6/18/2015

பாடு மனமே பாடு !

                             


எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்
    ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்
   போதும் இனியெதற்குத் துன்பம் !

இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை
     என்றும் மனச்சுமையைப் போக்கும் !
அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும் 
     அமுதச் சுவையழகைத் தேக்கும் !

பாடும் குயிலுடனே பருவ மங்கையவள்
   ஆடிக் கழித்திடுவாள் தினமே !
நாடி வரும்துயரும்  நகரும் இன்னிசையால்
    நல்ல மருந்திதுதான் மனமே !

காதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை
    ஆளும் எமதுயிரை  இதமாய் !
பாழும் மனத்திரையில் படியும் இன்னிசைகள்
     பாசம் வளர்த்திடுமே  பதமாய் !

ஓலைக் குடிசையிலே  ஒடுங்கி வாழ்கையிலும்
     ஊக்கம் அளித்த....தமிழ்ப்  பாடல் !
வேலை தரும்சுமையை  விரட்டி அடித்திடுமே 
    விந்தை விழைந்த.. தமிழ்க் கூடல் !

காடு மணப்பதுபோல் கன்னல் கவியனைதும் 
    காந்தம் எனஇழுத்து ஓடும் !
பாடும் பொருள்புதிதாய் படரும் போதினிலே
    பாரில் இல்லையொரு ஈடும் !

சுற்றம் இருந்துமொரு சுகமும் இல்லையெனச் 
     சுற்றி அலைந்தகதை போதும் !
வற்றும் நினைவலையில் வசந்த கானமழை
      வந்து உதிக்கஇன்பம் மோதும் !

பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும் 
   பாடி வைத்தகவி கோடி !
அற்றைக் கனவுபல அகத்தில் தோன்றநிதம்
   ஆன்மா மகிழ்ந்திருக்கும்  பாடி ! 

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

12 comments:

  1. கவியரசரின் கவிதைப்பாடல் அருமையான தேன் சுவை!

    ReplyDelete

  2. வணக்கம்!

    சந்தக் கவியரசர் தந்த கவியனைத்தும்
    சிந்தை மயங்கமது ஊட்டும்!
    தந்த தனதந்த தாளம் பலபோட்டுத்
    தங்கத் தமிழழகைச் சூட்டும்!

    தங்கக் கவியம்பாள் சங்கத் தமிழாகத்
    தந்த கவியடிகள் மின்னும்!
    எங்கும் தமிழ்பரவ என்றும் உழைப்பவர்முன்
    ஈடில் புகழ்வந்து மன்னும்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. வணக்கம் சகோ !

    சந்தம் மணக்கும் சிந்துக் கவிதை
    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

    ReplyDelete
  4. பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும்
    பாடி வைத்தகவி கோடி !

    ஆகா யாருக்குக் கிடைக்கும் இதுபோன்ற மனம்
    தம ’+1

    ReplyDelete
  5. வாய்விட்டுப் பாடி இரசித்தேன்
    மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மனம் பாடும் பாடல் மனதிற்கு நிறைவினைத் தருகிறது.
    விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். காண வாருங்கள்.
    http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html

    ReplyDelete
  7. அருமை அம்மா... ஊக்கம் அளிக்கும் தமிழ்ப் பாடல் பல...

    ReplyDelete
  8. தங்களின் கருத்தோடு நானும் 'இசை 'கிறேன் :)

    ReplyDelete
  9. அருமை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. சுற்றம் இருந்துமொரு சுகமும் இல்லையெனச்
    சுற்றி அலைந்தகதை போதும் !
    வற்றும் நினைவலையில் வசந்த கானமழை
    வந்து உதிக்கஇன்பம் மோதும் !

    அருமை அருமையான வார்த்தை க் கோர்வைகள் ரசித்தேன். வாழத்துக்கள் தோழி ...!

    ReplyDelete
  11. பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும்
    பாடி வைத்தகவி கோடி !//

    சகோதரி அருமையான தேன் தமிழில் இப்படி எல்லாம் கவி எழுதி எங்கள் செவிகளில் இன்பத் தேனாய் தமிழ் வந்து பாயுதே!!!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........