்கும்!
சித்தமெல்லாம் சங்கீதக்காற்று வீசும்!
சிதம்பரத்தில் தெய்வத்திற்கும் பாதம் கூசும்!

இத்தரையில் எழுச்சிமிகு பரதக்கலையை 
எம்இறைவன் இறைவியவள் ஆடக்கண்டால் 
கொத்துக் கொத்தாய் மலர்வனங்கள் பூத்துக் குலுங்கும்!
கொடும் கோடையிலும் குளிர்காற்று கொஞ்சி மகிழும்!

செத்தாலும் என் சாம்பல் மணக்கும் தமிழாய் 
செந்தூர நதியலையில் சேரத்துடிக்கும்!
வெத்துக்கள் என்னுயிரைப் பழித்தால் வெடிக்கும் 
வெம்சின எரிமலைகள் அவர்கள்தம் கதையை முடிக்கும்!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

4/23/2017

பூமி வறண்டிடிச்சே!நாட்டுப்புறப் பாடல்கள்!
***************************************

பூமி வறண்டிடிச்சே
பூகம்பமும் கிளம்பிடிச்சே!
சாமி மனசுக்குள்ள
போட்ட சாபம் கேட்டதாரு!

நாத்து நட்ட குடி
நாளும் கண்ணீர் வாக்குதடி!
ஊத்து நிலம் கெட்டு
ஊரும் ஊமை ஆச்சுதடி!

குண்டு மழை பொழிஞ்சு
குடியைக் கெடுத்ததாரு!
விவசாயி குடும்பத்த
வீதியில விட்டதாரு!

அரசு மனசு வச்சா
அடி ஆத்தி மழை வருமா!
பொல்லாத சோகம் சொன்னா
போன ஜென்மம்தான் வருமா!

மாடு மட்டும் சந்தையில ஏலம் போகுது!
மானபங்க பட்ட உசிர் இங்கே ஏங்குது!
சோறு தண்ணி இல்லாம வாழ்க்கை ஏதடி!
சொந்தக் கத சோகக் கத இத
சொன்னால் கேளடி!

வெள்ளையன வெளியேறச் சொன்ன தாரடி
விருந்துக்கு அழைக்கிறான் இங்கே பாரடி!
கூறு கெட்ட அரசியல மாத்துற தாரு
கொஞ்சம் கொஞ்சமா
நெஞ்சம் வேகுதே!
பஞ்சம் தீருமா!

தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி!
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!

மூலிகைய குழுசையா விக்குறானடி!
மூடருக்கு அவ ஆப்பு வைக்குறானடி!
என் தாத்தா பாட்டி சொத்து
அத அள்ளுறான்!
ஏமாந்த குத்தத்துக்கு குண்டத் தள்ளுறான்!

சொன்னா புரியுமா?
இந்த சோகம் தெளியுமா!

சாலையில ஓடுது நாலு சக்கரம்
இது சாஞ்சா புரியுமடி வந்த சிக்கனம்!
புகையோடு புகையாக மனுசன் போகிறான்
இது புரியாமல் தானடி இங்கே வேகுறான்!

கேட்டாக்கா நாகரீகம் ஏறிப் போச்சுதாம்!
கேழ்வரகு கஞ்சி தூசா ஆகிப் போச்சுதாம்!
உப்புக் கல்ல வைரமாப்  பாக்குறானடி
சிலத ஒப்புகொண்டா கண்ணீரும் இங்கே ஏதடி!
எல்லாளன் ஆட்சிக் காலம் நீதி வாழ்ந்ததாம்
அது  இல்லாத  அரசியல்தான் இங்கே வாழுது!

தீயிலிட்ட கருவாடு என்ன பாரடி
தீந்தமிழே நீ பதில இங்கே கூறடி!

----------------------------------------(பூமி வறண்டிடிச்சே )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.