7/29/2015

கனவு காண் அப்துல் கலாம் போல் கனவு காண் !

                                   
கனவைத்தான் காண்என்றார் அப்துல் கலாமும் !
மனமே இதுபோதும்   மண்ணில் ! - தனமும்   
உயர்கல்விச் சீரும் உனைச்சேரும்! நாளும் 
அயர்வின்றி நற்பணிகள் ஆற்று! 

மண்ணுலகைப் பொன்னுலகாய்  மாற்ற ஆசை !
          மனிதநேயம் கற்பித்து வாழ  ஆசை !
பெண்ணினத்தின் பெருமைதனைப் புகட்ட ஆசை !
          பெரும்துன்பம் தரும்வெறியை விரட்ட ஆசை !
இன்னலுறும் மக்களுக்காய் உழைக்க  ஆசை !
          இருக்கின்ற பொருள்தந்து காக்க ஆசை !
வன்முறையை  அன்பேந்தி அகற்ற  ஆசை !
          வரும்துன்பம் போக்கும்நூல் வடிக்க ஆசை !

இன்றமிழை  உலகெங்கும்  பரப்ப ஆசை !
        இயன்றவரைப் பிறமொழியைப் பயில ஆசை !
நன்மைதரும் இயற்கையினைக்  காக்க ஆசை
        நாடெங்கும்  மரம்வளர்த்துப் பார்க்க ஆசை !
அன்பினாலே அகிலத்தை ஆள   ஆசை !
        அடிமையெனும் சொல்லகற்றி மீள  ஆசை !
தன்மானத் தமிழரினம் காக்க ஆசை !
        தமிழீழம் பெற்றுலகில் பார்க்க ஆசை !

பெண்ணினத்தின் பாதுகாப்பை உயர்த்த ஆசை !
          பேச்சுரிமைச் சட்டத்தைப் பேண  ஆசை !
மண்ணிலுள்ள உயிரினத்தைக் காக்க ஆசை !
           மதவெறியைச்  சுயநலத்தைப் போக்க ஆசை !
 எண்ணம்போல் விலைவாசி  குறைக்க   ஆசை !
           இறப்பளிக்கும் கலப்படத்தை ஒழிக்க ஆசை !
கண்ணிழந்த சமூகத்தைத் திருத்த  ஆசை !
         கடவுளுண்டு என்றுமிங்கே  உணர்த்த ஆசை !

கல்விதானம் செய்துநாட்டைக்  காக்க ஆசை
       கவிஞரெனும் பட்டத்தை ஏற்க ஆசை !
இல்லாதார் படும்துயரைப் போக்க ஆசை
        இயன்றவரை விவசாயம் செய்ய  ஆசை !
நல்லோரை அரசியலில் இருத்த ஆசை !
        நஞ்சாகும்  இலஞ்சத்தை ஒழிக்க ஆசை !
உல்லாசப் பறவைகளைக் காண   ஆசை
       உழைப்பாளி  உயர்வுதனைப் பேண ஆசை !

உதவுகின்ற கரங்களோடு  இணைய  ஆசை
        ஊரெங்கும் ஊனமுற்றோர்க் குதவ ஆசை !
விதவைக்கும் மறுவாழ்க்கை  அளிக்க ஆசை !
        விரும்பாத சடங்குகளை விலக்க ஆசை !
பதவிவெறி பாலியல்நோய் தடுக்க ஆசை !
         பாரெங்கும் யுத்தத்தை ஒழிக்க   ஆசை !
முதலமைச்சர் எனச்சிலநாள் இருக்க ஆசை !
         முடிந்தவரை நினைத்தபலன் அளிக்க ஆசை !
       
மண்மீது புனிதர்களைக் காண ஆசை !
          மறுபடியும் தாய்மண்ணில் வாழ ஆசை !
புண்பட்ட உள்ளங்களைத் தேற்ற ஆசை !
          புன்னகையைத் தந்துணர்வை  மாற்ற ஆசை !
விண்ணாளும் தெய்வத்தைப் போற்ற ஆசை !
          விடியலையே வேண்டிவிளக் கேற்ற ஆசை !
என்னாசை அத்தனையும் இங்கே தீர
        என்னவழி என்றிங்கே இயம்பு தாயே ?..
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

 1. அருமை அம்மா... இந்த ஆசையெல்லாம் நடக்கக் கூடியதே...

  ReplyDelete
 2. மறைந்த மாமேதை கலாம் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!..

  தீராத ஆசையெல்லாம் தீரும் ஒருநாளே!
  பாராத இவ்வுலகும் பார்க்குமே! - வேராக!
  ஊரோடும் எண்ணம் உறைந்துன்னுள் உள்ளதைச்
  சீராகத் தந்தனை சேர்த்து!

  அருமையான விருத்தப் பாமாலை தோழி!
  மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. மாமனிதர் கலாம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி!..

  ReplyDelete
 4. ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.
  கலாமைப்பற்றி வெளிநாட்டுப்பத்திரிக்கைகளில் வந்த செய்தியைக் காண வாருங்கள்.
  http://www.drbjambulingam.blogspot.com/2015/07/blog-post_12.html

  ReplyDelete
 5. அருமை அருமை ! அழகான விருத்தம் பொருத்தமான ஆசைகள். நன்றி ஈடேற வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 6. அருமையான கவிதை...
  அன்னாருக்கு இதய அஞ்சலி

  ReplyDelete
 7. கவிதாஞ்சலி அருமை
  மறுபடியும் தாய்மண்ணில் வாழ ஆசை !
  தங்களின் எண்ணம் ஈடேறும் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
 8. அருமையான தமிழில் மிக மிக உருக்கமான இரங்கல் வரிகள்! தங்களது கனவு மெய்ப்படும் சகோதரி!

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........