3/07/2013

இப்போது சொல் உன் வாழ்த்துரைகளை !

நிலவென்று சொல்லாதே
இருள் சூழ்ந்த வாழ்விற்குள்
இன்னமும் ஒளியற்றுக் கிடக்கும்
பெண்ணினம் தான் ஏராளம் ஏராளம்!

மலர் என்று சொல்லாதே
மணம் வீசி நின்றாலும்
மதியாதோர் கால்களுக்குள்
மிதிபட்டுப் போகும் பெண்ணினம் தான்
ஏராளம்! ஏராளம்!

என் உயிர் என்று சொல்லாதே
உரிமையைக் கொடுத்து விட்டு
இன்னமும் உயிரற்ற பிணமாக
அலையும் பெண்ணினம்தான் ஏராளம் ஏராளம்!

மான் என்று சொல்லாதே அவள்
மயக்கத்தில் இருக்கும் போதே
வீணாக்கப் பட்டு வீசி எறியப்பட்ட
பெண்ணினம்தான் ஏராளம் ஏராளம்!

மயில் என்று சொல்லாதே
குயில் என்று சொல்லாதே
அடக்குமுறைக்குள் இன்னமும்
அடங்கிக் கிடக்கும் பெண்ணினம்தான்
ஏராளம்..ஏராளம்!

விழியிரண்டும் கெண்டை மீனா!
நீ விரட்டி அடிக்கும் போதெல்லாம்
கடல் நீரைக் கூட கடன் கேட்டாளே!
எதற்கு இத்தனை உவமைகள்!

பெண்ணைப் பெண்ணாகப் பார்ப்போம்!
பெண்ணை பெண்ணாகவே  மதிப்போம்!
பெண்ணுக்கென்றே உள்ள உரிமைகளைப்
பெண்ணிடமே விட்டு விடுவோம்!

                                                                அம்பாளடியாள் 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

 1. உண்மைதான் எல்லோரும் பெண்ணை பொன்னாக காக்கவேண்டும். மேலும் இதையும் படித்துப் பாருங்கள்
  http://kaviyazhi.blogspot.com/2013/03/blog-post_7.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா தங்கள் கருத்துரைக்கு .

   Delete
 2. அழகிய கவிதை...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரி எங்களது வலைத்தள உறவுகள் எல்லாம்
   முகநூலில் புதைந்து கிடப்பதால் இப்போதெல்லாம் கருத்துரை
   கிட்டாமல் சனிக்கிழமை விரதத்திற்கு காக்கைகளைத் தேடி அலைந்த
   நினைவுகள் தான் மனக் கண்ணில் படுகின்றது :) தங்கள் வரவுக்கும்
   இனிய கருத்திற்கும் மிக்க நன்றி

   Delete
 3. வணக்கம்!

  கவிதையைப் படித்து மகிழ்ந்தேன்!
  கவிதை எழுதுவதில் இப்படியும் ஒா் பார்வை வேண்டும்
  வாழ்த்துக்கள்!

  நீங்கள் எழுதிய ஒவ்வொரு கண்ணியையும்
  உட்கொண்டு நான் என் கருத்தைப் படைத்துள்ளேன்
  உங்களை எதிர்த்தன்று!
  கவிஞா்களுகே உரிய விளையாட்டில்!

  என்றன் வாழ்வின் இருள்நீக்கி
  இனிதே ஒளியை ஏற்றியவள்!
  என்றும் மின்னும் நிலவாக
  இதய வானில் எழுகின்றாள்!

  மலா்போல் விழியைக் காண்கின்றேன்!
  மணம்போல் மொழியை எற்கின்றேன்!
  நலம்போல் என்னைச் சோ்கின்றாள்
  நங்கை அவளை என்சொல்வேன்?

  என்னுள் அவளே இருக்கின்றாள்!
  இன்பக் கவிதை படைக்கின்றாள்!
  பொன்னுள் பதித்த வைரமெனப்
  பொலியும் அவளே என்னுயிராம்!

  மானை மயிலை மங்கையுடன்
  வைத்துப் பார்த்து மகிழ்கின்றேன்!
  தேனைக் குடிக்கத் தடையேனோ?
  தென்றல் வீச மறுத்திடுமோ?

  ஆகா.. அவளின் விழிகளிலே
  அடியேன் காண்பேன் பேரின்பம்!
  ஓகோ.. என்றே உரைக்கின்றேன்
  உலகில் பெண்போல் உயா்வேது?

  பெண்ணை அடக்கி ஆளுவது
  பெருமை அன்று! செந்தமிழின்
  மண்ணைக் காக்கம் மறவா்நான்
  மகளிர் மாண்பைப் போற்றுகிறேன்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. இனிக்க இனிக்க கவிதை வடிக்கும் தங்கள் இதயத்தில்
   குடிகொண்ட இல்லத்தரசியின் காதல் உங்கள்
   உள்ளத்தில் இருந்து இத்தனை இன்ப வரிகளை
   மகிழ்வாக வடிக்கச் சொல்வதில் வியப்பில்லை.
   ஆனாலும் எம் பெண்ணினம் படும் துயர்களையே கண்டு
   கண்டு ஒரு பெண்ணாக என்னால் கோவம் கொள்ளத்தான்
   முடிகிறது ஐயா .பெண்ணைப் போற்றிக் கவி பாடுவது போல்
   அவள் வாழ சராசரி உரிமைகளைக் கூட கொடுக்க மறுக்கும்
   சமூகத்திடம் இந்நேரம் பெண்ணினத்தின் சார்பில் நின்று என்
   ஆதங்கத்தைத்தான் சொல்ல முடிகிறது அதுவே சரியெனவும்
   இது எனது கடமையாகவும் படுகிறது .மிக்க நன்றி ஐயா தங்கள்
   வரவுக்கும் இனிய கருத்திற்கும் .

   Delete
 4. Arumai thodara vaazhththukkal

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா வரவுக்கும் இனிய கருத்திற்கும் .

   Delete
 5. அலங்கார வார்த்தைகளால்
  பெண்களைப் புகழ்ந்து பாடி
  மறுபுறத்தில் அடிமை கொள்ள
  முயல்பவர்களை அழகாகச் சாடியுள்ளீர்கள்
  பெண்கள் தினத்திற்கு மட்டுமின்றி
  என்றைக்கும் ஏற்ற அருமையான கவிதை

  ReplyDelete
  Replies
  1. இனிய கருத்துக்களால் என் இதையம் தொட்டு நிற்கும்
   தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா !

   Delete
 6. எங்களை நாங்கள் முதலில் தரம் உயர்த்திக்கொள்வோம் தோழி.அழகான நமக்கான கவிதை !

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........