3/28/2013

தேர்ந்தெடுக்கும் நீங்கள் தான் தெளிவு பெற வேண்டும் !குப்பைக்குள் தான் கிடக்கிறது பல
குண்டு மணிகள் இவைகளைக்
கோத்தெடுத்து வைப்பதாரு
கோபுரத்திலே !!..................

அப்பப்பா பொழுதெல்லாம் ஆனந்தத்திலே
அவரவர்க்கு வேண்டியது கிடைத்தனாலே
தப்பாத்தான் போகிறது அரசியலும் இங்கே
தவிக்கின்ற மக்களுக்கு நீதி சொல்வதாரு!...

ஒப்பற்ற விலை உயர்வு ஏழை மக்களை
ஒடுக்கித் தான் வைக்கிறது எந்நாளும் இங்கே
கற்கின்ற கல்விக்கேனும் காமராசர் போல்
கை கொடுக்கும் தெய்வம் இங்கு யாரும் இல்லையா!..

பிற்போக்கு வாதிகளாய் நாமிருப்பதால்
பின்தங்கிப் போகாதோ நன் நாட்டின் வளம்
நற் போக்கு நமக்குள்ளே வேண்டும் என்றால்
நல்லவர்களே  அரசியலில்  இருந்தாக வேண்டும்

கற்போரை ஊக்குவிக்கக் கை கொடுத்தாலே
காலத்தின் கட்டளைகள் மாறும் தன்னாலே
நற் போரிதை நாம் தொடக்கி முடிக்கும் போதிலே
நன்மையின்றி வேறில்லை என்றுணர்வாயே!.....

தன் மான உணர்வு உள்ளது ஏழைகளிடத்திலே
தயங்காமல் அவர்கள் பெயரை முன் மொழியுங்கள்
எம் மானம் காப்பதற்கு உரிய தலைமைக்கு
எவன் மனிதன் என்றுணர்ந்து வாக்களியுங்கள்!.........
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/26/2013

உள்ளம் அது ஒளி வெள்ளம் என...


உள்ளம் அது
ஒளி வெள்ளம் என
துள்ளும் நிலை
அது போதும் இங்கே
இது தான் வாழ்க்கை
அன்பே கேளு ...........

சொல்லித் தரவா ....
பள்ளிப் பாடம்
அதில் இல்லை இது போல்
இன்பம் ஏதுவும்

முத்தம்  மழையாகும்
இங்கு உயிர் மூச்சில்
சுகம் சேர்க்கும்

சித்தம் தடு மாறாமல்
இன்பத் தேனை
அது வார்க்கும்

அன்பால் பொங்கும்
இன்பம் நூறு அதை
ஏற்றுக் கொண்டால்
துன்பம் ஏது !...........

உன்னில் எ(ன் )னைக் காண
அட என்னில் உ(ன்)னைக் காண
வண்ணக் கவி பாடும்
என் எண்ணம் உனதாகும்

கண்ணே கதை கேளு
கனியாத மனம் ஏது .......
விண்ணே குடையாகும்
ஆனந்த விழிநீர் மழையாகும்

பொன்னின் நிற மானே
அதைச் சொன்னால் புரியாதே
அள்ளிக் கொள்ள வா இங்கே
என்  அன்பைப் பொழிவேனே .....

                (  உள்ளம் அது ஒளி.....)
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/23/2013

அன்பை விடவா உயர்ந்தது அழகும் அறிவும் !அறிவு என்பது ஆசான் கொடுத்தது
அழகு என்பது இயற்க்கை கொடுத்தது 
இவை இரண்டும் அற்ற மனிதர்களால் 
இன்பம் காண முடியாதா ?...........!

பழகிப் பாரு பாசத்துடனே 
பட்டிக் காட்டான் வாழ்க்கை முறையை 
அன்பைத் தவிர ஏதும் அறியான் 
அவன் போல் மனிதன் யார் தான் இங்கே ?...!!

பட்டப் படிப்பு படித்ததனாலோ 
பார்ப்பதற்கழகாய் இருப்பதனாலோ
பிறரைத் துச்சம் என இங்கு மதிப்பவரே 
துற்பரிய நஞ்சும் ஆவார் .............

கற்றுக் கொடுத்ததைக்  கற்று முடிக்கவும் 
கல்விக் கண்ணைத் திறந்து பார்க்கவும் 
எத்தனையோ ஆசைகள் இருந்தும்
ஏமாற்றம் கண்டவர்கள் தான் எம்மில்ப் பல பேர் 

இனியும் குத்தி வைத்த மெடலைக் காட்டி 
கூனல்க் கிழவியையும்  மெருட்டாதே அவள் 
கற்றுக் கொண்டது வாழ்க்கைப் பாடம் 
கடலும் அங்கே  தாண்டாது !....................

பெற்ற தாயைப் போல் தான் ஞானமும்
போகும் இடம் எல்லாம் காத்து நிற்கும் 
அதையே  வைத்துக் கொண்டு பிறரை 
அழிக்க நினைத்தால் அதுவே துயரம் என்றாகும் !

சுற்றஞ் சூழ வாழ்வதற்கும் எம் 
சுமைகள் மறந்து போவதற்கும் இனியேனும்  
கற்றுக் கொள்ளு வாழ்க்கைக்கென்றும்  
கனிவும் அன்பும் கூட போதும் என்று.........

நாம் சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீரும்
அன்பினால் வந்தவை தான் .........                                                             
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

உன்னை நினைத்தாலே போதும் வரும் துயர் நீங்கும் !


புன்னகை பூக்கும்
மலர்களை அழிக்கும்
புழுக்களைக் கண்டேன்
ஆதங்கம் கொண்டேன்

என்னகை பெரிதெனும்
உணர்விலார் இங்கே
வன்முறை காட்டியே
வழி மறிப்பதைக் கண்டேன் !

உன்னை நான் நினைந்தேன்
உரக்க ஒலி கொடுத்தேன்
என் குரல் கேட்டதும்
எடுத்தனரே  ஓட்டம் !!........

பெண்ணிடம் உள்ள இந்த
வீரமது போதும் என்று
சொன்னவன் பாரதி நீயே
எமக்கு என்றும் பெருஞ் சோதி!..

கண்ணியமாய் மாந்தரைக்
காத்திட வேண்டும் என எண்ணிய
புண்ணியவான் உன்போலொரு
புலவன் கிடைப்பதென்றும் அரிதே !.....

பெண்ணியம் பேசி விட்டு
அவள் பொறுமையைச் சோதிக்கும்
கண்ணியம் இழந்தவர்களின் சில
கவி காணக் கசக்குதடா என் பாரதியே ..........

எண்ணியதெல்லாம் எழுதி விட்டு
இடர் கொடுக்கும் இக் காட்டினிலே
புண்ணியமாம் பாவமாம் அது என்ன
பூசி மெழுகுது கருவண்டு !!..........

காமக் கடல் நடுவில் நின்று கொண்டு
கசிந்துருகும் உணர்வாலே
எந்நாளும் தீட்டிய  அரை நிர்வாணக் கவிதைகள் 
இவைகளைக் காண்பதில்த் தான்  என்ன இன்பம்?...!

வீரம் செறிந்தது உன் கவிதை
பல வினைகள் திர்த்திடும் உன் கவிதை
எம் பாரம் குறைக்கப் பிறந்தவனே
நான் பணிகின்றேன் உன்றன் பாதமதை !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/21/2013

தமிழனுக்கு தேவை இங்கு தமிழீழம் மட்டும் தான் .கொன்று குவித்த
பிண வாடை நடிவினிலும்
நின்று சிரிக்குது தனக்கான
சமரசத்தை ஏந்திய வண்ணம் அநீதி !!..

பச்சைக் கம்பளம் விரித்தது போல்
இயற்க்கை எட்டுத் திக்கிலும்
கொட்டி வைத்த பசுமை இன்றும்
தமிழனின் இரத்த வெள்ளத்தில் மிதக்கிறதே !...

கண்கள் இருந்துமா இக்
காட்சிகள் புரியவில்லை !..
சுதந்திரப் பறவைகளும் இங்கு தான்
சுயமாகப் பறக்கவில்லை ....

கை கட்டி வாய் பொத்தி
உயிர்ப் பிச்சை போதும் என்று சில
உணர்வுகளைக் கொன்ற தமிழனிடம் அல்லவா
வாய்ப்பாடும்  கையளிக்கப் படுகிறது ¨.......

சமரசப் பேச்சு என்பதே சிறு துளியும்
சமரசம் அற்று இருக்கையில்
நீதிக்கு இங்கு என்ன  வேலை
நீர் மேல் எழுத்துப்  போல !!.......

கருவறை கிழித்த கைகளாலும்  தமிழனை
அழித்து ஒழித்த விழிகளாலும்  இன்னும்
அடங்கி ஒடுங்கிப் போவதற்க்காகவா  எம்
ஆருயிர்கள் மண்ணினில் புதைந்தார்கள் !..

சொகுசு வாகனக் காரர்கள் சும்மா
சுத்தித் திரிந்து பார்த்த காட்சிகள்
உண்மை இல்லை என்று தெரிந்த பின்னும்
நீதியைக் காக்க இன்னும் என்ன தடை!......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/19/2013

கருணைக் கடலே கண் திறவாயோ...

அசல்  இங்கே
நகல்  அங்கே
நகலை  நம்பும் மக்களுக்கு
அசலை  நம்ப வைப்பதாரு!....

பகலென்ன இரவும் என்ன
படுத்துறங்கும் வேளையிலும்
இறைவா உன் காலடிதான்
எனக்குள்ளே தெரிகிறது !.....

இது நீதி என்றுரைக்க
எழுந்தருள நீ மறந்தால்
உ(ன்)னை நம்பும் பக்தர்க்கு
உயிர் மூச்சு நின்றுவிடும்

பரிகாரம் ஏதும் இல்லை
பரந்தாமா உன் அருளே எல்லை
விழி நீரை நெய்யாக்கி
விடை தேடி அலைகின்றோம்...

விதி வரைந்த கைகளினால்
விடை எழுதிச் சென்று விடு
மதி மயங்கி நிற்போர்க்கும் 
மன அமைதி தந்து விடு

ஓர் உயிரை ஈருடலில்
ஒருங்கிணைக்க முடியாது
நீ எழுதும் தீர்ப்பினில் தான் இனி
நீதி என்றும் நிலைத்திருக்கும் !...
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/15/2013

செய்வன திருந்தச் செய் அதையே துணிந்தும் செய்!உப்புக் கல்லை வைரம் என்று
ஒப்புக் கொள்ளச் சொல்வார் அதையே
ஒப்புக்கொள்ள மறுப்போரிடத்தில்
மேலும் ஒழுக்கக்கேடாய் நடப்பார்!....

சிலர் கற்றுக் கொண்ட அறிவை மறந்து
கயமை உணர்வுடன் இருப்பார் இந்தச்
சுற்றம் சூழல் பெரிதென நினைத்தால்
வரும் சுமைகளை இங்கே யார் சுமப்பார் !...

பட்டிக் காட்டு மனிதர்கள் இவர்களைப்
பகைத்தால் துயரம் என்று நீயும்
கட்டுக்கடங்கிப்  போவாயானால் பின்னர்
வாழ்க்கை என்றும்  கசக்கும்

கற்றுக் கொள்ளு வாழ்வில் என்றும்
எம்மைக் காக்கும் சிலரே  போதும் என்று
விட்டுத் தள்ளு ஏனையவை எல்லாம் வீண்
விரக்தியை ஊட்டும் பதர்கள் என்று .......

எதிலும் குற்றங் கண்டே  பிழைப்பவரிடத்தில்
கூர்மையாக நின்றாலொழிய இங்கும்
விட்டுக் கொடுத்து நடப்பாயானால்
உன் முயற்சிகள்  யாவும் கெட்டுப்போகும் !......
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/13/2013

துடிக்கிறது நெஞ்சம்ஏழைக்கு ஆசை என்ன இனி
எதுகை மோனை எல்லாம் வீணே...
நாளுக்கு நாள் வலிகளைச் சுமக்கும்
நம் வாழ்வே  நரகம் தானே !........

தேருக்குள் அகப்பட்டாலும்
தேரை போல் மடிந்திடலாம்
இந்தப் பாருக்குள் அகப்பட்டோமே
முன் செய்த பாவத்தைக் கழுவித் துலைக்க..!!

கோரப் பல் முன்னே நின்று
கொலை வெறியாட்டம் ஆடும் போது
அவள் நாமத்தைச் சொல்லிச் சொல்லியே
இங்கு நம் வாழ்வும் முடியட்டும் ............

காலத்தின் கொடுமை அதனைக்
கணக்கிட்டால் தாங்காதுள்ளம்
மானத்தில் சிறந்த மனிதன்
மரம் போல தான் வாழ்வில் என்றும்!.......


ஈனர்களுக்கு ஒன்றே ஒன்று
அதை எடுத்துரைத்தும்
இங்கு பயன் என்ன ?....¨!!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/11/2013

உன்னோடு தான் உறவாடினேன்


உன்னோடு தான்
உறவாடினேன்
உனக்காகத்தான்
உயிர்  வாழ்கிறேன்
மண்ணோடு கலந்தாலும்
மறையாத நேசம்
என் வாழ்வில் ஏன் தந்தாய்
இது போல் ஓர் ஏக்கம்

கண்ணா நான் அழைக்கின்றேன்
கவி பாடிக் களைக்கின்றேன்
சும்மா ஏன் வெறுக்கின்றாய்
சோகத்தில் குளிக்கின்றாய்

தள்ளாடித் தள்ளாடி
மனம் ஏங்குதே  ...........
தலையணையோடு கதை பேசி
விழி வாடுதே ............
உன்னோடு நான் சேர
வழியில்லையா ..........
உயிர் அற்ற பிணம்
வாழ முடியாதையா .......

என் ஜீவன் உன் ஜீவன் என்றான பின்
இதயத்தின்  ஓசைகள் வேறாகுமா......!!
நீ கொண்டாடும் இடம் வேறு என்றானதால்
அன்றாடம் என் வாழ்க்கை திண்டாட்டத்தில்

கண்ணாடிப் பொருள்மீது கல் பட்டாலும்
கல் மீது கண்ணாடி தான் பட்டாலும்
கண்ணாடி தான் இங்கு உடையும் ஐயா
உன்னாலென் உயிர் போக வேண்டாமையா .......

                                     (  உன்னோடு தான் )

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/08/2013

உங்கள் அம்பாளடியாளின் இனிய மகளீர்தின வாழ்த்துக்கள் உறவுகளே!....


சக்தி வருகிறாள் மகா சக்தி வருகிறாள் 
மா தவம் செய்த மகா சக்தி வருகிறாள்
புத்திக் கூர்மையுடன் மிகப் பொலிவும் தாங்கி  
இங்கு சக்தி வருகிறாள் மகா சக்தி வருகிறாள் !........

எட்டுத் திக்கிலும் இவள் பெயர் ஒலித்திட 
பலதையும் கற்றுக் கொள்கிறாள் 
பார் போற்ற கற்றும் கொடுக்கிறாள் 
எம்மையும் பெற்றெடுக்கும் 
பெரும் பாக்கியம் பெற்ற பெண்ணவள்!...

விட்டுக் கொடு வழியதனை விட்டுக் கொடு 
பாரதி கண்ட புதுமைப் பெண் இவளே 
கப்பல் ஓட்டுகிறாள் கடலையும் 
அளந்து காட்டுகிறாள்!...

காலம் கணிக்கும் மண்டலத்தில் 
காலடி பதித்த கல்பனா போல் சாதிக்கவே  
பின்னலிட்ட சடையினிலே பூவை வைத்த  
பெண்ணிவளும்  துணிந்து விட்டாள் !.........

இன்னும் என்ன வீறாப்பு 
இரு கரம் கூப்பி நீ கொடு வரவேற்ப்பு
ஜன்னலோரம் நின்ற உன் நிலவு இனியேனும் 
விண்ணில் ஏறி வெளிச்சம் காட்டட்டும் !........

அன்னை துணையிருப்பாள் இனி அவள் 
மகளும் இவ்வுலகைக் காப்பாள் 
கண்ணை மறைக்காதே கனிவு காட்டத் தயங்காதே
பெண்ணைப் போற்றிடும் புதிய யுகம் இனிதே மலரட்டும்!... 
இனிய மகளீர்தின வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சங்களே 
தடைகளைத் தகர்த்தி எம் பெண்ணினம் சாதிக்க வேண்டும் 
இன்புற்று இனிதே வாழ வேண்டும் .பாரதி கண்ட புதுமைப் 
பெண்ணை நாளை இவ்வுலம் போற்ற வேண்டும் .வாழ்க 
பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று உலகில் !!............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/07/2013

வாருங்கள் உறவுகளே ஒன்று சேருங்கள்!...

ஈழத் திரு நாட்டில்
எம் தமிழர் தாய் நாட்டில்
மானம் காக்கப் பிறந்த
மறத் தமிழனடா உன் அப்பன்!...

ஏரைப் பிடித்த கரமும்
எடுத்துரைக்கும்  சுதந்திரத்தின்
வேரை ஊன்றியவன்
வெற்றிப் பாதைகளில்
சாதனைச் சுவடுகள் பதித்தவன்

அன்னை திரு நாட்டின்
அடிமை விலங்குடைக்கத்
தன்னைத் தந்து தாயாக நின்றவன்
உன்னை மட்டும் நினைத்திருந்தால்
உலகில் தமிழன் என்றோ தோத்திருப்பான் :(((
உனக்கும் வாழ்வு வந்திருக்கும்!......

பொன்னில் வடித்த சிலை போல
பரந்த மார்பில் குண்டேற
என்ன துடி துடித்தாயோ
இரக்கம் அற்ற அரக்கர்கள் முன்னால்!...:((((

வண்டு காதில் துளைத்தாலே
வருந்தும் மழலை உன் மார்பினிலே பல
குண்டுகள்  துளைக்கும் அளவுக்கு
கொடுமை என்ன நீ செய்தாய்
இதை இன்று கேட்க்க நாம் தவறினால்
ஈனத் தமிழன் என்றாவோம் !.........
                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

இப்போது சொல் உன் வாழ்த்துரைகளை !

நிலவென்று சொல்லாதே
இருள் சூழ்ந்த வாழ்விற்குள்
இன்னமும் ஒளியற்றுக் கிடக்கும்
பெண்ணினம் தான் ஏராளம் ஏராளம் .......!!

மலர் என்று சொல்லாதே
மணம் வீசி நின்றாலும்
மதியாதோர் கால்களுக்குள்
மிதிபட்டுப் போகும் பெண்ணினம் தான்
ஏராளம்...... ஏராளம்..!

என் உயிர் என்று சொல்லாதே
உரிமையைக் கொடுத்து விட்டு
இன்னமும் உயிரற்ற பிணமாக
அலையும் பெண்ணினம் தான் ஏராளம் ஏராளம் ...!!

மான் என்று சொல்லாதே அவள்
மயக்கத்தில் இருக்கும் போதே
வீணாக்கப் பட்டு வீசி எறியப்பட்ட
பெண்ணினம் தான் ஏராளம் ஏராளம் ....!!

மயில் என்று சொல்லாதே
குயில் என்று சொல்லாதே
அடக்குமுறைக்குள் இன்னமும்
அடங்கிக் கிடக்கும் பெண்ணினம் தான்
ஏராளம்..ஏராளம்...!

விழியிரண்டும் கெண்டை மீனா.....!!!
நீ விரட்டி அடிக்கும் போதெல்லாம்
கடல் நீரைக் கூட கடன் கேட்ட சண்டாளர்கள்
எதற்கு இத்தனை உவமைகள் .......!!!!!!!

பெண்ணைப் பெண்ணாகப் பார்
பெண்ணை பெண்ணாகவே  மதி
பெண்ணுக்கென்றே உள்ள உரிமைகளை
பெண்ணிடமே விட்டு விடு !...........;((((

                                                                அம்பாளடியாள் 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/05/2013

இறைவன் எழுதிய தீர்ப்பை மாற்ற முடியுமா !...


பாட்டுத் தலைவன்
பாட அழைக்கின்றான் குயில்
பாடிப் பாடி மகிழும் வேளையில்
வேட்டைக்காரன் வேவு பார்க்கின்றான்
வேட்டு வையடி என் தாயி ...

நோட்டுக் கட்டைப் பார்க்கும் ஆவலில்
நொந்து போகும் எந்த மனசும்  என்னைக்
கொன்று தாகம் தீர்க்கும் முன்னே
வென்று வாடி என் தாயி ............

காற்று இல்லையேல்
மூச்சு இல்லையே என்
காதல் சொல்லவும்
வார்த்தை இல்லையே

மாற்று  மோதிரம்
மாற்றச் சொன்னவள் நீ
மாலை மாத்திட
நன் நாளைப் பாரடி!......

ஆற்று நீரைக் கையில் அள்ளி
அளக்கப் பார்க்கிற அறிவாளி
தோற்றுப் போன செய்தி கேட்டு
என் தூய தமிழே நீ வாழ்த்துப் பாடு!....

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/04/2013

வெக்கித் தவித்தேன் வேதனை தீரவில்லைவெக்கித் தவித்தேன்
வேதனை தீரவில்லை
நான் வெந்து மடிந்தேன்
உன் ஞாபகம் போகவில்லை

கட்டழகு கட்டிக் கரும்போ  உன்
கண்களிலே தவழும் நிலவோ
கட்டழகு கட்டிக் கரும்போ  உன்
கண்களிலே தவழும் நிலவோ ....

முத்தமிட்ட கன்னங்களில்
முத்து முத்தாய் நீர்த்துளிகள்
சித்தரிக்க வார்த்தை இன்றி
சிந்தனைகள் வாடுதடா !........

                          (வெக்கித் தவித்தேன் )

பள்ளியறைப் பாடம் சொல்லி
என்னுயிரில் நீ கலந்தாய்-  இன்று 
தள்ளி வைத்துத் தாளம் போட
இன்னும் என்ன வேண்டுமடா? ...

கல்லில் முள்ளில் தூக்கம் என்ன ....!
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை
எந்தன் உயிர் வேகுதடா ................

பெண்ணின் துயர் கேட்பதாரு
பேச்சு நின்று போச்சுதடா ........
உள்ளத்திலே உள்ள சோகம்
ஊமை நெஞ்சை கொல்லுதடா ..

பாடல் தந்த தலைவனுக்கு
நான் பாடும் பாடல் கேட்கிறதா...
வீறாப்பு ஏன் உனக்கு இன்னும்
வேண்டாமே தப்புக் கணக்கு ...

                             (வெக்கித் தவித்தேன் )
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

3/02/2013

பூங்காற்றே பூங்காற்றே இந்தப் பூவை இனியும் தீண்டாதேபூங்காற்றே பூங்காற்றே
இந்தப் பூவை இனியும் தீண்டாதே
ஏங்காத ஏக்கம் இல்லை
என் வாழ்வில் தூக்கம் இல்லை
ஏங்காத ஏக்கம் இல்லை
என் வாழ்வில் தூக்கம் இல்லை!....

ஊமத்தம் பூவின் சொந்தம்
உள்ளூரத் தந்த துன்பம்
நீ வந்து தீண்டும் போதும்
என் நெஞ்சைக் கொல்லும் கொல்லும்

ஆராரோ ஆரிரரோ
நான் பாடக் காத்திருந்தேன்
யார் யாரோ சொந்தம் என்று
என் வாழ்வைக் கொன்றதாரு

                             ( பூங்காற்றே பூங்காற்றே)

வானத்தைப் பூமி தொடுமா
வடக்கைத்தான் தெற்கும் தொடுமா
காலத்தின் கேள்வி இதற்க்கு
கண்ணீரே பதிலானது !...........

மானத்தில் சிறந்த மங்கை
இவள் மனதுக்குள் ஓடும் கங்கை
இனிச் சேராத இடத்தைச் சேர்ந்து
செறாகிப் போனால் தகுமோ சொல்....

                           ( பூங்காற்றே பூங்காற்றே)

வாழத்தான் வாழ்க்கை என்றாய்
வடிவாகப் பேசிச் சென்றாய்
நான் உந்தன் சொந்தம் என்று
சொன்ன நாவும்தான் போனதெங்கே

விழி மூடாமல் வாடுகின்றேன்
இதற்கொரு  விடை தேடி ஓடுகின்றேன்
நீயின்றி நானா சொல்லு
என் யீவன் வாடுதிங்கே !.......

                   ( பூங்காற்றே பூங்காற்றே)
                            
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.