2/13/2015

வா தாயே !


அன்னைத்  தமிழேநல் ஆரமுதே  எந்நாளும் 
உன்னைத் தொழுதேன்  உயிராக !-என்னைத் 
துயர்கள்தீண்  டாதினியும்  தூயவளே காப்பாய்!
அயர்வென்றும்  சாராவண் ணம்! 

அன்னைத் தமிழே ஆன்மாவே
   ஆசை பெருக நின்றேனே 
என்னைப் புவிமேல் தாங்காயோ 
     என்றும் உணர்வு குன்றாமல்!
கன்னல் மொழியைக் கற்றால்தான்
    காலம் இனிக்கும் எந்நாளும்!
இன்னல் இனியும் வேண்டாமே
     இன்பத் தமிழே வா.. தாயே !

வஞ்சிக் கொடியென் ஏக்கத்தை
    வந்து தணிக்க மாட்டாயோ !
கொஞ்சிக் குலாவும் பொற்காலம்
    கொண்டு  வரவும் மாட்டாயோ!
நெஞ்சில் இடரை  நான்தாங்கி
    நேற்று வரையும் வெந்தேனே !
பஞ்சில் நெருப்பைப் போல்பற்றி
    பாசம் விளைத்து வா..தாயே !

பாடும் பறவை நீயின்றி
    பாதை தவறிப் போகாதோ !
நாடும் செழிக்க வா...தாயே
    நல்ல பொருளைத் தா..தாயே!
வாடும் மனத்தின் வாட்டத்தை 
    வந்து தணிப்பாய் எப்போதும்  
தேடும் சுகமும் நீயன்றோ !
      தேடி எனைநீ வா தாயே !
                                                 
                                                                 
    
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

  1. வணக்கம்
    அம்மா.

    சொற்சுவை ததும்ப ஓதிய வரிகளை கண்டு உகந்தது மனம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. //அள்ளிக் கொடுக்க இன்பத்தை
    அன்னைத் தமிழே நீவேண்டும் !
    தள்ளி இனியும் நிற்காமல்
    தாகம் தணிக்க வா..தாயே!..//

    தாங்கள் விரும்பும்படியே - தாய் வருவாள்!..

    ReplyDelete
  3. நாடும் செழிக்க வா...தாயே
    நல்ல பொருளைத் தா..தாயே!//

    நாடு செழிக்க அருள், பொருள் இரண்டும் தருவாள் தாய்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  4. அருமையான பா வரிகள்...

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. வஞ்சிக் கொடியென் ஏக்கத்தை
    வந்து தணிக்க மாட்டாயோ !
    கொஞ்சிக் குலவும் பொற்காலம்
    கொண்டு வரவும் மாட்டாயோ!//

    தமிழ் உங்களிடம் விளையாடும் போது அன்னை வந்து தங்களது ஏக்கத்தைத் தீர்க்காமால் இருப்பார்!!

    அருமையான வரிகள்!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........