எங்கோ ஒரு தெரு முனையில்
ஏதோ ஒரு தெய்வத்திற்குப்
பொங்க வைத்துப் படைப்பதெல்லாம் அன்று
ஏழைகள் வயிறு நிறைவதர்க்கே!
எங்கள் வீட்டுச் சுப காரியத்திலும்
ஏழைகள் வயிற்றைக் குளிர வைப்பீர்!
தங்கும் மங்களம் எந்நாளும்
தக தக தகவென இல் வாழ்வினிலே!
ஒளியை ஏற்றும் திருநாளில்
வெடியைப் போட்டு மகிழாதீர்!
விடியும் காலம் வேண்டும் எனில்
மடியும் உயிர்களுக்கு உணவளிப்பீர்!
கருணை பொங்கும் இதயத்தில்
கடவுள் தெரிவான் எந்நாளும்
உயிரைக் காக்கும் செயலொன்றே
உன்னதமான செயலாகும்!
வருவாய் இருந்தால் ஏழைக்கும்
வாழ்வளிக்கத் துணிபவரைத்
தொழுவார் உலகில் தெய்வமெனத்
தொண்டில் சிறந்தது இது தானே ?
இனிப்பாய் உண்ட பலகாரம்
இதமாய்த் தொண்டையில் இறங்கையிலும்
நினைப்பாய் ஏழைகள் நிலைப்பாட்டை இந்த
நினைப்பே போதும் நல் வழி காட்டும்!