ஏற்றம் இன்றி இழைத்தோம் அம்மா
எல்லாம் எம்தலை எழுத்து - அதை
மாற்ற முயன்று மடிந்தவர் தாமே
மாவீரர் என்னும் விழுது!
எல்லைக் கோட்டை எவரும் தாண்ட
இயலா திருந்த பொழுது - ஏன்
அல்லக் கைகள் அணைத்துக் கொண்டார்
அழிகுடி யினரைத் தொழுது!
காட்டிக் கொடுத்துக் கழுத்தை அறுத்தார்
கயவர் எம்மோ டிருந்து - உயிர்
போட்டி போட்டுப் பிரியக் கண்டோம்
போதும் இங்கேது மருந்து!
நாட்டை விட்டு நாடு கடந்தோம்
நம்மின் உயிரைக் காக்க -தீ
சூட்டைப் பரப்பிச் சுட்டெ ரித்ததே
சூழ்நிலைக் கைதியை நோக்கு!
அன்னை மொழியை அறவே மறந்தார்
அடிமை வாரிசு இங்கே -எம்
இன்னல் தீரவும் இலக்கை எட்டவும்
இனியொரு வழிதான் எங்கே?
கண்ணீர் பெருகக் கடலும் தானே
கரையைத் தாண்டு தம்மா - நீ
எண்ண மறந்து இருப்பா யோசொல்
இனியும் இங்கே சும்மா!
அம்மா என்று அழைத்தால் போதும்
அடியவர் குறைகள் தீரும் - இதை
இம்மா நிலத்தில் இருக்கும் உயிர்கள்
என்றும் அறியத் தாரும்!
பொன்னே! மணியே! போதும் இந்தப்
புவியில் பட்ட பாடு -இனி
இன்னல் இன்றி எவரும் இங்கே
இன்புற மார்க்கம் தேடு!
அன்பும் அறமும் அன்னை உன்னால்
அவனியில் தழைக்க வேண்டும் -உயர்
நன்மை பொங்க நாளும் இதனால்
நட்பை மதிக்கத் தூண்டும்!
கன்னல் மொழியால் காலம் தோறும்
கண்ணீர்க் காவியம் தொடுத்தோம் -நீ
இன்னல் துடைக்க எழுந்து வந்தால்
இன்றோ டிதனை முடிப்போம்!
எழுந்து வா தாயே!
ReplyDeleteஎழுச்சிமிக்க கவிதை. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
#காட்டிக் கொடுத்துக் கழுத்தை அறுத்தார்
ReplyDeleteகயவர் எம்மோ டிருந்து#
எதிரி வேற எங்கேயோ இல்லை !
கவிதை சூப்பர் என்றால் படம் என்ன அழகு...
ReplyDeleteபடம், கவிதை இரண்டுமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete