.....எவருமிங்கே இல்லையடி இவர்கள் போல !
நித்தமொரு யுத்தத்தை விரும்பு கின்றார்
......நினைத்தபடி அனைத்தையுமே நிகழ்த்து கின்றார் !
சத்தியமாய்த் தண்டனையும் இங்கே உண்டு!
......சத்தமின்றி இரத்தத்தைக் குடிப்ப வர்க்கே !
இத்தரையில் அஞ்சுவதும் மடமை என்றே
......என்தோழி நீஉணர்ந்தே எழுச்சி கொள்வாய் !
பெண்ணாகப் பிறந்தோமே பெண்ணை வாட்டும்
.......பேயோடு நட்பெதற்கு ?உதறித் தள்ளு !
விண்ணாணம் பேசுகின்ற வாய்க்கே அஞ்சி
......விதியென்று நோகாதே விலகிச் செல்லு !
மண்மீது கடமையினை உணர்ந்தால் போதும்
......மலைபோல வரும்துயரும் மறைந்து போகும் !
எண்ணத்தில் எப்போதும் நிலையாய் நின்று
......ஏற்றமுற வைக்கின்ற குறளை நம்பு !
இல்லாத கதைபேசி மனத்தை வாட்டும்
.......இரக்கமற்ற அரகர்முன் துணிவைத் தந்து
வல்லதுணை யாய்நிற்கும் வாழ்வைக் காக்கும்
.......வள்ளுவரின் குறள்நெறிக்கு ஈடும் உண்டோ !
நல்லின்பப் பேறளிக்கும்! நன்மை சேர்க்கும்
.......நாளெல்லாம் மகிழ்வுதரும் நலனைக் கூட்டும் !
கல்லாதார் பேச்செதற்குக் கண்ணே நீயும்
......கற்றுய்வாய் குறள்நெறியைக் காப்பாய் நன்றே !
புத்துக்குள் வாழ்கின்ற பாம்பைப் போல
......புத்திகெட்ட மனிதரும்தான் வாழு கின்றார் !
சத்தியமாய் இவர்களுக்கு அஞ்சி வாழ்தல்
......சாவுக்கே இணையாகும் இந்த மண்ணில் !
நித்தமுனை வாட்டுகின்ற துயரை வென்று
......நீவாழ்ந்தால் ஊர்போற்றும் உலகம் போற்றும் !
இத்தரையில் சோகமென்ன விட்டுத் தள்ளு
......இனியவளே இனிவாழக் கற்றுக் கொள்ளு !
