12/09/2012

காசு காசு காசு எங்க இருந்து அள்ளுறதாம்!....


உறைபனியில் உணர்வுகளைத் துறந்து தினமும்
மனிதரல்ல இயந்திரம்போல் உழைத்தும் என்ன
வரும் துயரை நீக்க ஒரு வழியில்லாமல் இங்கே
வருந்துகின்ற நாதியற்ற அகதிகள் எமக்கு !!!!.......

நடு நடுங்க உடல் விறைக்க இன்னுமொரு
நரகலோக வாழ்வும் உண்டோ இதைவிடவும்!!!!....
விரல்களுக்குள் ஊசிகளால் குத்துவது போல் இந்த
வேதனைகள் தாங்கி நிற்க முடியவில்லையே !...

செலவழித்து உடை வாங்கிப் போட்டுக்கொள்ளவும்
சீரழிந்த தமிழனுக்கு வேறு வழியும் உண்டோ....
உறவுகளின் கண்ணீரைப் பார்த்துப் பார்த்தே
உழைத்த பணம் உண்டியலைத் துடைத்துச் செல்லும் போது!..

விரகம் என்ன தாபம் என்ன எல்லாம் போய்விடும் 
மன விரக்தி மட்டும் நெஞ்சுக்குள்ளே நின்றாடிடும்
உலர்ந்த தரை உணர்சிகளைக் காட்டக் கொஞ்சம் இங்கே
உனக்கும் சுடும் என்ன செய்ய வாழ்க்கை இதுதான்!....

பரந்த கடல் தாண்டி வந்து அப் பாவிகளாய்
பர பரப்பில் மூழ்கும் இந்த நாடுகளில்
தின(மு)ம் குறித்த நேரம் அதற்குள் வேலைத்தளம்
செல்ல வேண்டும் செல்ல வேண்டும் என அவதியுறுவர்!...

இவர்(கள் ) குறித்து யாரும் இங்கே கவலை கொள்ளார்
இருக்கும் இடம் வெளிநாடு என்றோர் எண்ணம் !...........
பணம் காய்க்கும் மரம்தான் நாமும் இங்கே ஆனாலும்
பணம் பறிக்கும் கைகள் அது வேறொன்றாகுதே!!!!.....

உழைத்த பணம் வில்லுக் கட்டச் சரியாய்ப் போகுது
இந்த ஊருக்குள்ளும் கள்ளப் புத்தி உள்ளோர் வாழ்கிறார்!...
பொதுப்படையாய்ப் பார்க்கும் போது உண்மை புரியாது
புறப்பட்டு வா உன் புலனைத் திருத்திச் செல்லலாம்!.....
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

5 comments:

  1. இவர்(கள் ) குறித்து யாரும் இங்கே கவலை கொள்ளார்
    இருக்கும் இடம் வெளிநாடு என்றோர் எண்ணம் !...........
    பணம் காய்க்கும் மரம்தான் நாமும் இங்கே ஆனாலும்
    பணம் பறிக்கும் கைகள் அது வேறொன்றாகுதே!!!!.

    அருமையான வரிகள்! கருத்துள்ள கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. நல்ல கவிதை நயந்தேன்

    ReplyDelete

  3. வணக்கம்!

    உறைபனி நாட்டில் வந்தே
    உற்றிடும் துயரை எண்ணி
    இறைப்பணி உள்ளம் கொண்ட
    இனியநல் லம்பாள் பாடல்
    நிறைபணி யாற்றும் என்றன்
    நினைவினில் நிலையாய் நிற்கும்!
    முறையினி யாவும் மாறும்
    முற்றிய கலிசெய் காலம்!

    ReplyDelete
  4. பெருமைக்காக வேனுமானால் வெளி நாட்டு வாழ்க்கைன்னு சொல்லிக்கலாம் அவங்க படும் வேதனைகளும் துன்பங்களும் அவங்களுக்குத்தானே தெரியும்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........