7/29/2014

தாய் மண்ணை முத்தமிட வேண்டும்


மண்ணின் மணமது குன்றாமல்
மலர்கள் மலரும் எம்நாடே!
பெண்ணின் பெருமை புகழையுமே
போற்றிப்   பாடும்  எம்நாடே!
விண்ணில் இருந்து தேவருமே
வாழ்த்தி  வணங்கும் எம்நாடே
கண்ணின் மணியே கற்கண்டே-உன்னைக்
காணத்    தவிக்குது மனம் இன்றே!

உறவுகள் கூடி மகிழ்ந்திடவும்
உன்னத  வாழ்வு வாழ்ந்திடவும்
திறவுகோல் ஒன்று கிட்டாதோ!
தென்றலைத் தாங்கும் எம்நாடே !
பிறமொழி   பேசும் அயல்நாட்டில்
பெருமைகள் குன்றிட வாழ்கின்றோம்
திறமைகள்      இருந்தும் பாரம்மா
திவ்விய  ஒளியே கேளம்மா!

நிலைமைகள் இங்கு வேறாகும்-இதனால்
நித்தமும்     துன்பங்கள் ஆறாகும்!
தலைமுறை காத்திட வழியின்றித்
தவிப்பவர் உள்ளமும் நீறாகும்!
அலைகடல்    அலையே தான் வாழ்க்கை
ஆசைகள் எமக்கே  மாறாகும்
கலைநயம்  மிக்க எம்நாடே  இங்கு
காண்பவை யாவும்  சேறாகும் !!

பனைமரக்  காடும் தென்னைகளும்
பாசமாய் வளர்ந்த பிள்ளைகளும்
நினைவினில் வந்து வாட்டுதடி
நெஞ்சுரம்    கொண்ட எம்நாடே
வினைகளை அறுத்து எறியாயோ!
வேங்கைகள் எம்மின்  அடையாளம்!
மனைகளில்  இன்பம் பொங்கிடவே
மாபெரும் மகத்துவம் நிறைநாடே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:

  1. வணக்கம்
    அம்மா.
    தாங்கள் சொல்வது உண்மைதான்... அதன் அழகு அழகுதான்... கவிதையில்நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. கண்ணின் மணியே கற்கண்டே-உனைக்
    காணத் தவிக்குது மனமின்றே !

    பிறமொழி பேசும் அயல்நாட்டில்
    பெருமைகள் குன்றிட வாழ்கின்றோம்//

    வரிகள் நெஞ்சைச் தொட்டன! கண்டிப்பாக உங்கள் பிரார்த்தனை நிறைவேறி திறவு கோல் கிடைக்கப் பெறுவீர்கள் சகோதரி!

    தங்கள் உடல் நலம் தேறியதா? எப்படி இருக்கின்றீர்கல் சகோதரி?

    பிரார்த்தனைகளுடன்

    துளசிதரன்.........கீதா.

    ReplyDelete
  3. வெகு நாட்களுக்குப் பிறகு தங்களை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி!

    ReplyDelete
  4. \\\பனைமரக் காடும் தென்னைகளும்
    பாசமாய் வளர்ந்த பிள்ளைகளும்
    நினைவினில் வந்து வாட்டுதடி
    நெஞ்சுரம் கொண்ட எம்தாயே
    வினைகளை அறுத்து எறியாயோ
    வேங்கைகள் தம்மின் அடையாளம் !
    மனைகளில் இன்பம் பொங்கிடவே
    மாபெரும் மகத்துவம் நிறைநாடே !///

    தாய் நாட்டை பிரிந்த ஏக்கம் கவிதை வரிகளில் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. கவிதை அற்புதம் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. உணர்வுமிக்க பாடல் தோழி!
    வினைதீர வேண்டுவோம் விரைந்து!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. உங்கள் கவிதையில் ,தாய் நாட்டில் இருந்து வெகு தூரத்தில் வாழும் கஷ்டம் தெரிகிறது. வினைகளை அறுத்து எறியும் நாள் விரைவில் வரட்டும் !
    த ம 4

    ReplyDelete
  8. தாய்நாட்டைக் காண அங்கு அமைதியுடன் வாழ ஏங்கும் மனம் தெரிகிறது...வினையழிந்து விரைவில் அமைதி பிறக்கட்டும்..ஆங்கிலேயர் ஆரம்பித்த வேலை அல்லவா? :(
    உடல் நலம் இல்லையா? கவனித்துக்கொள்ளுங்கள் சகோதரி

    ReplyDelete
  9. மனைகளில் இன்பம் பொங்கிடவே
    மாபெரும் மகத்துவம் நிறைநாடே//

    மனைகளில் இன்பம் பொங்கிடும்.
    அன்னை அருள்புரிவாள் விரைவில்.
    வாழ்த்துக்கள்.
    உடல் நலமா? கால் எப்படி இருக்கிறது?
    விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  10. வணக்கம்!

    நாட்டினை எண்ணி நவின்ற கவியடிகள்
    ஊட்டும் உணா்வை உயிா்க்கு!

    ReplyDelete
  11. அருமையான பாடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ///கண்ணின் மணியே கற்கண்டே-உனைக்
    காணத் தவிக்குது மனமின்றே !///
    விரையில் தங்கள் எண்ணம்
    நிச்சயம் நிறைவேறும் சகோதரியாரே

    ReplyDelete
  13. மிக்க நன்றி உறவுகளே என் மீது கொண்ட அன்பிற்கு .இப்போது தான்
    மெல்ல மெல்லத் தேறி வருகின்றது எனது உடல் நலனும் விரைவில்
    தேறிவிடும் தங்கள் அனைவரினதும் பிரார்த்தனையினால் .மீண்டும்
    மீண்டும் நன்றி என் உறவுகளே .

    ReplyDelete
  14. வேதனை வரிகளில் தெரிகிறது -ஒளி
    விடியல் விரைவில் வருகிறது
    சோதனை காலம் நீங்கிடுமே -அதுவரை
    சோகமே மனதில் தேங்கிடுமே

    ReplyDelete
  15. செப்பிய மொழியில் செந்தூரம் தெரிகிறது
    செம்மையாகும் தோழி தாய்நாடு.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........