தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர் !
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்!-முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று வாழும் உயிர் !
சிங்காரத் தண்டமிழின் சீர்கண்டு மெய்சிலிர்க்கும் !
மங்காத வாழ்வளிக்கும் மண்மணக்கும் !-தங்கத்
திருப்புகழால் சிந்தைக்குள் தேன்பாயும்! நாளும்
பெருக்கெடுக்கும் நல்லின்பப் பேறு !
செந்தமிழ்க் காவலனைச் சிந்தையுள் வைத்துப்பா
முந்துதுவே இன்பத்துள் மூழ்கடித்து !-கந்தன்
அருள்பெற்று வாழ அனுதினம் பாடு !
திருப்புகழால் தீரும் துயர் !
கந்தனையும் கண்ணாரக் கண்டிடலாம் வாழ்நாளில்!
சிந்தையையும் உய்விக்கும் சீராக்கி !- வந்து
திருப்புகழைப் பாடுங்கள் தீவினைகள் ஓடும் !
அருள்பெற்று வாழும் அகம் !
பன்னிருகை வேலவனே பாடிடும்நன் நாவினிலே
இன்னமுத வார்த்தைதனை இட்டதனால் !-அன்பே
அருணகிரி நாதரையும் ஆட்கொள்ளத் தேனாய்ப்
பெருகியதே யாம்பெற்ற பேறு !
பாலுண்டு தேனுண்டு பாரினிலே யாவுமுண்டு !
காலுண்டு கையுண்டு கண்ணுமுண்டு !-நாலும்
அறிந்திங்கு வாழ்ந்தாலும் அன்பில்லாக் காட்டில்
வறியோர்க்கும் கிட்டும் வழி !
