7/31/2015

திருப்புகழைப் பாடு மனமே !

                                   
                                           

தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர் !
எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்!-முத்தாம்
திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில்
உருப்பெற்று  வாழும் உயிர் !

சிங்காரத் தண்டமிழின்  சீர்கண்டு மெய்சிலிர்க்கும் !
மங்காத வாழ்வளிக்கும் மண்மணக்கும் !-தங்கத்
திருப்புகழால் சிந்தைக்குள்  தேன்பாயும்! நாளும்
பெருக்கெடுக்கும் நல்லின்பப் பேறு !

செந்தமிழ்க் காவலனைச்  சிந்தையுள் வைத்துப்பா
முந்துதுவே இன்பத்துள்  மூழ்கடித்து !-கந்தன்
அருள்பெற்று வாழ அனுதினம் பாடு !
திருப்புகழால் தீரும் துயர் !

கந்தனையும் கண்ணாரக்  கண்டிடலாம்  வாழ்நாளில்!
சிந்தையையும் உய்விக்கும் சீராக்கி !- வந்து
திருப்புகழைப் பாடுங்கள்  தீவினைகள் ஓடும் !
அருள்பெற்று வாழும் அகம் !

பன்னிருகை வேலவனே  பாடிடும்நன் நாவினிலே
இன்னமுத வார்த்தைதனை  இட்டதனால்  !-அன்பே
அருணகிரி நாதரையும் ஆட்கொள்ளத்  தேனாய்ப்
பெருகியதே யாம்பெற்ற பேறு !

பாலுண்டு தேனுண்டு பாரினிலே யாவுமுண்டு  !
காலுண்டு கையுண்டு கண்ணுமுண்டு  !-நாலும்
அறிந்திங்கு வாழ்ந்தாலும் அன்பில்லாக் காட்டில்
வறியோர்க்கும் கிட்டும்  வழி !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. சிறப்பான பாமாலை அம்மா...

    ReplyDelete
  2. திருப்புகழைப் படித்ததில்லை.திருப்புகழ் பாடப்பெற்ற கோயில்களுக்குச் சென்றுள்ளேன். தங்களது கவிதை திருப்புகழைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.

    ReplyDelete
  3. வணக்கம் தோழி!

    நீல மயிலோடு நெஞ்சிற் குடியிருக்கும்
    கோல முருகனைக் கூவினை! - சீலமுடன்
    காலம் முழுதும் கவிபாடும் தோழியுனை
    ஞாலமே வாழ்திடும் நன்கு!

    மிக அருமையான வெண்பாமாலை தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பக்திமணம் கமழும் வெண்பாக்கள் அருமை

    ReplyDelete
  5. சந்தத் தமிழ்மாலை சூட்டி முருகனையே
    வந்தித்த வாய வருணகிரி - சிந்தை
    படிய வினையொடியப் பாடுவெண் பாக்கள்
    இடி‘வெட்டச் சாயும் இருள்!

    அருமை இனிமை.

    த ம கூடுதல் 1

    நன்றி.

    ReplyDelete
  6. நல்ல பாடல்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

  8. வணக்கம்!

    செவ்வேள் திருவருளைச் செப்பும் மனத்துக்குள்
    எவ்வேல் தடுத்தும் இடர்வருமோ? - பொங்கும்
    அரும்புகழ் எய்திடவே அள்ளிப் பருகு!
    திருப்புகழ்த் தேனைத் தினம்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. திருப்புகழ் கேட்டு தினமும் மகிழ
    கருவாம்கற் கண்டுக் கவிகள் ! - திருமுருகன்
    வென்றுன் துயர்துடைக்க வந்திடுவான்! விண்ணதிர
    வண்டமிழ் பாக்கள் வழங்கு!

    அருமை அருமைம்மா ! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்...

    உங்கள் வரிகளில் எங்கள் மனம் உவந்த முருகன்! தமிழ் கடவுள் ஆட்சி புரிகின்றார் சகோதரி!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........