கண்ணீரில் சிக்குண்டு கல்நெஞ்சும் ஏங்குதடி !
பெண்ணே உனைப்பிரிந்து பேச்சிளந்தோம் !-மண்ணில்
அடைகாத்து வைத்திருப்போம் உன்நினைவை !அன்பே
விடைபெற்றுச் சென்றாய் விரைந்து !
பெண்ணேநாம் ஏன்பிறந்தோம் பேசாமல் மாண்டிடலாம் !
கண்கெட்ட பூமியிலே காவலேது !-புண்பட்ட
நெஞ்சத்தின் ஓலத்தைக் கேளம்மா! நீயுமிங்கே
வஞ்சகரால் வீழ்ந்ததுதான் வாழ்வு !
ஓயாமல் இத்துன்பம் ஓடிவந்து கொல்லுதடி
தாயேநீ போனவழி தாங்காமல் !சேயை
வெறிநாய்கள் சேர்ந்தெங்கும் வீணாக்கும் காட்சி
அறிவாய்நீ அன்றாடம் தான்!
பாலகரும் கன்னியரும் பாவிகளின் காமத்தால்
காலமெல்லாம் சாகத்தான் காண்கின்றோம் !-கோல
மயிலேநீ கொண்டதுயர் மாளாது !எண்ணி
உயிரும் உருகும் உடைந்து !
புண்பட்டுப் போகுதடா புத்திகெட்ட மானிடனே !
பெண்பட்ட பாடறிந்தும் பேசாயோ !-கண்ணின்
மணிகளைத்தாம் நாமிழந்தோம் மண்மீது இன்னும்
துணிவிழக்கச் செய்வதேன் சொல் ?...
பொல்லாக் கொடியவனே !பொய்யால் நிறைந்தவனே !
கொல்லத்தான் பெண்ணினமா கூறடா !-வல்ல
துணையின்றி வாடுகின்றோம் இன்னும் தொடரும்
இணையில்லாத் துன்பம் எமக்கு !
பெற்றமனம் வாடத்தான் பெண்ணினத்தைக் கொன்றிங்கே
அற்பசுகம் தேடாதீர் ஆணவமாய் !-பற்றி
எரியும்நல் உள்ளத்தின் சாபத்தீ கொல்லும்!
கரியாகும் இவ்வுலகு காண்!
அன்னைதான் ஈன்றெடுத்தாள் ஆணுன்னை வாழவைத்தாள்
இன்னும்ஏன் சந்தேகம் இவ்வுலகில் !-உன்னை
உயிரென ஓம்பும் உயர்பெண்ணை ஏனோ
பயமுற வைத்தீர் பதைத்து !
பத்துப்பேர் சேர்ந்திங்கே பாவத்தில் பங்கேற்றால்
எத்தனைதுன் பம்அவள் பட்டிருப்பாள் !-செத்துப்
பிழைக்குதடா பாவிகளே! பிஞ்சவளைக் கொன்றும்
இழைத்தீர் கொடுமை இணைந்து !
தீமூட்டிக் கொல்லத்தான் தீராத வேட்கையடா!
நீர்மல்க நிற்கின்றோம் நிர்க்கெதியாய்!- வீதி
வழியோரம் வந்துப்பார் வீணரே! உம்மைப்
பழிவாங்கும் எம்மின் படை !
பெண்ஒன்றைக் காணவில்லை போய்த்தேடும் முன்பேஅக்
கண்மணியாள் மாண்டிருப்பாள் காமுகரால்!- மண்ணில்
இதுபோல எத்தனையோ எம்வாழ்வில் கண்டோம்!
எதுவேண்டும் இன்னும் இயம்பு ?..
கொல்லாமல் விட்டதே நல்லாட்சி தான்என்றால்
எல்லாமே இங்குப்பொய் என்றறிவோம் !-வல்ல
அரசாட்சி உண்டானால் அன்றேதம் ஆவி
பெண்ணுக்குக் காவல்யார் பேசுங்கள் மூடரே!
மண்மீது பெண்கண்டார் மாத்துயரம் !-எண்ணி
இருக்கின்றோம் இன்றிந்த ஏக்கம்தான் தீர
வரும்என்றே பெண்களுக்கும் வாழ்வு !
மண்மீது பெண்கண்டார் மாத்துயரம் !-எண்ணி
இருக்கின்றோம் இன்றிந்த ஏக்கம்தான் தீர
வரும்என்றே பெண்களுக்கும் வாழ்வு !
ஐயகோ ....
சீர்கெட்ட இவ்வுலகைச் சீர்திருத்த யார்வருவார் !
நீர்மட்டம் ஒங்குதிங்கே நித்தமும்தான் !-தீர்வின்றி
எம்வாழ்வில் வந்தேகும் இன்னலுக்கோர் நல்வழியைப்
பெம்மானே தா ..தா ..பிறந்து !
புங்குடுதீவைப் பிறப்பிடமாக் கொண்ட எங்கள் அருமைச் சகோதரி மாணவி
வித்தியாவின் படுகொலை குறித்தும் இன்னும் காணாமல் போகும் எத்தனையோ வித்தியாக்கள் குறித்தும் நீதித்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்¨! அதுவரை பெண்ணினத்தின் விடிவுக்காய் உலகம் முழுவதும் உள்ள எம் மக்கள் ஓயாது குரல்கொடுக்க வேண்டும் !பெண்களை கண்களாக மதிக்காது போனாலும் பெண்களை பெண்களாக வாழ விடுங்கள் நாம் போதைப் பொருட்கள் அல்ல !
படிக்கப் படிக்க கண்கள் கலங்குவதும்
ReplyDeleteஎதையாவது செய்தாகவேண்டும் எனும் வெறி
நெஞ்சில் பரவுவதும் இல்லையெனில் நிச்சயம்
அவன் மனிதனாக இருக்கமாட்டன்
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
முகப்பில் வித்யாவின் படத்தைக் கண்டதுமே - மனம் இடிந்து போனது..
ReplyDeleteமேற்கொண்டு எதையும் படிப்பதற்கு மனம் வரவில்லை..
அன்புச்செல்வி வித்யாவின் ஆன்மா அமைதியுறட்டும்..
வேதனை... வேதனை அம்மா...
ReplyDeleteஏதும் செய்ய இயலாத கோபம் பாக்களில் கொப்பளிக்குது.மனிதம் தழைக்க வேண்டுவோம்
ReplyDeleteவேதனை.
ReplyDeleteபடத்திலுள்ள அந்தக்குழந்தைக்கு ஏற்பட்ட கொடுமையை நினைத்தால் கொதிக்குது நெஞ்சம். :(
ReplyDeleteபடிக்க படிக்க வேதனையாக இருக்கிறது சகோ
ReplyDeleteத.ம.5
வேதனையும் கோபமும் பொங்கி வரச் செய்த கவிதை
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
கவியை படித்த போது நெஞ்சு கனத்து விட்து... நீதி கிடைக்கும் என்று நம்புவோம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நெஞ்சு பொறுக்குதிலையே என்று பாரதி பாடியது போல் பாட வேண்டும் போல் உள்ளது.. உலகம் முழுதும் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கு என்றுதான் முடிவு வருமோ.....தயவு செய்து பெற்றோரே உங்கள் ஆண் பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக வளருங்கள் என்பது எங்கள் வேண்டு கோள்...
ReplyDelete//பெண்களை கண்களாக மதிக்காது போனாலும் பெண்களை பெண்களாக வாழ விடுங்கள் நாம் போதைப் பொருட்கள் அல்ல ! // ஆம்! அருமையான கருத்து!
வெட்கப்படவேண்டிய, வேதனைப்படவேண்டிய நிகழ்வு. கவிதை வரிகளில் உணர்வுகளைக் கொட்டிவிட்டீர்கள். இவை போன்ற நிகழ்வுகளுக்கு முடிவு வரும் காலத்தினை எதிர்நோக்குவோம்.
ReplyDeleteவேதனையால் வடித்தெடுத்த கவிதை, படிக்க படிக்க கண்கள் பணிந்தன. இந்த நிலை மாற வேண்டும்.
ReplyDeleteத ம 10
மனம் கனக்கிறது சகோ. வேதனை வேதனை,,,,தம +1
ReplyDeleteவித்தியாவின் வாழ்வினை வீணே அழித்தவரை
ReplyDeleteவத்தலாக்கி வாட்டி வதைக்கட்டும் ! - பித்தலாட்டக்
காரரவர் புத்தியும் பேதலிக்க! காமுகர்கள்
கோரச்சா கண்டஞ்சட் டும் !
வேதனையில் வார்த்தகவி வெந்தணல்தான் வேகட்டும்
பாதகர்கள் கண்டு நிதம்!
வேதனை வேதனை எப்போது தீரும்இது. சீற்றத்திலும் கவிதை அழகு. தொடர வாழ்த்துக்கள் ...!
வெண்பா பின்னூட்டம் இடப் போய் பதிவு இடும் அளவுக்கு வந்து விட்டதும்மா. பார்க்கலாம். நன்றி !
ReplyDeleteவணக்கம்!
கல்லால் அடித்து, கரிபூசி, சாணியுண்டை
வில்லால் அடித்து விலாவுடைத்து - முள்ளடித்து
எல்லாத் திசையறிய இந்தப் பெருங்கொடிய
பொல்லா விலங்கைப் பொசுக்கு
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு