3/17/2015

தனிமை என்ற கொடுமை அது ஒன்றே போதும் !


                             


பொட்டு  இழந்த பெண்முன்னே
    போகச் சகுனம் பார்ப்போரே
தொட்டுத் தமது  நெஞ்சத்தில்
    தோன்றும் கருத்தைச் சொல்லுங்கள்!
பட்டும் படாமல் நாமிங்கே
     பாடம் நடத்திச் செல்கின்றோம்
கட்டும் பலரின் தாலிக்கும்
     காடே  உறையா வாழ்வுண்டோ ?...

கண்ணை இமைபோல் காத்தாலும் 
    காலன் முடிப்பான் வாழ்நாளை !
பெண்ணிற் கிதனால் துன்பம்தான் 
     பேசத் தெரிந்த பொம்மைகளே !
உண்மை உணர்ந்து பேசுங்கள் 
     உள்ளம் அதனைக் கேட்டிங்கே 
வெண்மை தூய்மை நிறமன்றோ  
     வேறு உளதோ சொல்லுங்கள் ?..

 கட்டில் சுகமும் இல்லாமல்
    காவல் அதுவும் இல்லாமல்
முட்டி வலிக்க எந்நாளும்
     முத்துக் குளிக்கச் செல்கின்றாள்!
தொட்டில் அவளும் இட்டாள்பார்
     தோல்வி இனியும் வாராமல்
கொட்டிக் கொடுக்கத் தான்வேண்டும்
     கொள்கை எதுவும் மாறாமல் !

தாலி இழந்தாற் போலிங்கே 
   தன்மை எதுவும் மாறாது !
காலி வயிறும் கேட்காது 
    காசும் பணமும் பூக்காது !
வேலி பலதைத் தாண்டித்தான் 
    வேறு வழிகள் இல்லாமல் 
கூலி இவளும்  செல்கின்றாள் 
   குஞ்சைத் தனியாய்க் காக்கின்றாள் !

அம்மா இவளின் ஆற்றல்முன்
    ஆறும் கடலும் தோற்றுப்போம் !
இம்மா நிலத்தின் தெய்வத்தை 
     என்றும் குறைவாய்  எண்ணாதீர் !
சும்மா நடந்து சென்றாலே 
      சூடு தணியும் மண்மீது !
எம்மாம் பெரிய வானுக்கும் 
       என்றும் குளிர்ச்சி  அம்மாதான் ! 

பெண்ணின் மனத்தைப் பூவென்றோம் 
    பேதை அவளைத் தான்கொன்றோம் 
மண்ணில் இதைத்தான் இப்போது  
     மாற்ற முனைந்தோம் தப்பேது ?...
கண்ணைத் திறந்து பாருங்கள் 
      கண்ணீர்க் கதையைக் கேளுங்கள் 
எண்ணெய் இழந்த தீபத்தை 
       என்றும் எரியச் செய்யுங்கள் !

தாலிக் கொடியும் பொட்டும்நாம் 
     தந்து மகிழ்ந்தோம் பெண்ணுக்கு
வேலி இதுதான் என்றெண்ணி 
     வேறு  உளதோ காரணங்கள் ?..
போலிச் சடங்கும்  ஒன்றாலே 
      போதும் விழைந்த சாபங்கள் !
காலில் விழுந்தும் கேட்கின்றோம் 
      காக்க விரைந்து வாருங்கள் !  
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

13 comments:

  1. வணக்கம்
    அம்மா
    எல்லாவற்றுக்கும் இந்த மனிதன்தான் காரணம் நம்பிகையின் விளைவு... சம்பவத்தை கவியில் பாடியவிதம் வெகு சிறப்கு பகிர்வுக்கு நன்றி த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிகவும் வேதனையான சொற்கள் கவிதை உருப்பெற்று மனதில் ஒரு பாரத்தை ஏற்றிவிட்டது போலுள்ளது. இவ்வேதனைக்கு ஓர் அளவில்லை.

    ReplyDelete
  3. அருமை அம்மா...

    மனம் வெண்மையாக வேண்டும்...

    ReplyDelete
  4. கவிதை வேதனையை தந்தது...
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  5. மிகச்சிறப்பான வரிகள்:

    //கட்டில் சுகமும் இல்லாமல்
    காவல் அதுவும் இல்லாமல்
    முட்டி வலிக்க எந்நாளும்
    முத்துக் குளிக்கச் செல்கின்றாள்!//

    //தாலி இழந்தாற் போலிங்கே
    தன்மை எதுவும் மாறாது !
    காலி வயிறும் கேட்காது
    காசும் பணமும் பூக்காது !
    வேலி பலதைத் தாண்டித்தான்
    வேறு வழிகள் இல்லாமல்
    கூலி இவளும் செல்கின்றாள்
    குஞ்சைத் தனியாய்க் காக்கின்றாள் !//

    இந்தத்தனிமை மிகவும் கொடுமை தான்.

    சிந்திக்கத்தூண்டும் மிகச்சிறப்பான ஆக்கம்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. தாலிக் கொடியும் பொட்டும்நாம்
    தந்து மகிழ்ந்தோம் பெண்ணுக்கு
    வேலி இதுதான் என்றெண்ணி
    வேறு உளதோ காரணங்கள் ?..
    போலிச் சடங்கும் ஒன்றாலே
    போதும் விழைந்த சாபங்கள் !
    காலில் விழுந்தும் கேட்கின்றோம்
    காக்க விரைந்து வாருங்கள் !

    உண்மை தன்னை உரைத்திட்டாய்
    உணர்வில் அலைகளை தந்திட்டாய்
    நன்று!

    ReplyDelete
  7. "கண்ணை இமைபோல் காத்தாலும்
    காலன் முடிப்பான் வாழ்நாளை !
    பெண்ணிற் கிதனால் துன்பம்தான்
    பேசத் தெரிந்த பொம்மைகளே !" என்ற
    நெருப்பு வரிகளை வரவேற்கிறேன்!

    ReplyDelete
  8. தாலி ஒன்று இருப்பதால்தானே அறுக்க வேண்டிய நிலை , திருமணமான பெண்ணிற்கு அடையாளம் தேவையில்லாத ஒன்றுதான் ..ஆணுக்கு இப்படி ஏதாவது நிர்ப்பந்தம் உண்டா ?

    ReplyDelete
  9. போலிச் சடங்கும் ஒன்றாலே
    போதும் விழைந்த சாபங்கள் !
    காலில் விழுந்தும் கேட்கின்றோம்
    காக்க விரைந்து வாருங்கள் ! //

    ஆம்! போலிச் சடங்குகள் யாவையும் களைவோம்! எதற்காகக் கைம்பெண் தாலி எடுக்க வேண்டும்? கணவனின் நினைவுகளில் அதன் அடையாளமாய் அதை வைத்து வாழ்ந்திடலாமே! அது ஒரு வேலி போலவும் ஆகுமல்லவோ...!

    மனதை உலுக்கிய வரிகள் சகோடதரி! மக்கள் புதிதாய் பிறக்க வேண்டும்....

    ReplyDelete
  10. வேதனைமிகு வரிகள் சகோரியாரே
    தம +1

    ReplyDelete
  11. நல்ல கருத்தை சொல்லும் கவிதை.
    இந்த காலத்திலும் இந்த கொடுமை தேவையா? மக்கள் சிந்திக்க வேண்டும்.
    மனம் கனத்து போனது கவிதையால்.

    ReplyDelete
  12. அருமை அருமை அருமை... மிக சிறந்த கவிதை

    ReplyDelete

  13. வணக்கம்!

    பெண்ணின் கொடுமையைப் பேசும் கவிபடித்துக்
    கண்ணீர் கசியும் கனத்து!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........