4/04/2014

அட்சய பாத்திரம் கையிலேந்தி


அட்சய பாத்திரம் கையிலேந்தி
அடைக்கலமானோம்  உன்னிடத்தில்
இச்சையைக் களையும் பெருமானே
ஈஸ்வரனே அருள்வாயே ....

பட்டினிச் சாவை எட்டிடும் தீவில்
பகலைக் காண முடியாதா ?....
ஓர் உத்தமி இங்கே அழுகின்றாள்
அந்த உயிர்களைக் காக்க முடியாதா ?....

சிவனே சிவனே சிவனே என்று
சிந்தை மயங்கி நின்றோமே
உலகைக் காக்கும் இறைவா உனக்கும்
இந்த உண்மை ஒரு நாள் புரியாதா ..

கர்வம் கொண்ட அரக்கர்கள் முன்
கண்ணீர்ப் பூக்களைச் சொரிகின்றோம்
இதயம் இதயம் கருகையிலும்
இறைவா இறைவா என்கின்றோம் ..

மலரும் நினைவுகள் அழிகிறதே அங்கு
மர்மக் கொலைகளும் தொடர்கிறதே
உயிரைக் கையில் ஏந்தும் எங்கள்
உணர்வே செத்துப் போகிறதே ..

குட்டித் தீவில் செந்நீர் ஆறு
குமுறிக் குமுறி ஓடுவதா !.......
எட்டுத் திக்கிலும் சாபம் வந்து
எங்கள் உயிர்களை  வாட்டுவதா ....

மங்கள நாணை ஏற்றி விடு
மனமது மகிழ வாழ்த்தி விடு
திங்களை அங்கே திகழ விடு
தீவினை அகற்றி வாழ விடு ....

                                     (      அட்சய பாத்திரம்)

(படம் .கூகிளில் பெற்றது :நன்றி )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

  1. சிவனருள் விரைவில் கிடைக்கட்டும்! செந்நீர் ஓடுவது நிற்கட்டும்! நல்லது விரைவில் நடக்கட்டும்! அருமையான பாடல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. i have sung your song. Listen to at google.
    subbuthatha.

    ReplyDelete
  3. வணக்கம்

    கவிதைன் வரிகளில் புரட்சி வெடிக்கிறது.
    மனதின் ஆதங்கம் கவியாக மலர்ந்த விதம் சிறப்பு....வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  4. உள்ளத்து ஆதங்கம்
    எழுத்தில்
    பொங்கி வழிகின்றது
    த.ம.1

    ReplyDelete
  5. மனதில் உள்ள வலி புரிகிறது அம்மா...

    ReplyDelete
  6. இனிய வணக்கம் சகோதரி..
    எம்பெருமானின் படத்தைப் பார்த்ததும்
    "தென்னாடுடைய சிவனே போற்றி..
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
    என்று மனமுருகத் தோன்றுகிறது...
    மனம் உருகத் ததும்பும் வார்த்தைகளால்
    கோர்க்கப்பட்ட பாமாலை ...
    பசுபதி வேந்தன் அருள்புரிவான்...

    ReplyDelete
  7. மங்கள நாணை ஏற்றி விடு
    மனமது மகிழ வாழ்த்தி விடு
    திங்களை அங்கே திகழ விடு
    தீவினை அகற்றி வாழ விடு ....
    அருமை தோழி! வார்த்தை ஜாலமங்கள்.
    அகலும் ஒரு நாள் துன்பம் அணையாத நம்பிக்கையுடன் காத்திருப்போம்.புலரும் ஒரு நாள் பொழுதுகள் என்று பொறுமைகாத்து நிற்போம் தோழி! தங்கள் ஆதங்கம் புரிகிறது.விருப்பம் ஈடேற வாழ்த்துக்கள் தோழி....!

    ReplyDelete

  8. வணக்கம்

    நாட்டினை எண்ணி நடமாடும் ஈசனிடம்
    பூட்டிய பாடலோ பொன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
  9. இறைவன் நேரில் வரமாட்டான் என்பதால் ஐநா சபை மூலம் நியாயமான நடவடிக்கை எடுப்பார் !
    த ம 5

    ReplyDelete
  10. நம் அனைவருக்கான தங்களின் பிரார்த்தனைக்கு நன்றி.

    ReplyDelete
  11. விரைவில் நல்லது நடக்க எனது பிரார்த்தனைகளும்.

    த.ம. +1

    ReplyDelete
  12. "பட்டினிச் சாவை எட்டிடும் தீவில்
    பகலைக் காண முடியாதா ?....
    ஓர் உத்தமி இங்கே அழுகின்றாள்
    அந்த உயிர்களைக் காக்க முடியாதா ?...." என
    எழுப்பப்படும் உள்ளக் குமுறல் - அந்த
    ஆண்டவன் காதில் விழவேண்டும்
    இருண்ட தீவிற்கு வெளிச்சம் வரவேண்டும்!

    ReplyDelete
  13. அக்‌ஷயப்பாத்திரத்தில் எப்படி குறைவின்றி உணவு கிடைக்கிறதோ அதேப்போல் அரக்கர்களின் கொட்டம் அடக்கி சிவனருளால் பட்டினியை தீர்த்து நலமே நடக்க வேண்டிக்கொள்ளச்செய்யும் மனம் உருகவைக்கும் வரிகள் அமைந்த பாடல் வரிகள் சிறப்பு தங்கை.... இனி எல்லாம் சுகமே... த.ம.8

    ReplyDelete
  14. சீக்கிரமே நல்லது நடக்க அந்த சர்வேஸ்வரனின் அருள் "அட்சய பாத்திரம்" ஆக அருளட்டும்! அதே போன்று தங்கள் கவிதைகளும் அட்சய பார்த்திரம் போன்று வற்றது சுரந்து கொண்டே இருக்கட்டும்! சென்நீர் ஓடினாலும், தமிழ் இனிக்கின்றது!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. குட்டித்தீவில் குருதியில் ராஜ்ஜியம்,

    ராஜ்யம் ,ராமன் விபீஷணனை விட்டுச்சென்று
    பின்னர் ராவணர்கள் ஆட்சி,
    சிவனே என்று சிந்தை

    சிவனிடம் பிரார்த்தனை ,அவன் தானே
    அருளவேண்டும், சித்தம் கலங்காமல்
    அல்லல் தீர அம்பலவாணன் அருள் புரியும்
    காலம் வரும்.

    ReplyDelete
  16. அருமை.
    நெகிழ்கிறேன். மிகவும் மனம் வருந்துகிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. மனதின் வலி கவிதையில் தெரிகிறது, நல்லது நடக்கும்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........