5/31/2014

தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்



தாயைப் போலொரு தந்தையைக் கண்டேன்
தவமாய் அவனை என்னுள் வைத்தேன் 
சேயைப் போற்றும் அப்பனை மறந்தவர் 
செழுமை உடையவரா? ..........

அன்னை கோவில் என்றால் 
அப்பன் தெய்வமடா !......
அந்தத் தெய்வம் இல்லை என்றால் 
நீயும் இல்லையடா !....

தாயைப் போற்றும் மனமே கொஞ்சம் 
தந்தையை நினையாயோ !-அந்தத் 
தந்தையின் காலடி சொர்க்கம் என்று 
சங்கதி சொல்லாயோ !......
                                        
அன்பை ஊட்டி வளர்த்தாள் அதனால்   
அம்மா தெய்வமடா ........
அந்தத் தெய்வமும் வாழ வழிகள் வகுத்த 
அப்பா பாவமடா ......

காலை இழந்ததும் கண்ணீர் சிந்துது 
காளை மாடிங்கே!- அந்தக் 
காளை மாட்டின் கவலைகள் எல்லாம் 
அதன்  கன்றுகள் தான் இங்கே !....

பத்தே மாசம் சுமந்தவள் எம்மை
பாதியில் மறந்து விட்டாள்  நான்
பாக்கியம் செய்தவள்  அதனால் அப்பனின்
பாசத்தில் வளர்ந்து விட்டேன்! ....

அம்மா அம்மா அம்மா தெய்வம் என்றால் போதாது
சிலர் அப்பனைக் கொஞ்சம் இப்படி நினைத்தால்
தப்பேயாகாது ...................

கொட்டும் மழையில் குடையாய் வந்தவன்
குல தெய்வம் தான் இங்கே!
அந்தக் குல தெய்வம் தந்த
அறிவைக் கொஞ்சம் பார் பார் பாரிங்கே !...

பட்டப் படிப்பு நாம்  படிக்க
பனியில் அவன் உறைந்தான்
தன் பாசம் எல்லாம் கொட்டிக் கொடுத்துத்
தனியாய் ஏன் இருந்தான் ?..........!

                                             (தாயைப் போலொரு....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/23/2014

கல்யாணப் பெண்ணே கல்யாணப் பெண்ணே...




கல்யாணப் பெண்ணே கல்யாணப் பெண்ணே
கண்ணிறைந்த தூக்கம் ஏனடி?
உன்னோடு வாழும் பொன்னான நாட்களை
இன்றோடு முடித்தாய் ஏனடி ?

மங்கள நாணில் சாபம் வீழ்ந்ததால் என்
மனமிங்கு வலிக்குதடி! - உன்னைத் 
திங்களைப் போலே  நினைத்தேன் அதனால் என் 
திசை எட்டும் இருண்டதடி!

                                              (   கல்யாணப் பெண்ணே )

கங்கையைக் கண்ணில் சுமந்திடத்தானா
இந்தக் காதலும்  சொல்லிங்கே ?
என் அங்கமும் உசிரும் துடிக்குது உன்னால் 
என் ஆருயிரே  நீ எங்கே ?

இதயம் இதயம் புண்ணானது என் 
இளமை எல்லாம் மண்ணானது- ஓர் 
உதயம் எனக்கு நீயானாய் இந்த  
உயிரைப் பிரிந்து  ஏன் போனாய்?

                                         
மலரே மலரே பேசாயோ? உன் 
மலர்விழி திறந்தென்னைப் பாராயோ? 
உலரும் நாவிலே  உணர்வும்  சாகுதே
என் உயிரே நீயும் பேசாயோ ?

மௌனப் பாசறை விட்டெழுந்து வா
மணவாளன் கைகளைத் தொட்டெழுந்து வா
பூவே உன் வாசம் போகாதடி
போனாலும் என்னுசிரு தாங்கதடி ......

                                            (   கல்யாணப் பெண்ணே )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/20/2014

அடடா அடடா அழகிதடா அமுதைப் பொழியும் நிலவிதடா



அடடா அடடா அழகிதடா
அமுதைப் பொழியும் நிலவிதடா!
உதடா உதடா தேன் கூடா
உலகம் சுற்றுதே என் தோழா!

கனவில் வந்தவள் அவள் தானே என்
கைகளைப்  பிடித்தவள் அவள் தானே!
நினைவில் நின்றவள் அவள் தானே என் முன்
நீச்சலடித்தவள் அவள் தானே!

மின்னலடிக்கும் கண்ணழகி  உயிர்
மூச்சைத்  தடுக்கும் பெண்ணழகி!
அன்ன நடை அது நடையழகு என்னை
ஆட்டிப் படைக்குதே  அவள் இடையழகு!

கன்னமிரண்டும் செவ்வாழை -அவள்
கழுத்தினில் தொங்குதேன் என்  மூளை!
சிக்கனமாய் அவள்  சிரிக்கையிலே நான் ஏன்
சிக்கித்  தவிக்கிறேன்  மச்சானே!

ஐயோ ஐயோ ஐயோ  ஓரம் போங்கடா- இவன்
காதல் வலையில் விழுந்து புட்டான் தூரம் போங்கடா!
மச்சம் உள்ள இடத்தை மட்டும் விட்டுப்புட்டானே
மத்ததெல்லாம் சொல்லிச் சொல்லி மனசத் தச்சுப்புட்டானே!

கெட்டி மேளச் சத்தம் கேட்கும் நேரம் வந்தாச்சு
நம்ம நட்பு மெல்லத் தூரம் போகும் காலம் வந்தாச்சு
நண்பனுக்கு ராஜ யோகம் கூடி வந்தாச்சு அந்த
ராணியோட சேரும் காலம் தேடி வந்தாச்சு ...

பீப்பீ  பீப்பீ பீப்பீ பீப்பீ ...
டும் டும் டும் டும்..
பீப்பீ ...பீப்பீ...பீப்பீ..பீப்பீ ..
டும் டும் டும் டும்....

அழகா அழகா அழகிதுவா?
அமுதைப் பொழியும் நிலவிதுவா?
உதடா உதடா தேன் கூடா?
உன் உலகம் சுற்றுதா என் தோழா?

பட்டு வேட்டி கட்டிக்கோ மெல்லப்
பாவை மனசில் ஒட்டிக்கோ
எட்டுப் பத்துப் பெத்துக்கோ
ஏன் தான் தாமதம் என் தோழா?

ஆஞ்சநேய பக்தனுனக்குக் காதல் வந்தாச்சு
அம்மா சொன்ன பொண்ணோடு தான் மோகம் வந்தாச்சு
நேந்து வச்ச நேத்திக்கேத்த பொண்ணு தானடா
நெத்தியடி பந்தயத்தில் நாம் செயிச்சுப் புட்டோம்டா!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/18/2014

விடியலைத் தேடி ஓடுகின்றோம்



விடியலைத் தேடி ஓடுகின்றோம்
  வீதியில்  நின்றே வாடுகின்றோம்
அடியவர்  குறைகளைக் கேட்காயோ
   ஆடிடும் தில்லைக் கூத்தனே நீ?.... !
படியவே  மறுக்குது மனமிங்கே இது
   பாசமா  பக்தியா  சொல்லிங்கே ?...
கொடியவர் வஞ்சகர் வாழ்வதற்கே -பல
    கோடி   நன்மைகள் அருளுகின்றாய் !!

விதி என   அனைத்தையும் மறந்திருந்தோம்
         விரும்பியே உனதடி தொழுது நின்றோம்
சதி செய்யும் மனத்தவர் மகிழ்ந்திடவே
         சாம்பலாய் எமதுடல் வேகுவதா !
அதி உயர் சக்தியே ஆனந்தமே -எமை
          ஆட்கொள்ளும் எங்கள் பெருமானே
கதி அது உனையன்றி யாதுமில்லை-எமைக்
           காத்திடிட இங்கே எழுந்தருள்வாய்

பெருகிய    துன்பங்கள் மடியட்டும்
  பேரொளி  எங்கும் திகழட்டும்
கருகிய       உள்ளங்கள் சிரிக்கட்டும்
  காதலால்  மும்மாரி பொழியட்டும்
அருகிய       நற்புகழ் ஓங்கட்டும்
   ஆனந்தம்  நெஞ்சினிலே தங்கட்டும்
உருகியே    உனதருள் வேண்டுகின்றோம்
     உமைய   வளோடிங்கு எழுந்தருள்வாய்

 புலியுடை அணிந்த நாதனே -மனம்
    புண்பட  எமையிங்கு வைக்காதே
கலியுகம்   காத்திட  எழுந்தருள்வாய்
   கண்களில் ஆனந்தம்  தந்தருள்வாய்
பொலிவுற  உன்னாலே நீதியிங்கே
    புதைந்திட வேண்டும் அநீதியெங்கும்
நலிவுறும்  அடியவர் மனம் தழைக்க
    நமச்சி வாயனே எழுந்தருள்வாய் ...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5/07/2014

காலம் வரும் வரும் போது பகையை வெல்வோம்



அன்பு செய்ய வந்தவளே! எம்மை
ஆதரித்து  நின்றவளே!
உயர் பண்பதனால் உருவானவளே!
உத்தமியே! கொஞ்சம் நில்லு!

புறமுதுகு காட்டாமல்
புலியையும்தான் விரட்டியவள்
நடுநிசியில் பெருநெருப்பாய்
நகர்ந்து நீயும் எங்கே வந்தாய்!

கொடியவரை அழித்திடவோ
கோ மகளே புறப்பட்டாய்!
நெடிய துயர் நெஞ்சை வாட்ட
நீ போகும் பாதை எதுவோ!

விடியும் வரைக் காத்திருந்து
விம்மி விம்மி அளவும் மாட்டாய்!
படை நடுங்கும் உனைத்தான் கண்டு
பாசம்மிகு தமிழ்த் தாயே நில்லு!

ஒத்தையிலே போர் முனைக்கு நீ
ஓடோடிச் செல்கையிலே
சித்தமெல்லாம் கலங்குதடி
சினம் தணிந்து  வா தாயே!

ஊளையிடும் நரிகளுக்கு
உன்னால்தான் முடிவு பிறக்கும்!
கோழையல்ல தமிழினத்தின்
கொள்கை நிலைத்திடும் நீ வா தாயே!

வீர மறவரை ஈன்றெடுத்தவள்
வேதம் அனைத்தும் கற்றுக் கொடுத்தவள்
உயிரின்  நாதமெனத் தமிழ்மொழியில் உதித்தவள்
உலகப் புகழின் உச்சமே! நீ வா தாயே!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.