1/10/2015

குருவின் ஆசியுடன் பெருகட்டும் இனியநற் பாக்கள்..முத்தான சந்தங்கள் முன்னின் றொலிக்கவே
வித்தையைக் கற்று வியப்புறலாம்! - நித்தமும்
பாமாலை சூடுகிறார் பாரதி தாசனார்!
பூமாலை போன்றே புனைந்து! 

எண்ணச் சிறகில் எனைத்தாங்கி
   எங்கோ அழைத்துப்  போகின்றார்! 
வண்ண  வண்ணக்  கனவுடனே  
    வானில் பறக்கச் செய்கின்றார்! 
உண்ண உறங்கப்  பொழுதில்லை!   
    ஊக்கம் மிகவே உழைக்கின்றோம் !
விண்ணைத் தொட்டுக் குதித்தாட 
    விளைத்தார் புலமை என்குருவே! 

அள்ளித் தருவார் அரும்பாக்கள் 
    ஆழம் மிகுந்த கருத்தோடு!  
துள்ளித் துள்ளி மனம்பாடும் 
    தூய தமிழின் சுவைசூடும்! 
பள்ளிச் சிறுவர் எனநாங்கள்  
   பாக்கள் பயின்று வருகின்றோம் !
தள்ளி இருந்த யாப்பமுதைத்
     தந்து மகிழ்ந்தார் என்குருவே! 

கண்கள் காணும் காட்சிகளைக்
   கவிதை யாக்கும் கவியரசர் ! 
புண்கள் போக்கும் வகைதனிலே 
   பூக்கும் பாக்கள் புத்தமுதே! 
விண்ணின் வந்து  விழுந்திடினும் 
    வீரம் பொங்கக்  கவிபுனைவார் !
மண்ணைப் போற்றும்  மறவரென 
    மானம் காக்கும் என்குருவே! 

ஏங்கித் தவிக்கும் மனநிலையை 
   என்றும் அகற்றும் தமிழ்தருவார்! 
வீங்கிப் பெருத்து விழிபிதிங்கி
    வெம்பும் நிலையை மாற்றிடுவார்! 
மூங்கில் இசைபோல் என்னுடைய 
     மூளை குள்ளே புகுந்திடுவார்! 
தேங்கிக் கிடக்கும் உணர்வுகளைத்   
     தேனாய் மாற்றும் என்குருவே! 

பாடும் பணியே பணியெனநான் 
   பாடப் பெருகும் புதுச்சுகமே 
தேடும் எவையும் அழிந்திடலாம் 
    தேயா திருக்கும் மொழிப்பற்றே! 
வாடும் மனத்தின் வருத்தத்தை 
    வடித்தே  நீக்கும் வண்டமிழே! 
கூடும் இழந்த பறவையெனைக்   
     குளிரச் செய்யும் என்குருவே!

எண்ணக் கருத்தைச் செவிமடுத்தே 
   ஏற்றம் பெறுவீர்! மின்னுகின்ற 
வண்ணக் கவிதை வடித்திடவே  
    வருவீர்  இனிய உறவுகளே!
கண்ணைக் கவரும் வலைத்தளத்தில் 
    காலம் முழுதும் பயின்றிடலாம்!
நண்ணும் நலங்கள் தந்திடவே     
    நன்றே உழைக்கும் என்குருவே!

                                                                            
http://bharathidasanfrance.blogspot.ch/ என்றன் குருவின்  வலைத்தளம் கண்டு நாளும் வளம் பெறுவீர் !வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

36 comments:

 1. குருவே சரணம் அருமை சகோதரி.
  கில்லர்ஜி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா !

   Delete
 2. பள்ளிச் சிறுவர் எனநாங்கள்
  பாக்கள் பயில வரவேண்டும்!
  தள்ளி இருந்த யாப்பமுதைத்
  தந்து மகிழ்ந்தார் என்குருவே!

  மிகச்சரியாக சொன்னீர்கள் தோழி. யாப்பமுதைப் பருகிக் களிப்போம். ஐயாவிற்கு எனது வணக்கத்தையும் தங்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி !

   Delete
 3. குருவந்தனம் அருமை! ஆசியோடு அள்ளித்தாருங்கள் வெண்பாக்களை! படித்து ரசிக்க காத்திருக்கிறோம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நற் கருத்திற்கும் மிக்க நன்றி
   சகோதரா தங்களின் எதிர்பார்ப்பினை என்றுமே நிறைவேற்றத் தவற மாட்டேன் .நன்றி சகோ .

   Delete
 4. ஆஹா தமிழ் தாண்டவமாடுது.. வாழ்த்துக்கள்!!!.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   வருகைக்கும் பாராட்டிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரி !:)

   Delete
 5. சிந்தை செயல்கள் எல்லாமும்
  செழிக்கத் தமிழ்க்கே உரமாகும்
  விந்தை கொண்ட பெருமகனார்
  விளக்கும் யாப்புச் சிரமாகும்!
  கந்தல் மொழிகள் கண்படினே
  கலங்கித் துடிக்கக் கைபழக்கும்
  சந்தம் பாரதி தாசனெனும்
  சாரதி பெற்றாள் தமிழணங்கே!!!!

  “கைபடிய யாப்பில் கறையகற்றி நெஞ்சத்து
  மெய்படியச் செய்த மேன்மையினை - உய்யுவழி
  காணோதோர் காணக் கொடுத்தீரோ உம்மன்புப்
  பூணாகும் ஆசான் புகழ்“

  நன்றி மறப்பது நன்றன்று என்றதற்குத் தங்களின் பாடல்களே சாட்சி சகோ!

  அருமையான மரபுப்பாடல்கள்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !

   மிக்க மகிழ்ச்சி சகோதரா ¨!தாங்களும் பாராட்டப்பட வேண்டியவர் தான்
   தங்களிடமும் குவிந்துள்ள ஆற்றலைக் கண்டு இன்று வரை நானும் வியப்புறுகின்றேன் தாங்கள் ஆற்றும் தமிழ்ப் பணிக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி சகோதரா வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தம் பணி !

   Delete
 6. Replies
  1. மிக்க நன்றி சகோதரா .

   Delete
 7. வணக்கம்
  அம்மா
  குருவை போற்றும் துதியை கண்டு மகிழ்ந்தேன் .. அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  த.ம4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா !

   Delete
 8. மகிழ்ச்சி.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா .

   Delete
 9. சிறப்பிற்கு சிறப்பு... வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரா !

   Delete

 10. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா .

   Delete
 11. குருவிற்கான பா அருமை! சகோதரி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோதரா .

   Delete
 12. பாரதிதாசன் அவர்களின் சிறப்பை உணர்த்தும் பாக்கள் . வலையில் தமிஹ் பரப்பும் அற்புதக் கவிஞர் . அவர்டைய கவிதைகள் அனைத்தும் பாடங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   வருகைக்கும் இனிய நற் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரா .

   Delete
 13. வளரும் குழந்தை அழகெனவே
  வந்திடச் சொற்கள் பழகிடவே
  தளர்வே இன்றி தண்டமிழும்
  தந்திடக் கவித்தேன் உண்டேனே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   மிக்க மகிழ்ச்சி ஐயா !.

   Delete
 14. உங்கள் எழுத்தே உணர்த்துதே ,குருவின் மாட்சிமையை !

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் !
   மிக்க நன்றி சகோதரா !

   Delete
 15. செந்தமிழ் மாலை நீசூட
  சந்தம் எல்லாம் சரமாக
  சிந்தும் அழகுத் தமிழ்பாட்டு
  சுந்தரத் தமிழில் சுகம்காண
  வந்தனை செய்து வரம்கேட்கும்
  விந்தையை எண்ணி வியக்கின்றேன்!

  குருவின் புகழைப் பரப்பிடவே பாடப்
  பெருகும் புலமை சிறந்து!

  அதிசிறந்த பாக்கள் அருமைம்மா தோழி அன்புத் தோழியே !தொடருங்கள் ! வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 16. அருமை சகோதரியாரே
  அருமை

  ReplyDelete
 17. இயல்பாக அமைந்த எதுகை மோனைகள். பொருள் பொதிந்த சுவை மிகுந்த கவிதை வரிகள்.

  போற்றுதலுக்குரியவர் கவிஞர் பாராதிதாசன். மனம் திறந்த பாராட்டுக்குரியவர் நீங்கள்.

  மிக்க மகிழ்ச்சி அம்பாளடியாள்.

  ReplyDelete
 18. குருவின் சிறப்பைச்சொல்லும் கவிமாலை!

  ReplyDelete
 19. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete

 20. வணக்கம்!

  அடியேன் குறித்து வடித்திட்ட
    அமுதக் கவிகள் கண்ணுற்றேன்!
  குடியேன் ஆகித் தமிழ்மதுவை
    குடமாய் அள்ளிச் சுவைத்திட்டேன்!
  கொடியேன்? செடியேன்? கவிப்பூவைக்
    குவிக்கும் அம்பாள் அகமென்பேன்!
  தடியேன் உனக்கு? வலையுலகில்
    தாவிக் குதித்து விளையாடு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 21. வணக்கம்!

  அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
  இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
  நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
  பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

  எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
  சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
  தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
  பொங்குகவே பொங்கல் பொலிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 22. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........