1/27/2016

குறளை நம்பு குறைகள் தீரும் !

                                           
                                         


எத்தனையோ மனிதர்களைப் பாத்து விட்டோம்
 .....எவருமிங்கே  இல்லையடி இவர்கள் போல !
நித்தமொரு யுத்தத்தை விரும்பு கின்றார்
......நினைத்தபடி அனைத்தையுமே நிகழ்த்து கின்றார் !
சத்தியமாய்த் தண்டனையும் இங்கே  உண்டு!
......சத்தமின்றி இரத்தத்தைக் குடிப்ப வர்க்கே !
இத்தரையில் அஞ்சுவதும் மடமை என்றே
......என்தோழி நீஉணர்ந்தே  எழுச்சி கொள்வாய் !

பெண்ணாகப் பிறந்தோமே பெண்ணை வாட்டும்
.......பேயோடு நட்பெதற்கு ?உதறித் தள்ளு !
விண்ணாணம் பேசுகின்ற வாய்க்கே  அஞ்சி
......விதியென்று நோகாதே விலகிச் செல்லு !
மண்மீது கடமையினை  உணர்ந்தால் போதும்
......மலைபோல வரும்துயரும் மறைந்து போகும் !
எண்ணத்தில் எப்போதும் நிலையாய் நின்று
 ......ஏற்றமுற வைக்கின்ற  குறளை நம்பு !

இல்லாத கதைபேசி மனத்தை வாட்டும்
.......இரக்கமற்ற அரகர்முன் துணிவைத் தந்து
வல்லதுணை யாய்நிற்கும் வாழ்வைக் காக்கும்
.......வள்ளுவரின் குறள்நெறிக்கு ஈடும் உண்டோ !
நல்லின்பப் பேறளிக்கும்! நன்மை சேர்க்கும்
.......நாளெல்லாம் மகிழ்வுதரும் நலனைக் கூட்டும் !
கல்லாதார் பேச்செதற்குக்  கண்ணே நீயும்
......கற்றுய்வாய் குறள்நெறியைக் காப்பாய் நன்றே !

புத்துக்குள்  வாழ்கின்ற பாம்பைப் போல
......புத்திகெட்ட மனிதரும்தான் வாழு கின்றார் !
சத்தியமாய் இவர்களுக்கு அஞ்சி வாழ்தல்
......சாவுக்கே இணையாகும் இந்த மண்ணில் !
நித்தமுனை வாட்டுகின்ற துயரை வென்று
......நீவாழ்ந்தால் ஊர்போற்றும் உலகம் போற்றும் !
இத்தரையில் சோகமென்ன விட்டுத் தள்ளு
......இனியவளே இனிவாழக் கற்றுக் கொள்ளு !

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. பதிவின் தலைப்பிற்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  2. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. கவிதை அருமை சகோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. "இல்லாத கதைபேசி மனத்தை வாட்டும்
    .......இரக்கமற்ற அரகர்முன் துணிவைத் தந்து
    வல்லதுணை யாய்நிற்கும் வாழ்வைக் காக்கும்
    .......வள்ளுவரின் குறள்நெறிக்கு ஈடும் உண்டோ!
    எனச் சிறப்பாகச் சொன்னீர்கள்.

    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
    http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

    ReplyDelete
  5. அருமையான சிறப்பான கவிதை சகோ. வாழ்த்துகள்

    ReplyDelete
  6. கவிதை அருமை! தேர்வு செய்திருக்கும் ஓவியம் மிக அழகு!

    ReplyDelete
  7. எண்சீர் விருத்தங்கள் -இடையிடையே சொலவடைச் சொற்கள் - அழகு! இனிய மகளிர்தின வாழ்த்துகள் சகோதரீ

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........