1/22/2015

செந்தமிழ்ச் சோலை செழித்து வளர்கவே !

                                 

என்னுயிர்த் தமிழே தாயே !
    இணையிலா அழகே !தேனே !
பொன்னுயிர் பெற்று வாழ்ந்த 
    புலவராய் என்னை ஆக்கு !
பன்மணி பூண்ட பெண்ணே !
   பன்மலர்ச் சோலை நீயே !
மின்மணிப் பாக்கள் என்னுள் 
   விளைந்திட வேண்டு கின்றேன் !

செந்தமிழ்ச் சோலை பூத்துச் 
    செழிப்புடன் ஆடக் கண்டேன் !
நந்தமிழ் மேன்மை காத்து 
    நலமெலாம் புரியக் கண்டேன் !
தந்தன தாளம் போட்டுத் 
    தண்டமிழ் மணக்கக் கண்டேன் !
சந்தன மலர்கள் தூவித் 
   தாழ்ந்துநான் வணங்கு கின்றேன் !

சிறப்புற வந்த மாவைச் 
   சேனாதி ராசர் வாழ்க !
திறமுறப் பணிகள் ஆற்றும் 
   சி .சிரீ தரனார் வாழ்க !
மறமுற உணர்வை நல்கும் 
   மாசிலா வீரர் வாழ்க !
அறமொழி தமிழைக் கற்றே 
   அழகுடன் வாழ்வோர் வாழ்க !

                   
                                                                                                                                                                    வண்ணக் கனவு மெய்யாகி 
    வானில் பறக்கக் கண்டோமே !
எண்ணம் முழுதும் இன்பத்தை 
    ஏந்திக் களித்து நின்றோமே !
உண்ண உணவும் தந்தீரே !
    ஊக்கம் அளித்தும் வந்தீரே !
கண்ணாய் விளங்கும் செஞ்சோலை 
   காலம் முழுதும் வாழியவே !

பள்ளிச் சிறுவர் தாம்பெற்ற 
    பாட மதிப்பெண் கண்டங்கே 
அள்ளிக் கொடுத்து லட்சத்தை 
    ஆக்கம் செழிக்கச் செய்தீரே !
துள்ளிக் குதித்தும் வந்திங்கே 
     தொண்டு சிறக்கப் பாடுகின்றோம்
நள்ளி ரவிலே தோன்றுகின்ற 
    நடசத் திரம்போல் வாழியவே !

எங்கள் தலைவன் அந்நாளில் 
   எம்முள் விதைத்த நற்பணியைச் 
சங்கத் தமிழின் மீதாணை 
   சாற்றித் தொடர்ந்தீர் இந்நாளில் !
வங்கக் கடலும் வாழ்த்தத்தான் 
    வந்தங் குதிக்கும் பொற்காலம் !
மங்கா தொளிர எந்நாளும் 
    அன்பில் திளைத்து வாழியவே !

காலம் முழுதும் செஞ்சோலை 
    காக்க விரைந்து வந்தோரே !
ஆலம் விழுதாய் வேரூன்றி 
     ஆற்றும் பணியால் ஓங்குகவே !
சீலம் நிறைந்த நம்நாட்டைச் 
   சீராய் வளர்த்தல் நம்கடனே !
மாலன் திருத்தாள் எழில்எண்ணி 
   மகிழ்ந்து நன்றி உரைக்கின்றேன் !     

                                                                          
                                                             நன்றி வணக்கம்...
                                                                                                                                                                              
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

11 comments:

 1. செந்தமிழ் சோலையை சிறக்க வாழ்த்தி பாடிய பாமாலை அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  ReplyDelete
 3. அருமைக்கவி வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 4. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  ReplyDelete
 5. அருமையான பாமாலை.
  வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 6. //காலம் முழுதும் செஞ்சோலை
  காக்க விரைந்து வந்தோரே !
  ஆலம் விழுதாய் வேரூன்றி
  ஆற்றும் பணியால் ஓங்குகவே !
  சீலம் நிறைந்த நம்நாட்டைச்
  சீராய் வளர்த்தல் நம்கடனே !//

  அழகான வரிகள் ....... இனிமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. அனைத்து வரிகளும் அருமை அம்மா...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. அருமையான பா வரிகள்.... பாராட்டுகள்.

  ReplyDelete
 9. செஞ்சோலைக் கவிதை வாழ்த்து சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்த்து க்கள் தோழி ..!

  ReplyDelete
 10. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. நிறைவான வரிகள். அருமையான வாழ்த்து. நன்றி.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........