10/30/2014

உயிரிலே கலந்தவனே !



ஏங்கும் மனத்தினது  ஏக்கத்தைச்  சொல்லவா ?!
நீங்கும் எனதுயிர் நீயின்றி!- தூங்காதே
கண்ணா  கணப்பொழுதும் கண்ணீரில்  வாடுகின்றேன்!
உண்ணா துருகும் உயிர் !

கண்ணுக்குக் கண்ணான கண்ணன் மனத்தழகைப்
பெண்ணுக்குள் வைத்தேன்  பெருமையுற!- பண்ணுக்குள்
இட்ட இனிய தமிழ்ச்சொற்கள் எந்நாளும் 
கொட்டும் பனியைக் குவித்து !

கண்ணா விரைந்தென்றன்   கண்ணீரைப் பொய்யாக்கு !
உண்ணாமல் ஊன்வாடிப்   புண்ணாகும் !- எண்ணம்
இழைத்திட வாழ்வை   இடர்காவிச் செல்லும்
அழைத்த குரல்கேட்டு அசை!

கூரான ஆசைகளைக் கொட்டிக் கொடுப்பவனே !
தீராத வேதனையைத்  தீர்ப்பவனே !-வேராக
நானிருப்பேன்  உன்னோடு நாளுமிங்கே! நம்வாழ்வில் 
தேனினிக்க வேண்டும் திரண்டு !

விண்ணோக்கிச் சென்றாலும் விட்டகலேன் என்னவனே !
பெண்ணோக்கும் பேரழகா !பேரின்பக் -கண்ணாளா !
எண்ணங்கள் ஏற்கும் இளமையும் நீயாவாய்!
வண்ணங்கள் குன்றாமல் வா !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

16 comments:


  1. வணக்கம்

    தமிழ்மணம் 1

    எண்ணம் இனிக்க இசைத்திட்ட வெண்பாக்கள்
    வண்ணம் பலகாட்டி மின்னினவே! - பெண்ணே!உன்
    சிங்காரத் தமிழ்கண்டு சிந்தை சிலிர்க்கிறது!
    மங்காத சீரில் மகிழ்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. வண்ணங்கள் குன்றாமல் வா !//

    தங்கள் கோரிக்கையை ஏற்று
    கண்ணன் கவிதையாகவே வண்ணங்கள்
    குன்றாமல் வந்து விட்டானே
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. "கூரான ஆசைகளைக் கொட்டிக் கொடுப்பவனே !
    தீராத வேதனையைத் தீர்ப்பவனே! - வேராக
    நானிருப்பேன் உன்னோடு நாளுமிங்கே! நம்வாழ்வில்
    தேனினிக்க வேண்டும் திரண்டு!" என்ற பா
    என் உள்ளத்தில்
    நான் விரும்பும் பா ஆயிற்று!

    ReplyDelete
  4. கண்ணன் வந்தான் ஒரு கவிதை வடிவில்.

    ReplyDelete
  5. வணக்கம் தோழி!

    உயிரிற் கலந்திட்ட உன்னுறவை அன்புக்
    கயிற்றினாற் கட்டியே காத்திடுக! - தாயிவள்
    தங்கத் தமிழாள் தரும்சீர் உனக்கிருக்க
    எங்குறுவான் உன்னைவிட் டே!

    இட்டனை வெண்பாக்கள் என்னை மறந்தேனே!
    தொட்டனை நெஞ்சைத் துளைத்து!

    அத்தனையும் அருமையான
    உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வெண்பாக்கள்!
    மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  6. எண்ணங்கள் ஏற்றிவைத்த கண்ணாளன் கண்ணன்
    இடபக்கம் தான் கொடுத்து அவளின்றி நானில்லை
    என்ற நிலையெய்தும் நிலையாய் இங்கு கண்ணன்
    சிக்கி கொண்டான் கருத்தினிக்க..... வாழ்த்துகள்

    ReplyDelete
  7. கண்ணன் பற்றி அருமையான கவிதை. வாழ்த்துக்கள் கவிதாயினி.கால்வலி இப்போது நலமா?,

    ReplyDelete
  8. வண்ணங்கள் குன்றாமல் கண்ணன் அருள்பாலிக்க வாழ்த்துக்கள்! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  9. கண்ணனை எண்ணியே வடித்திட்ட பாவை
    வெண்ணையை மறந்தே பருகிட வருவான்
    பொன்னென மின்னுமுன் அன்பினில் புதைந்திட
    வண்ணமாய் வருவான் விந்தைகள் புரிய !

    அருமை அருமை ! என் அன்புத் தோழியே வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
  10. கண்ணன் கவி அருமை சகோதரியாரே

    ReplyDelete
  11. மிகவும் அருமையான கவிதை சகோதரி!

    ReplyDelete
  12. கண்ணன் கவிதை அருமை அருமை சகோதிரியாரே..
    தம.7

    ReplyDelete
  13. அதிகம் பின்னூட்டங்கள் கவிதையிலேயெ வந்திருக்கின்றன... அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வணக்கம் !

    அனைவரினது வருகைக்கும் வாழ்த்திற்கும் பாராட்டுகளிற்கும் என்
    மனமார்ந்த நன்றிகள் அன்பு உறவுகளே !

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........