5/18/2014

விடியலைத் தேடி ஓடுகின்றோம்விடியலைத் தேடி ஓடுகின்றோம்
  வீதியில்  நின்றே வாடுகின்றோம்
அடியவர்  குறைகளைக் கேட்காயோ
   ஆடிடும் தில்லைக் கூத்தனே நீ?.... !
படியவே  மறுக்குது மனமிங்கே இது
   பாசமா  பக்தியா  சொல்லிங்கே ?...
கொடியவர் வஞ்சகர் வாழ்வதற்கே -பல
    கோடி   நன்மைகள் அருளுகின்றாய் !!

விதி என   அனைத்தையும் மறந்திருந்தோம்
         விரும்பியே உனதடி தொழுது நின்றோம்
சதி செய்யும் மனத்தவர் மகிழ்ந்திடவே
         சாம்பலாய் எமதுடல் வேகுவதா !
அதி உயர் சக்தியே ஆனந்தமே -எமை
          ஆட்கொள்ளும் எங்கள் பெருமானே
கதி அது உனையன்றி யாதுமில்லை-எமைக்
           காத்திடிட இங்கே எழுந்தருள்வாய்

பெருகிய    துன்பங்கள் மடியட்டும்
  பேரொளி  எங்கும் திகழட்டும்
கருகிய       உள்ளங்கள் சிரிக்கட்டும்
  காதலால்  மும்மாரி பொழியட்டும்
அருகிய       நற்புகழ் ஓங்கட்டும்
   ஆனந்தம்  நெஞ்சினிலே தங்கட்டும்
உருகியே    உனதருள் வேண்டுகின்றோம்
     உமைய   வளோடிங்கு எழுந்தருள்வாய்

 புலியுடை அணிந்த நாதனே -மனம்
    புண்பட  எமையிங்கு வைக்காதே
கலியுகம்   காத்திட  எழுந்தருள்வாய்
   கண்களில் ஆனந்தம்  தந்தருள்வாய்
பொலிவுற  உன்னாலே நீதியிங்கே
    புதைந்திட வேண்டும் அநீதியெங்கும்
நலிவுறும்  அடியவர் மனம் தழைக்க
    நமச்சி வாயனே எழுந்தருள்வாய் ...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

 1. ஈசன் அனைவருக்கும் வேண்டியன தந்திடட்டும்....

  த.ம. +1

  ReplyDelete
 2. பெருகிய துன்பங்கள் மடியட்டும்
  பேரொளி எங்கும் திகழட்டும்
  கருகிய உள்ளங்கள் சிரிக்கட்டும்
  காதலால் மும்மாரி பொழியட்டும்
  அருகிய நற்புகழ் ஓங்கட்டும்
  ஆனந்தம் நெஞ்சினிலே தங்கட்டும்
  உருகியே உனதருள் வேண்டுகின்றோம்
  உமைய வளோடிங்கு எழுந்தருள்வாய்//

  அவனின் அருளால் நல்லதே நடக்க விழைவோம் பிரார்த்திப்போம் சகோதரி! தமிழும் அருமை! வரிகள் அனைத்துமே அருமை! ரசித்தோம்!

  புலித்தோலோனின் படம் மிக அழகாக உள்ளது சகோதரி!

  ReplyDelete
 3. கலியுகம் காத்திட எழுந்தருள்வாய்
  கண்களில் ஆனந்தம் தந்தருள்வாய்
  பொலிவுற உன்னாலே நீதியிங்கே
  புதைந்திட வேண்டும் அநீதியெங்கும்
  நலிவுறும் அடியவர் மனம் தழைக்க
  நமச்சி வாயனே எழுந்தருள்வாய் .//
  அருமையான போற்றி.
  ஆனந்தம் அருள விரைவில் வரட்டும்.

  ReplyDelete
 4. பொலிவுற உன்னாலே நீதியிங்கே
  புதைந்திட வேண்டும் அநீதியெங்கும்
  நலிவுறும் அடியவர் மனம் தழைக்க
  நமச்சி வாயனே எழுந்தருள்வாய் ...// ஈசன் விரைவில் அருள்பாலிக்கட்டும்! அருமையான கவிதை! நன்றி!

  ReplyDelete
 5. பெருகிய துன்பங்கள் மடியட்டும்
  பேரொளி எங்கும் திகழட்டும் = அருமை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. கலங்கிடும் நன்மக்கள் கண்ணீர் துடைப்பான்
  உலகுடையான் எங்கும் உயிர்த்து !

  ஆஹா என்னே ஒரு வரிகள் அத்தனையும் அருமை

  வேண்டுதல்கள் நிறைவேறும் - உன்
  வேதனைகள் தான்மறையும்
  ஆண்டுகள் போனாலும் - ஈழ
  அமைதியும் வந்துசேரும்..!

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete

 7. வணக்கம்!

  கூத்தனை வேண்டி கொடுத்த விருத்தங்கள்
  கோத்துள மாலையென கூறு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 8. பெருகிய துன்பங்கள் மடியட்டும்
  பேரொளி எங்கும் திகழட்டும்
  கருகிய உள்ளங்கள் சிரிக்கட்டும்

  ReplyDelete
 9. வணக்கம்

  காலங்கள் ஆண்டுகள் கடந்த பொழுதும் எம்நெஞ்சில் அனையாத தீபமாக எரிகிறது..எம் உறவுகளின் நினைவுகள்... கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

 10. "புலியுடை அணிந்த நாதனே -மனம்
  புண்பட எமையிங்கு வைக்காதே" என்றும்

  "நலிவுறும் அடியவர் மனம் தழைக்க
  நமச்சி வாயனே எழுந்தருள்வாய்..." என்றும்
  இறைவனை வேண்டுதல் அழகு.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........