2/27/2014

மண்ணை மதிக்கும் மனத்தளவு பெண்ணை மதிக்க வரும் உயர்வு !


பாயும் புலியும் தாயானால் 
பண்பில் சிறந்து விளங்கிடுமே!
நாயும் அது போல் விலங்கெல்லாம் 
நம்மைப் போன்றே செயற்படுமே! 
சேயும் மகிழ உணவளித்து 
செம்மையாக வளர்த்திடுமே மனம் 
தேயும் நிலவா சொல்லிங்கே 
தென்பாய்ப் பேசும் ஆண்மகனே!

பெண்ணைப் போற்று இந்நாளில் 
பெருமை சேர்க்கும் நன்னாளில் 
கண்ணைப் போல காத்தவள்தான் 
கடவுள் தந்த உன்தாயும்!
விண்ணைத் தாண்டிச் சென்றாலும் 
விருப்பம் எல்லாம் உன் மீதும் 
எண்ணைத் தாண்டும் கடல் போல 
எல்லாம் அறிந்த ஆண்மகனே..

தாழ்த்திப் பேசுதல் மடமையடா! 
தர்மம் அவளின் உடமையடா! 
வீழ்த்திச் செல்ல முடியாதே 
வீரம் கொண்ட பெண்ணினத்தை
வாழ்த்தி வணங்கு எந்நாளும் 
வன்மம் வேண்டாம் மனத்தளவும் 
ஆழ்த்தி விடுவாள் மங்கையவள் 
அழகாய்த் திகழும் கங்கை மகள்!

எழுச்சி மிக்க பாடல்களை 
எழுதித் தள்ளும் கவிஞரெல்லாம் 
புகழ்ச்சிக்காக எழுதவில்லை 
புதுமை படைத்த பெண்ணினத்தின் 
நெகிழ்ச்சி மிக்க செயல்திறன்தான் 
நெஞ்சே இதனை அறிவாயோ!
மகிழ்ச்சிப் படுத்து உறவறிந்து 
மறந்தும் பெண்களைத் தூற்றாதீர்! 

பெண்ணின் பெருமை உலகறிந்து 
போற்றிப் பாடும் இந்நாளில் 
கண்ணின் மணியைக் கற்கண்டை 
கல்லுக் குள்ளே மறைக்காதே 
விண்ணின் அளவைத் தாண்டுமடா 
விரும்பிக் கற்கும் அவளறிவை 
மண்ணின் பெருமை தனைச் சொல்லி 
மகிழ்வாய் நாமும் ஏற்றிடுவோம் !

விலைகள் பேசி விலக்காதே 
விலை மாதென்று நினைக்காதே 
உலையும் எரிய வீட்டினிலே 
உண்மையாக உழைப்பவளை ஏன் 
அலைகள் போல அரிக்கின்றாய் 
அடிமை என்றே  நினைக்கின்றாய் ?
கலையும் அவளால் வளருதடா 
கருணை எதிலும் பொழியுதடா !

உருவம் மென்மை என்றாலும் 
உள்ளம்   கவர்ந்த    பெண்களுக்கு 
பருவம் மாறத் துணிவுமிங்கே 
பனி போல் விலகிச் சென்றிடுமா ?.
கருவம் வேண்டாம் எமக்குள்ளே 
கருவைச் சுமக்கும் தாய் முன்னே 
அருவம் உருவம் அவள் தானே  
அருவுருவம் போல் வந்த ஆண்மகனே ?..!
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

19 comments:

  1. ஆகா...

    /// மண்ணின் பெருமை தனைச் சொல்லி
    மகிழ்வாய் நாமும் ஏற்றிடுவோம் ! ///

    அருமையாச் சொன்னீர்கள் அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  2. எழுச்சி மிக்க பாடல்களை
    எழுதித் தள்ளும் கவிஞரெல்லாம்
    புகழ்ச்சிக்காக எழுதவில்லை“

    அருமையான பாடல் தோழி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  3. மிக அற்புதமான கவிதை! பெண் என்பவள் பெருமைக்குறியவள்! எல்ல உயிர்களுமே பெண்ணிடமிருந்து ஜனிப்பதுதானே! மங்கையாராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்!

    நல்லதொரு பகிர்வு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  4. மெய் சிலிர்த்தது நங்கையே ! ஆஹா அற்புதம்..!

    வீறு கொண்ட உன் பேச்சு
    விளங்கட்டும் எங்கும்
    வெறிகொண்ட எண்ணங்கள்
    வீழட்டும் மண்ணில் !

    வாழ்த்துக்கள் அம்மணி!

    ReplyDelete
  5. வணக்கம்
    உணச்சி மிக்க வரிகள் வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  6. நீங்கள் அடா அடா ன்னு முடித்தாலும் அடடா ன்னு சொல்ல வைத்தது உங்கள் கவிதை !
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  7. பெண்ணின் பெருந்தக்க யாவுள
    அருமை சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் பாராட்டிற்கும் .

      Delete
  8. எந்த வரியை எடுத்து மேற்கோள் காட்ட எல்லாமே உள்ளத்தில் ஒன்றாகிப் போனபின்பு !

    நன்றே உணர்த்தும் உம்கவியில்
    நனைந்தே போனது என்னுயிரும்
    பொன்போல் வரிகள் உன்னாவில்
    பொலிந்தே தவழக் காண்கின்றேன்
    அன்னைத் தமிழின் அழகெல்லாம்
    அள்ளித் தெளித்தே எந்நாளும்
    என்றும் இதுபோல் எழுதிடுவீர்
    எந்தன் உறவே அம்பாளே !

    அருமை என்று எப்படி சொல்வேன்
    அதைவிட அழகாய் போனபின்பு
    இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. உன்னதமான கருத்திட்டு ஊக்குவிக்கும் தங்களின் அன்பான
      இந்த வாழ்த்துரைக்கு என் மனமார்ந்த நன்றிகள் அன்புச் சகோதரனே !

      Delete
  9. அருவம், உருவம் எந்நிலையிலும் மதிப்பு என்றும் உண்டு என்பதைத் தாங்கள் பகிர்ந்த விதம் போற்றத்தக்கதாய் உள்ளது.

    ReplyDelete
  10. மிக்க நன்றி ஐயா வருகைக்கும் ஆழம் அறிந்து இட்ட நற் கருத்திற்கும் .

    ReplyDelete
  11. பெண்ணின் பெருமையை அழகாய் எடுத்துரைத்த கவிதை......

    த.ம. +1

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........