10/31/2016

உள்ளத்திற் கஃதே உயர்வு!

தன்னையே தான்போற்றும்  தற்பெருமை கொண்டவர்க்கே
என்றுமிந்தப்  பூமியிலே இல்லையிடம் ! -நன்கறிவீர்
கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

ஆல்போல் தழைத்தே  அறுகுபோல் வேரூண்ட
நால்வர் அருளிய நற்கருத்தைப்! - பாலென்றே
அள்ளிப் பருகி அகத்தூய்மை பெற்றுவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

எண்ணம் இனித்திட  இன்னிசையை  யாம்கேட்டால்
விண்ணைத் தொடுமுணர்வு விண்மீன்கள்!-கண்ணுள்ளே
துள்ளுகையில் துன்பங்கள் தூரப்போம்  எந்நாளும்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

குற்றம்  இழைப்போர்  குணங்கண்டு யாமாற்றும்
நற்கருமம் நாட்டிற்கே நன்மைதரும் ! - கற்றவர்கள்
தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேடிநல் வாழ்வளித்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே
இல்லை ஒருபோதும் இன்னலிங்கே! -தொல்லைதரும்
வெள்ளைய ரின்மொழிக்கு வேண்டாதார் என்றிருந்தால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

மண்ணில் மரங்களைக்  காப்பதே  எம்கடனாய்
எண்ணி இயங்குவோம் இக்கணமே !- விண்வியக்க
வெள்ளை விடையேறி வந்தபிரான் வாழ்த்திவிட்டால்
உள்ளத்திற் கஃதே உயர்வு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

No comments:

Post a Comment

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........