3/26/2015

போருக்கோர் முற்றுப் புள்ளி போட்டு விடு இக்கணமே !

                                                           
   

நஞ்சை எவர்தான் வார்த்தாரோ
    நாச தருணம் பார்த்தங்கே!
நெஞ்சைப் பிளக்கும் அச்..சாவும்
    நேர்ந்த தெதற்குச் சொல்தாயே  ?
வஞ்ச கருக்கோர் பாடத்தை
     வாழ்வில் உணர்த்த மாட்டாயோ 
கொஞ்சும் மழலைச் செல்வங்கள்
      கொண்ட துயரம் கண்டிங்கே !

போரும் முடிஞ்சு போயாச்சாம்
    பொல்லா தவர்தான் சொல்கின்றார் !
நேரும் கொடுமை கண்டாயோ 
     நேற்று வரை நீ  எம்வாழ்வில்!
கோரும் உரிமை  கிட்டாமல்
     கோலம் கலைந்து நிற்கின்றோம் !
சோரும் மனத்தில் மென்மேலும்
      சோகம் விளைத்தார்  ஏன் ..தாயே ?..

அல்லும் பகலும் அச்சத்தால்
     ஆன்மா உறைந்த போதெல்லாம்
கொல்லும் வரையெம் உற்றாரைக் 
      கொன்று குவித்தார் போதாதா !
வெல்லும் வகையில் வீரத்தை
      வேங்கை உணர்த்தி வந்தாலும்
நல்ல தெதையும் நாடாதார்
        நாசம் புரிந்து விட்டாரே !

பொல்லா தவரின் ஆசைபோல்
    போரில் இணக்கம் கண்டாச்சு !
எல்லாம் முடிந்த பின்னாலும்
     எம்மை வதைப்ப தேன்தாயே ?..
நல்லோர் உலகில் வாழத்தான்
      நல்ல தருணம் கிட்டாதா ?...
அல்லல் மிகுந்த வாழ்நாளை
      அன்பால் விலகச் செய்தாயே !

சுற்றம் இழந்து நாம்வாழச் 
    சூழ்ச்சி இனியும் மேற்கொள்வார்
கற்ற தெதையும் வாழ்நாளில்
     கருத்தில் கொண்டு பயணிப்போம் !
பெற்ற துயரம் இங்கேதான்  
      பெருகா வண்ணம் அருள்செய்வாய் 
உற்ற துணையாய் எமைக்காக்க 
      உள்ளம்  உருக அழைக்கின்றோம் !

                                                              


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

  1. அல்லல் இல்லா நாள் விரைவில் வரட்டும் அம்மா...

    ReplyDelete
  2. நல்லதே நடக்கும். நம்புவோம்.

    ReplyDelete
  3. வஞ்ச கருக்கோர் பாடத்தை
    வாழ்வில் உணர்த்த மாட்டாயோ
    கொஞ்சும் மழலைச் செல்வங்கள்
    கொண்ட துயரம் கண்டிங்கே ! தங்கள் ஆதங்கத்தை விருத்தப்பாவாக வடித்த விதம் சிறப்புங்க தோழி.

    ReplyDelete
  4. கற்ற தெதையும் வாழ்நாளில்
    கருத்தில் கொண்டு பயணிப்போம் !// கடந்தவற்றை மறக்காமல் பயணிப்போம்.

    ReplyDelete
  5. விடியும் நாள் விரைவில் வரும் நம்புவோம்
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete
  7. கோரும் உரிமை கிட்டாமல்
    கோலம் கலைந்து நிற்கின்றோம் !
    சோரும் மனத்தில் மென்மேலும்
    சோகம் விளைத்தார் ஏன் ..தாயே ?

    சொல்லும் தரமல உம்துயரே -அந்தோ
    சோகம் நாளும் வளர்பயிரே
    வில்லில் தொடுத்த கணையாக-கவிதை
    விரைந்து அழிக்கும் துணையாகும்

    ReplyDelete
  8. வணக்கம்
    அம்மா
    உணர்ச்சிகளின் வெளிப்பாடு வார்த்தையாக அமைந்த விதம் கண்டு மகிழ்ந்தேன் நன்றாக உள்ளது
    த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. நல்லோர் உலகில் வாழத்தான்
    நல்ல தருணம் கிட்டாதா ?...
    அல்லல் மிகுந்த வாழ்நாளை
    அன்பால் விலகச் செய்தாயே !///
    நன்மையே கிடைக்குமென நம்புவோம்

    ReplyDelete
  11. உள்ளத்தை உருக்கும் உங்கள் கோரிக்கை நிறைவேறும் நாள் ,விரைவில் வர வேண்டுமென்று விரும்புகிறேன் !

    ReplyDelete
  12. சிறப்பான கவிதையாக்கம்... வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  13. சூழ்ச்சி இனியும் மேற்கொள்வார்// பதவி ஆசைக்காக விலைபோவோர் அதிகம் தான்! அருமையான கவிதை.

    ReplyDelete
  14. அழகான கவிதை.. அந்நாளுக்காக காத்திருப்போம் அம்மா...

    ReplyDelete

  15. வணக்கம்!

    உள்ளம் உருகி உரைத்தகவி நன்னடை
    வெள்ளமெனப் பாயும் விரைந்து!

    ReplyDelete
  16. பெற்ற துயரம் இங்கேதான்
    பெருகா வண்ணம் அருள்செய்வாய்
    உற்ற துணையாய் எமைக்காக்க
    உள்ளம் உருக அழைக்கின்றோம் !
    அந்த நாளும் வந்திடாதோ! காத்திருப்போம் சகோதரி! உள்ளம் உருக அழைக்கும் உங்களுக்குக் கடவுள் கண் திறந்திடாமல் போவாரோ?!!!!

    ReplyDelete
  17. பொல்லா தவரின் ஆசைபோல்
    போரில் இணக்கம் கண்டாச்சு !
    எல்லாம் முடிந்த பின்னாலும்
    எம்மை வதைப்ப தேன்தாயே ?..
    நல்லோர் உலகில் வாழத்தான்
    நல்ல தருணம் கிட்டாதா ?...
    அல்லல் மிகுந்த வாழ்நாளை
    அன்பால் விலகச் செய்தாயே !

    என்னசொல்லி வாழ்த்துவது என்றே தெரியாததால் கவிதையில் கருத்தை சொல்லவில்லை சகோ அத்தனை அழகாய் அர்த்தம் பொதிந்ததாய் இருக்கு உங்கள் விருத்தம் .....தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம 15

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........