12/15/2015

உதவும் கரங்களே ஒன்று கூடுவீர்!

                                         

எங்கெங்கோ நடிகைக்கும்  கோயில் கட்டி
......இருக்கின்ற பொருள்தந்து மகிழ வைத்தார்
தங்கத்தைக் கூடத்தான்  தாரை வார்த்தார்
......தரணியிலே இன்றுதவ யார்தான் வந்தார் !
அங்கத்தின் அழகுகெடும் ஆட்டம் நிற்கும்
......அன்பொன்றே  தான்வாழும் இந்த மண்ணில்!
இங்கிதனை நாமுணர்ந்தால் போதும் நல்ல
......எதிர்காலம் தேடிவரும் எம்மைக் காக்கும் !

கண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் இன்று
.......கரைசேர  வழியென்ன எண்ணிப் பார்ப்போம் !
உண்ணநல்ல  உணவுதந்தே  உடையும் தந்தே
.......உயிர்காப்போம்  ஒப்பற்ற துணையாய் நிற்போம் !
தண்ணீரும் வற்றாமல் பாயும் போது
........தரையிலுல்ளோர் படும்பாடு அறிவோம் நன்கு!
புண்ணியமாய்ப் போகுமிங்கே  ஆற்றும் சேவை
........புறப்படுவீர் எம்மோடு கைகள் கோர்த்து !

உப்புக்கும் வழியின்றி இன்றெம் மக்கள்
.......ஓலமிடும் வேளையிலே தூக்கம் கூட
ஒப்புக்குத் தான்வந்து போகு தப்பா
.......ஓயாமல் இந்நினைவே ஓடு தப்பா !
இப்பொழுதே புறப்படுவோம் இன்னல் தீர்ப்போம்
.......இளையோரே கைகோர்ப்பீர் மண்ணில் மக்கள்
எப்பொழுதும் இதைமறவார் உயிரைக் காத்தல்
.......எம்கடமை என்றுணர்ந்து விரைந்து வாரீர் !


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

 1. இப்பொழுதே புறப்படுவோம் இன்னல் தீர்ப்போம் ...

  அருமையான வேண்டுகோள்.

  ReplyDelete
 2. இன்றைய சென்னை நிகழ்வுகள்
  இன்னமும்
  இடர் பல சூழ்ந்தே
  இருக்கின்றது .

  இருள் நீக்க வாரீர்.எமது
  மருளுக்கோர் எல்லையில்லை.
  இன்னல் துடைக்க
  இதயம் உள்ளவரே
  வாரீர். வாரீர்.
  தாரீர் தாரீர்

  தவிக்கும் நெஞ்சங்களின்
  தாகம் தீர்க்க ஒரு சில
  தண்ணீர்த் துளிகளாவது
  தாரீர். தாரீர்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 3. இயற்கை அனைவரையும் ஒருங்கிணைத்துவிட்டது.

  ReplyDelete
 4. சிறப்பான சிந்தனை. பாராட்டுகள்.

  ReplyDelete
 5. உப்புக்கும் வழியின்றி இன்றெம் மக்கள்
  .......ஓலமிடும் வேளையிலே தூக்கம் கூட
  ஒப்புக்குத் தான்வந்து போகு தப்பா///தப்பாய்ப்போன உலகில் உங்கள் கவிகள் மாற்றம் தரும் நம்பிக்கை வருகிறது...

  ReplyDelete
 6. காலத்தால் என்றும் வாடாத பாமாலை .

  தொடருங்கள் பாவலரே.

  நன்றி.

  ReplyDelete
 7. மனித நேயமிக்க இந்த கடமையில் எல்லோரும் கை கொடுப்போம் வாருங்கள் !

  ReplyDelete
 8. உதவும் கரங்களே ஒன்று கூடுவீர்! = செயலாற்றுவோம். பிரார்த்திப்போம்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........