9/25/2014

கம்பன் புகழைப் பாடு மனமே !


கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே
வம்பன் எனினும் வசப்படுவர்  !-செம்பொன்
நிகர்த்த கவிதைகள் நெஞ்சுள்  இனிக்க
விகர்ப்பம் தணியும் விரைந்து!

விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர் !
நெஞ்சும் உரைக்கும் நினைவாளர்!- அஞ்சாதே
கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?!
செம்பட்டுப் போன்றே செழிப்பு!

அஞ்சும் மனத்தின் அவலம் குறைக்கவே
கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! -நெஞ்சும்
சுவைக்கும்  பொருளைச்  சுரந்தவர் கம்பர் !
அவைக்கும் அவரே அழகு !

பாட்டால்  உயிர்கொடுத்த பாவலர் !கம்பரே 
வாட்டம் தணிக்கவல்ல வாழ்வுமாவார்!- கேட்டாலே
போதும் அரும்பாக்கள்  ஓதும் பொழுதினிலே!
காதும் குளிரும் கமழ்ந்து !

கவிச்சக் கரவர்த்தி கம்பனைப் போற்ற  
புவிமேல் புலரும் புதுமை!- தவிக்காதே
காக்கும் கடவுளும் கம்பரே!இன்பமாய்
வாக்கும் மணக்கும் மலர்ந்து !



அலைந்து திரிந்தே  அமுதெனக் கொண்டேன்!
சிலைபோல் மிளிரும் சிறந்து ! கலைமகள்
அந்தாதி கம்பர் அளித்த செல்வம் ! போற்றுக!
நந்தவனம் ஆகும் நினைவு!

நாமகள்  அன்பினை நாளுமே பெற்றகம்பர் 
வாழ்வினைக் கண்டிட  ஆசையோ !-பாவினைப்
பாடும் மனமேநீ   பாடுக அந்தாதி
கூடிடும் இன்பம் குவிந்து !

கலைவாணி நற்கருணை கண்களிலே தங்கும்!
தலையையும் காக்கும் தழைத்து!- மலையின்ப 
அந்தாதி பாடினால் அன்னைக் கதுபோதும்!
சந்தன வாசத் தமிழ் !

ஆய கலைகள் அறுபத்து  நான்கினையும்
தூயமனம் தந்தருளத் தூபமிட்டார் !- தேயவழி  
தேடும் நிலவுமிங்குத் தேயாது கம்பர்முன்!
பீடும் பிணையும் பெருத்து !

கற்கும் கலைகளைக் கண்டெனத் தந்தருளும் 
பொற்பதம் கண்டு புகழ்ந்தவர் !- அற்புதமாய்
அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
வந்தோதி ஓங்குமே வாழ்வு !


                                                                   
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

  1. ற்கும் கலையாவும் கல்வியும் தந்தருளும்
    பொற்பதம் கண்டு புனைந்தானே!- அற்புதமாய்
    அந்தாதி ஒன்றை அகம்குளிர கம்பபிரான்!
    இந்தசுகம் ஏற்கும் இனிப்பு !
    கம்பன் பற்றிய நல்லதொரு பாடல். வாழ்த்துகள் தோழி!

    ReplyDelete
  2. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிதை பாடும் எனும் புகழ் படைத்த கம்பனுக்கு ஒரு புகழ் மாலை! சரஸ்வதி பூஜை என்றாலே அவன் பாடிய சரஸ்வதி அந்தாதிதான் முதலில் வந்து நிற்கும் என்பதை ய்ணர்ந்து கம்பனையும் கல்விக் கடவுளையும் ஒருசேரப் பாடி மகிழ்ந்த உங்கள் புலமைக்கு வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
  3. கவிச் சக்கரவர்த்திக்கு
    மிக அழகான பாமாலை
    தொடுத்தீர்கள் சகோதரி...
    வாசிக்க வாசிக்க வியக்க வைக்கிறது வரிகள்..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வணக்கம் தோழி!

    கம்பன் கவிபோற்றிக் கன்னித் தமிழ்வளர்த்த
    நம்பன் நமதாசான் நல்வரமே! - செம்பொன்
    நிகர்மொழி சீரழகில் நீதரும் பாக்கள்!
    பகருமே நின்பெருமை பார்!

    பேச்சிழந்தேன் உமது வெண்பாக்கள் கண்டு!

    கொள்ளை கொள்ளும் கருத்துச் செறிவு! மிகச் சிறப்பு!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  5. கம்பன் கவிபாடும் சக்ரவர்த்தி அல்லவா!

    ReplyDelete

  6. வணக்கம்!

    மாமன்னா் போற்றுகின்ற பாமன்னர் கம்பரை
    நாமன்னர் கற்று நலம்பெறுவார்! - வா..மன்னும்
    சீா்கள்! வளங்கள்! செழுந்தமிழ்ப் பொன்னெறியால்
    போர்கள் ஒடுங்கும் புதைந்து!

    கம்பன் கழலிணை கண்டுவக்கும் அம்பாளை
    எம்மின் தமிழால் இசைக்கின்றேன்! - செம்பவள
    வள்ளி! சகலகலா வல்லி எனும்புகழை
    அள்ளி மகிழ்க அணிந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  7. தாங்கள் வடிக்கும் கவிதையைக் கண்டாலே
    மூங்கையும் கூட மொழிபேசும் - ஏங்குகிறோம்,
    இன்னும் தருக இனிய தமிழ்க்கொண்டல்
    மின்னப் பொழிக மழை!

    ReplyDelete
  8. வெண்பா வடிவில் கம்பனை புகழ்ந்த விதம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அலைந்து திரிந்து அமுதெனக் கொண்டேன்!
    சிலையும் மகிழும் சிவந்து ! கலைமகள்
    அந்தாதி கம்பபிரான் தந்தசெல்வம்! போற்றுக!
    நந்தவனம் ஆகும் நினைவு!//

    அருமையான கவிதை நவராத்திரி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வணக்கம் சகோ அம்பாள் !

    கம்பன் கவியமுதை காப்பியத் தேனூற்றை
    உம்பரும் உள்ளத்தால் உண்டுவப்பர் - அம்மையே
    உன்திறன் கண்டேன் உளம்'மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
    என்னிதய பூக்கள் எடுத்து !

    அழகான பாக்கள் அத்தனையும் அருமை
    ஐயாவும் வாழ்த்திய சகலகலா வல்லியே
    வாழ்க வளமுடன் !
    தம 8

    ReplyDelete
  11. அருமையான கவிமாலை

    ReplyDelete
  12. கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்.
    அம்பாள் அடியாள் வீட்டு அணிலும் கவி புனையும் !

    ReplyDelete
  13. கம்பன் புகழ் பாடும்
    தங்கள் நற்கவி
    அருமை

    ReplyDelete
  14. சுந்தர(அழகு)த் தமிழில் பாப்புனைந்த
    அந்தக் கம்பன் கதை
    எந்தக் கவிஞனும் படித்தே ஆகவேண்டும்
    அருமையான பதிவு
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  15. கம்பனின் புகழ் அவரது தமிழுக்கு நிகராக தங்களிடமிருந்து அருமையான கவிதை வடிவில்...ஆஹா!!!

    ReplyDelete
  16. மிகவும் அருமையான கவி. கவிதை வடிவில் பதிவு அதனினும் அருமை.

    ReplyDelete
  17. அருமையான பாமாலை....

    பாராட்டுகள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........