3/20/2016

தெய்வத்தைப் பழித்தல் நன்றோ!

                                 
எல்லோர்க்கும் நல்லவராய் இருத்தல் ஒன்றே
.....இப்புவியில் யாம்கண்ட இன்பம் என்று
சொல்லாமல் சொல்கின்ற தாயின் பார்வை
......சொர்க்கத்திற் கீடாகும் இந்த மண்ணில்!
பொல்லாப்பே   இங்கெதற்குப்  போதும் எம்மின்
.....பொறுமைக்கே தான்வெற்றி கிட்டும் என்றும்
நல்லோரே நம்பிக்கை கொள்வீர் அந்த
.....நம்பிக்கை வாழ்வளிக்கும் நம்மைக் காக்கும்!

தெய்வத்தைக் குறைகூறி எம்மின் நெஞ்சைத்
.....தேற்றுவதால்  மாறாதாம்  எதுவும் இங்கே !
உய்யவழி தேடினிதம்  மக்கள் மட்டும்
.....ஒன்றுபட்டால் வாழ்வுண்டாம்  உலகில் என்றும்
மெய்யிதனை யாருணர்வார் உணர்ந்தால் போதும்
.....மேதினியில் பட்டதுயர் எல்லாம் தீரும் !
பொய்யான வாழ்வெதற்கு சாமிக் கும்தான்
.....போடாதீர் இனிப்பிச்சை என்றும் வாழ்வில்!

கல்லொன்றைச் சிலையாக்கிக்  கடவுள் என்றோம்
.....கண்காணாச் சக்திக்குப் பின்னே சென்றோம்
எல்லாமும் நீயென்றோம் இன்பம் கண்டோம்
.....இடர்வந்து நீங்குகையில் எல்லாம் தந்தோம்
வல்லதுணை யாய்நின்று எம்மைக் காத்து
.....வாழ்வளித்த தெய்வத்தை வணங்கி வந்தோம்
பொல்லாத போர்ச்சூழல் வாட்டும் போது
.....போதுமிந்த வையகத்தில் தூற்றும் தூற்றல்!

அந்தமிலாச்  சக்தியொன்றின்  அருளைப் பெற்ற
....அடியார்கள் கட்டிவைத்த தலத்தின் தோற்றம்
சிந்தையிலே வந்துதித்தால் போதும் எம்மின்
......சீற்றமதும் சில்வண்டாய்ச் சிதைந்து போகும்!
தந்தால்தான் தெய்வமென்னும் கொள்கை மட்டும்
......தரணியிலே வேண்டாமே அதனால் இன்றே
அந்தாதி முதற்கொண்டே  எம்மைக் காக்கும்
.......அரும்பாக்கள் அத்தனையும் பொய்யென் றாகும்!

என்றோநாம் செய்தபாவம் இன்றெம் வாழ்வில்
.....இன்னலுறக் காரணமாய் இருக்கும் போது
நன்றன்று  தெய்வத்தைப் பழித்தல் இங்கே
......நம்புங்கள் இறையருளே  காக்கும் என்று!
துன்பத்தைப்  போக்கத்தான் என்றும் வாழ்வில்
,,,,,,துணையாக நிற்கின்ற பாடல் போதும்!
அன்பார்ந்த அடியவரே பொறுமை காப்பீர்!
......அவனின்றி ஓர்அணுவும் அசையா திங்கே!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

9 comments:

  1. நம்பிக்கை தானே எல்லாம்....

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நல்ல பாடம் கூறும் கவிதை. நன்றி.

    ReplyDelete
  3. நல்லதொரு படிப்பினையைத் தரும் பாடல்கள்..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. தெய்வத்தைப் பழித்தல் ஆகாது - இவ்
    வையகத்தைப் படைத்து ஆளும்
    தெய்வத்தைப் பழித்தல் ஆகாது
    எள்ளளவேனும்
    தெய்வத்தை எண்ணி வாழும்
    மக்கள் நீடூழி வாழ்வதைப் பாரும்!

    ReplyDelete
  5. ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதக் கவிதை
    மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம்
    அம்மா
    இறை நம்பிக்கை ஊட்டும் வரிகள் வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. நல்லோரே நம்பிக்கை கொள்வீர் அந்த
    .....நம்பிக்கை வாழ்வளிக்கும் நம்மைக் காக்கும்!

    தெய்வத்தைக் குறைகூறி எம்மின் நெஞ்சைத்
    .....தேற்றுவதால் மாறாதாம் எதுவும் இங்கே ! அறிவு கடமை ஆற்றாமல் தெய்வ நிந்தனை சரியில்லை. உயர் கருத்து. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. படித்து இரசித்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........