7/22/2015

ஈழத் தாயவளே தான் எங்கள் தாயம்மா !


                                     

ஆழ்கடல் தனிலே அந்த
    அவலையின் குரலைக் கேட்டேன் !
ஊழ்வினைப் பயனாய் எண்ணி 
    உலகமே வெறுக்கக் கண்டேன் !
வாழ்வினை அளிக்க வல்ல
     வசந்தமும் விலகிச் செல்ல
மூழ்கிடும்  திருநா டெம்மின்
     முகவரி என்றார் அம்மா !

பொன்னென விளைந்த தேசம்
    பொலிவினை இழக்க நாளும் 
இன்னலைத் தொடுத்தார் அங்கே 
     இதயமும் மச்சுப் போக !
அன்னவர் செயலைக் கண்டே  
     அடிமைகள் விழித்த தாலே 
வன்முறை பொலிந்தே  இன்றும் 
     வாழ்வினைப்  பொசுக்கு தம்மா !

கற்றவர் நிறைந்த பாரில்  
    காத்திட ஒருவர் இன்றி 
குற்றமே பொலிந்து நம்மின் 
    குரல்வளை நசுக்க லாமோ ?.
வற்றலாய்த்  தொங்கும் மக்கள் 
    வாழ்வினைக் கண்டும் எம்மைப் 
பெற்றவள் விட்ட கண்ணீர் 
     பெருங்கடல் ஆன தம்மா !

செம்மொழித்  தமிழைக் கற்றுச் 
     செழிப்புடன் வாழ்ந்த மக்கள் 
அம்மண மாக வீழ்ந்தார் 
     ஆருயிர் துடிக்க மண்ணில் !
எண்ணிலா உயிரின் ஓலம் 
      இன்றுமே கேக்கு தென்றால் 
புண்ணிலே வேலைப் பாச்சும் 
      புத்திதான் மாறு மோசொல் ?..

பன்மலர்ச் சோலை நீயும் 
      பாரினில் நீதி காக்க 
வன்முறை அழித்துச் சென்றாய் 
      வாழ்வினில் என்ன கண்டாய் !
உன்னையே அழித்து மக்கள் 
      ஊனினை வளர்க்க நாளும் 
இன்னலே விளைந்த திங்கே  
     இயற்கையே காணும் அம்மா !

பட்டது சொன்னால் போதும்   
    பாருடன் உள்ளம் மோதும் ! 
கெட்டவர் குடியை வெல்லக்  
     கேடுகள் விளையும் மெல்ல !
சட்டென மறையத் துன்பம் 
    சத்தியம் அருள்வாய் இன்பம் !
கட்டளை இட்டுச் சும்மா  
    காத்திடு இயற்கை அம்மா ! 

                                                                


தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

17 comments:

  1. சட்டென மறையத் துன்பம்
    சத்தியம் அருள்வாய் இன்பம் !
    கட்டளை இட்டுச் சும்மா
    காத்திடு இயற்கை அம்மா ! // காத்திடுவாள்! உறுதி! அருமையான வரிகள்...ஆனால் மனம் வேதனித்த வரிகள்...

    செம்மொழித் தமிழைக் கற்றுச்
    செழிப்புடன் வாழ்ந்த மக்கள்
    அம்மண மாக வீழ்ந்தார்
    ஆருயிர் துடிக்க மண்ணில் !
    எண்ணிலா உயிரின் ஓலம்
    இன்றுமே கேக்கு தென்றால்
    புண்ணிலே வேலைப் பாச்சும்
    புத்திதான் மாறு மோசொல் ?..//

    ReplyDelete
  2. பட்டது சொன்னால் போதும்
    பாருடன் உள்ளம் மோதும் !
    கெட்டவர் குடியை வெல்லக்
    கேடுகள் விளையும் மெல்ல !
    சட்டென மறையத் துன்பம்
    சத்தியம் அருள்வாய் இன்பம் !
    கட்டளை இட்டுச் சும்மா
    காத்திடு இயற்கை அம்மா ! // அன்னையின் அருள் பூரணமாக கிடைக்கட்டும்! அழித்தவர்கள் அழிந்து போகட்டும்!

    ReplyDelete
  3. துன்பங்கள் மறையும். நல்லது நடக்கும்.

    ReplyDelete
  4. வணக்கம் தோழி!

    பட்டவை யாவும் உன்றன்
      பாட்டினிற் சொன்னாய் தோழி!
    தொட்டனை மனதைக் கொல்லும்
      சோகமே வழியும் தாழி!
    விட்டிட முடியாத் துன்பம்
      வேதனை நிறைந்த ஆழி!
    கட்டளை போட்டே எங்கள்
      கவலையைத் தீர்ப்பாள் காளி!

    உளம்தொட்ட விருத்தப் பாமாலை!
    உய்வு கிட்டும் விரைவில்!..

    ReplyDelete
  5. மகளே உன் வேதனை புரிகிறது அமைதி கொள்!

    ReplyDelete
  6. சட்டென மறையத் துன்பம்
    சத்தியம் அருள்வாய் இன்பம் !

    நல்லதே நடக்கட்டும்....

    த.ம. +1

    ReplyDelete
  7. பாட்டெழுதிப் பாரினில் இடர் துடைக்க இயலுமா.
    சோர்ந்திடாஉள்ளம் உந்தன் துயர் தீர்க்க உதவும்மெல்ல

    ReplyDelete
  8. நம்பிக்கையோடு இருப்போம்... நல்லது நடக்கும் அம்மா...

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கெட்டிடத் துன்பம் வேண்டி
      கும்பிடும் உள்ளம் கண்டேன்
      மெட்டினில் பாட்டெ டுத்து
      மென்மன முருகச் செய்தாய்
      எட்டிடாக் கனவு என்று
      ஏளனம் செய்வோர் தன்னை
      முட்டியே மோதித் தள்ளி
      முகத்திரை கிழிப்பாள் அன்னை!

      கலங்கடிக்கும் கவிதைதான் ஆனாலும்
      பாட்டும் சந்தமும் பாடிக்களித்தேன்.... படு சுப்பர்ம்மா நன்றி! வாழ்த்துக்கள் ...!

      Delete
  10. வணக்கம்
    அம்மா
    வேதனையின் உச்சத்தை.
    அன்னைத் தமிழால்
    அண்டம் காண
    அழகாய் சொன்னாய்
    அற்புத வரிகளில்.
    படிப்பவர் உள்ளத்தை
    பதைக்க வைத்தாய்...

    மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. //
    செம்மொழித் தமிழைக் கற்றுச்
    செழிப்புடன் வாழ்ந்த மக்கள்
    அம்மண மாக வீழ்ந்தார்
    ஆருயிர் துடிக்க மண்ணில் !//
    உலகமும் வாய் மூடி இருக்கிறதே.. :-(
    பா அருமை தோழி

    ReplyDelete
  12. தமிழனுக்கென்றோர் ஒரு குணம் உண்டு ,ஆனால் நாடு இல்லையே ,அதனால்தான் இந்த கொடுமை தொடர்கிறது !

    ReplyDelete

  13. செம்மொழித் தமிழைக் கற்றுச்
    செழிப்புடன் வாழ்ந்த மக்கள்
    அம்மண மாக வீழ்ந்தார்
    ஆருயிர் துடிக்க மண்ணில் !
    எண்ணிலா உயிரின் ஓலம்
    இன்றுமே கேக்கு தென்றால்
    புண்ணிலே வேலைப் பாச்சும்
    புத்திதான் மாறு மோசொல் ?.

    வேதனை மிகுந்த வரிகள்.
    வருத்தம் தெரிவித்த விருத்தப்பாமாலை.

    ReplyDelete
  14. எங்கே..நல்லது நடக்கப்போகிறது...????

    ReplyDelete
  15. அருமையான கவிதை...
    நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வைப்போம்.

    ReplyDelete
  16. சிறந்த கவிதை.வாழ்த்துக்கள்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........