12/07/2014

நினைவுகள்

                            


நினைவுகள் நெருங்கி வந்து 
        நெஞ்சினை மெல்லத்  தூண்டும் !
தனைமறந் ததனால் உள்ளம் 
       தவிப்பினை விரைந்தே ஏகும்  !
முனைகிறேன் இருந்தும் என்னுள் 
       முடங்கிய நினைவைச் சொல்ல
தினையள வெனினும் இன்பம் 
       திரண்டிட வாழ்த்து வீரே ! 

கலைகளை சுவைக்கும் கண்கள் 
       கவலையில் உறைந்த நேரம் 
சிலைகளை வடித்துப் பெற்ற 
       சிறப்பினை நினைக்கும் போது 
மலையென மகிழ்ச்சி என்னுள் 
       மறுபடி வளரக் கண்டேன் !
அலைகடல் கடந்தும் இன்றே 
      அவைதரும்  உயர்வே உச்சம் !

இனியன எதுவோ வாழ்வில் 
     இவைகளை நினைத்துப் பார்ப்போம் 
தனிமையை அதுதான் போக்கும் 
      தகுதியை  எமக்குள் தேக்கும் !
கனிவுடன் பழகும் நட்பே 
       கரும்பென இனிக்கும் வாழ்வில் !
சனிதரும்  துயர்கள்  வேண்டாம் 
      சகலரும் இணைவோம் வாரீர் !

பகைவரை நினைத்து நாளும் 
     பகையினை வளர்த்தால் துன்பம் 
வகையிலா வருத்தம் தந்து 
     வருந்திட முடக்கும் அன்றோ !
நகைப்பவர் நகைத்தால் என்ன !?
      நமதுயிர் நமக்கே சொந்தம் !
தொகைகளை மறந்து வாழ்வில் 
     தொடருக சிறந்த நட்பை !

நினைவது சிறந்து நின்றால் 
      நினைப்பவை பெறுமே வெற்றி !
அனைவரும் மகிழ்ச்சி காண 
      அகமது சிறக்க வேண்டும் !
மனைகளில் தொடரும் யுத்தம் 
      மலையென வளர்தல் நன்றோ !
வினையிதைத் தடுத்தே நாளும் 
     வியப்புற உயர்வோம் வாரீர் !

உறுதியை மனதில் ஏற்க
     உயர்தர உணர்வு வேண்டும் !
குறுகிய நினைப்பால் உள்ளக் 
     குமுறலே எதிலும் தோன்றும் !
இறுதியும் முதலும் என்றே  
    எடுத்திடும் முடிவும் மாறும் !
பொறுமையை உணர்த்தும் சக்தி 
    பொதுவினில் நினைப்பாம் கேளீர் !

நெஞ்சக் கூட்டில் நினைவுகளாய் 
      நித்தம் பொங்கும் சிலதுயரை 
வஞ்சம் செய்து அடக்கையிலே 
      வாழ்வே மாயம் எனவலிக்கும் !
பஞ்சம் வந்தும் மடிந்திடவே 
      பாவி மக்கள் வரைந்ததிட்டம்
மிஞ்சும் எங்கள் உறவுகளை 
      மீளா திங்கே பறிக்கிறதே ! 

கொல்லும் இந்த நினைவுகளால் 
    கோதை நெஞ்சம் முடிவுறுதே !
வெல்லும் என்ற பலகனவும் 
    வெட்டிச் சாய்த்து மடிகையிலே
புல்லும் கண்ணீர்த் துளிவிடுதே 
    பூவும் பிஞ்சும் உயிர்த்திடத்தான் !
சொல்லும் போதும் வலிக்கிறதே 
    சோகம் பொங்கும் நினைவுகளை !

பெண்ணைப் போற்றும் புலத்தினிலே  
    பேய்கள் தந்த பெருந்துயரம் 
கண்ணை விட்டும் மறைந்திடுமா ?!
   கண்டேன் இன்னும் கலங்குகிறேன் 
அண்ணன் தம்பி தலையிழந்தே  
    அங்கும் இங்கும் கிடக்கையிலே 
எண்ணம் உற்ற வலியதனை 
    எங்கே சென்று எடுத்துரைப்பேன் !

                                   


                             தாயே !
தேசம் முழுதும் மலர்ச்சோலை 
    தேடி மலரும் நிலைவேண்டும்!
பாசக் கரத்தை இணைத்திங்கே 
   பாலும் பழமும் தரவேண்டும் 
கோசம் எதற்கு அதுவேண்டாம் 
   கோடி நலங்கள் பெறவேண்டும் 
நேசம் நிறைந்த தமிழ்த்தாயின்  
   ஏக்கம் தணித்து அருள்செய்வாய் !

தேன் சிந்தும் பாமாலைகளைத் தினமும் தொடுக்கும் எங்கள் கவிஞர் ஐயா கி .பாரதிதாசனார் என்னிடம் கொடுத்த "நினைவுகள்" என்ற தலைப்பிற்கேற்ப இவ் விருத்தப் பாமாலையைத் தொடுத்துள்ளேன்.பாரதிதாசன் ஐயாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் . அன்பு நெஞ்சங்களே தங்களின் ஆதரவிற்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி .





  

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

23 comments:

  1. ஏக்கம் நிறைந்த நினைவுகள்...

    அருமையான விருத்தங்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !

      முதல் வருகைக்கும் முத்தான கருத்திற்கும் மிக்க நன்றி தோழி
      அருணா !

      Delete
  2. தன்னம்பிக்கை கொடுக்கும் வரிகள்! துயரை ஒதுக்கி வாழ்வை சந்திக்க வைக்கும் வரிகள்! அருமை தோழி!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !

      மிக்க நன்றி தோழி கிரேஸ் !தங்களின் உற்சாகம் ஊட்டும்
      கருத்தினைக் கண்டு மகிழ்ந்தேன் .

      Delete
  3. //உறுதியை மனதில் ஏற்க
    உயர்தர உணர்வு வேண்டும் ///
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
  4. // பகைவரை நினைத்து நாளும்
    பகையினை வளர்த்தால் துன்பம் //

    அனைத்து வரிகளும் அருமை அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அறுசீர் விருத்தங்கள் அருமை சகோ!
    நினைவுகள் படிப்போரின் நெஞ்சத்தைக் கிளறிவிட்டுவிடும்.
    தங்கள் கவிதைகள் சிறப்பானவை!
    தங்களின் மரபைத் தொடர்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  6. காலம் ஒருநாள் மாறும் - நம்
    கவலைகள் யாவும் தீரும்!..

    கலங்க வேண்டாம்!..

    ReplyDelete
  7. நினைவுகள் விருத்தப்பாமாலை அழகு. சும்மா தமிழ் வந்து கொட்டுகிறது தோழி உங்களிடம் வாழ்த்துக்கள். த.ம +1

    ReplyDelete
  8. நினைவது சிறந்து நின்றால்
    நினைப்பவை பெறுமே வெற்றி !//

    நினைப்பவை அனைத்தும் வெற்றி ஆகட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வணக்கம் தோழி!

    உளம்நிறை உவகை கூட்டி
       உரைத்திடும் விருத்தம் நன்று!
    இளவெயில் காட்சி போன்று
       இதந்தரும் நினைவும் நின்று!
    களங்கமே சிறிதும் இன்றிக்
       கனவுகள் நனவே போன்று
    வளம்மிக வாகக் காண
       வனப்புடன் ஓங்கும் வாழ்வே!

    அருமையான விருத்தங்கள்! சிறப்பு!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  10. நினைவுகளை கவிதையால் வடித்தவிதம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. நினைவுகளை கவிதையால் வடித்தவிதம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அருமையான நெடுங்கவி.

    ReplyDelete
  13. கவிதையான நினவுகள் அருமை அன்புப் பேத்தி!

    ReplyDelete
  14. கனிவுடன் பழகும் நட்பே கரும்பென இனிக்கும் வாழ்வில் !//உண்மை

    ReplyDelete
  15. நினைவுகள் மாறாதது

    ReplyDelete
  16. நினைவுகள் கவிதை வரிகளாகியதோ! அருமை!

    ReplyDelete
  17. நினைவுகளின் ஏக்கத்தை இவ்வளவு தாக்கத்தோடு கூறியமை மனதில்நின்றது. பாராட்டுகள்.

    ReplyDelete

  18. வணக்கம்!

    அலையெனத் தொடா்ந்து வந்தே
       அகத்தினில் பாய! மின்னும்
    சிலையென அழகை யூட்டிச்
       சிந்தையை ஈர்க்க! பாடும்
    கலையெனக் கருத்தைக் கவ்விக்
       கனிச்சுவை நல்க! நெஞ்சுள்
    மலையென நினைவை ஏந்தி
       வழங்கிய அம்பாள் வாழ்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........