10/01/2015

சீதையை வரவேற்கின்றேன்!

                           

பிராஞ்சு நாட்டில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய மன்றத் திறப்பு விழாவில் பங்கேற்று   நான் பாடிய பாடல் !   

  இறைவணக்கம்!

உம்பர்களும் வீற்றிருக்கும் பாட்ட ரங்கில்
 .........ஒருபறவை சிறுபறவை பாட வந்தேன் !
எம்பிரானே நின்கருணை எனக்கு வேண்டும்
..........இன்பத்தேன் என்நாவில் சிந்த வேண்டும் !
கம்பன்தன் புகழ்பாடும் பிராஞ்சு நாட்டில்
.........கைதட்டி எவர்கையும் சிவக்க வேண்டும் !
அம்பாளின் அடியவள்நான் உன்னை வேண்டி
 .......அரும்பாக்கள் பாடிடவே அருள்வாய் இங்கே !

   தமிழ்த்தாய் வணக்கம்!

என்னுயிரே! பொன்மொழியே! என்றும் வாழ்வில்
 .........இன்பத்தேன் சிந்திடத்தான் எங்கும்   கண்டேன் !
நன்மைபல தந்திடவே  என்றன் நாவில்
..........நடம்புரியும் உனைமறவேன்! எழுதும் ஏட்டில்
பொன்னொளியை வழங்கிடுவாய் !மேடை எங்கும்
..........புகழொளியைத் தந்திடுவாய் ! வையம் தன்னில்
முன்பிறந்த முத்தமிழே  மூச்சே! பேச்சே!
 .........முக்கனியே ! உன்னடியை வணங்கு கின்றேன் !

   தலைவருக்கு வணக்கம்!

வண்டமிழால் சொற்போரை நிகழ்த்தி நாளும்
 .........வளமான வாழ்வளித்தாய் வையம் தோறும் !
கண்டுஉள்ளம் களிப்பெய்தக் கனியின் சாற்றைக்
..........கவிதையெனத் தந்துவக்கும் ஆசான் உன்னை
மண்மீது மாதவமாய் நானும் பெற்றேன் !
......... மனம்மகிழ்ந்து மலர்தூவி வணங்கு கின்றேன் !
எண்ணம்போல் வரவேற்றுப் பாட வைப்பாய்
.........இச்சபையில் என்புழும் ஓங்கும் வண்ணம் !    

     அவை வணக்கம்!

முத்தமிழைத் தம்முடலுள் மூச்சாய்த் தாங்கி
 ........முன்னின்று காப்பவர்கள் என்னை நோக்க
சித்தமெல்லாம் குளிரமெல்லச்   சிறைப்பட் டேனே !
 ........சிறுபறவை போலத்தான்  அகப்பட் டேனே !
வித்தைகற்ற பாவலரும் விரும்பிக் கேட்க
.........வீறுகொண்டு பாப்புனைந்து வந்தேன் இங்கே
இத்தரையில் என்புழும்  ஓங்கும் வண்ணம்
........இணையில்லா இச்சபையை வணங்கு கின்றேன் !


  சீதையை வரவேற்கின்றேன்!

ஊரறியும் உலகறியும் உன்றன் நாமம்
........உத்தமியே பத்தினியே சீதை என்றால்
பேரறிவு பெற்றவரும் பெருமை கொள்வர்
........பெண்தெய்வம் நீதானே இந்த மண்ணில் !
ஆரவாரப் படுகின்றார் மக்க ளெல்லாம்
........அம்புவியில் நின்னருளைப் பெற்றால் போதும்
ஈரவிழி பட்டதுன்பன் எல்லாம் ஓடும் !
........இனியவளே நின்னருளால் இன்பம் கூடும் !

மன்னாதி மன்னரோடும்  போட்டி போட்டு
..........மண்மீது சிவதனுசை அன்று டைத்தே
அன்னைக்குத் திருராமன்  மாலை யிட்ட
 .........அழகான காட்சிக்கு ஈடும் உண்டோ !
இன்னல்கள் நிறைந்தாலும் கற்பின் ஆற்றல்
 .........இவ்வுலகை வெல்லுமென வாழ்ந்தாய் அம்மா !
தன்னுயிராய்த் திருமாலைக் கொண்ட  உன்போல்
..........தரணியிலே பதிவிரதை யார்தான் உள்ளார்!

 சித்தத்துள் உன்னாமம் செதுக்கி வைத்தேன்
 ..........சிந்திக்கும் போதெல்லாம் சிரத்தைக் காத்தாய் !
இத்தரையில் எனைவாழ வைத்த சக்தி
 .........இனியவளே நீஎன்றே இன்பம் கொண்டேன் !
நித்தமுனைப் போற்றுகின்றேன் !நிலத்தைக் காக்கும்
........... நிரந்தரியே! பெருந்தேவி தாயே !இங்குச்
சத்தியமாய் ஆணையிட்டுச் சொல்வேன் நானும்
.........சங்கடத்தைத்  தீர்க்கவல்ல சக்தி நீயே !

இரக்கமற்ற இராவணன்தன் செயலால், உன்றன்
.........இராமனையே பிரிந்தகாலம் !வாட்டும் பொல்லா
அரக்கருக்கோர் பாடமென  எண்ணும்  போது
..........அவதார சக்தியுன்னை நெஞ்சம் போற்றும் !
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் சீதை அம்மா
..........சித்தத்துள் உனைத்தாங்கும்   பக்தர் காண
வரவேண்டும்  வல்லகம்பன் கழக மன்றில்
 ........வரவேற்கும் என்பாடல் கேட்க வேண்டும் !

சிங்காரத் தேவதையே! செல்லப் பெண்ணே !
.........சீதையுனை வரவேற்றேன் கண்ணீர் மல்க!
மங்காத பேரொளியே! மானே !தேனே !
.........மன்றத்தில் வந்தமர்வாய் மாட்சி ஒங்க!
பொங்குதமிழ் ஆர்வலர்கள் சங்க மிக்கும்
.........பொன்விழாவில் நின்னெழிலைக்  கண்டால் போதும்
அங்கமெல்லாம் அசைந்தாடும் பூப்போல் மெல்ல
 .......அடியவளின் அழைப்பேற்று  வா ..வா தாயே !

   

                                           



                                                                       

                                                                       தொடரும் ................
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

  1. எங்களையும் விழா நிகழ்விடத்திற்குக் கொண்டு சென்றுவிட்டீர்கள், அழகான கவிதை, புகைப்படங்கள் மூலமாக. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தாங்கள் - மேன்மேலும் சிறப்புகளை எய்திட வேண்டும்..
    உங்களுடன் நாங்களும் மகிழ்ந்திட வேண்டும்!..

    ReplyDelete
  3. வணக்கம் சகோ !

    என்னவொரு சொல் அடுக்கு கவி அருவியாய்க் கொட்டுகிறது
    தொடர வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன் !

    தம +1

    ReplyDelete
  4. கண்ணாரக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தேன் சகோதரி!
    எண்ணிடமுடியாதது உன் திறமை!

    கவியுலகில் அரசோச்ச வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. என்ன அருமையான கவிதைகள்! தங்களையும் கண்டோம் நிழற்படத்தில்! சகோதரி அம்பாளடியாளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்ததுண்டு பல சமயங்களில். தங்களைக் கண்டதிலும் மிக்க மகிழ்வு கொண்டோம் சகோதரி! வாழ்த்துகள்! தாங்கள் மேன் மேலும் பல விருதுகள் பெற்று கவி பாட வேண்டும் என்று வாழ்துகின்றோம். பிரார்த்தனைகளுடன்...

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........