வெற்றிபெற்ற களிப்பொன்றே வாழ்வில் போதும்
.....வேறுவேலை இங்கிருந்தால் பார்த்துச் செல்வீர்!
பெற்றவெற்றி ஒன்றினையே எண்ணி எண்ணிப்
.....பெருமைகொள்ளல் வளர்ச்சிக்குத் தடையாய் நிற்கும்!
கற்றவர்கள் எப்போதும் களிப்பில் மூழ்கிக்
.....கண்டபடி கதைபேசித் திரிய மாட்டார்!
அற்புதங்கள் நிகழ்த்துவதே அவர்தம் நோக்கம்
....அதனால்தான் இன்றுலகால் அறியப் பட்டார்!
மற்றவரை மதிக்கின்ற பண்பு ஒன்றே
....மானுடர்க்கு மகத்தான பண்பே ஆகும்!
பெற்றாலும் அப்பேறு நிலைக்க வேண்டிப்
....பெருமுயற்சி எடுத்தென்றும் உழைக்க வேண்டும்!
தற்பெருமை தலைசிறந்த கலைஞர்க் கிங்கே
....தகாதென்ற உண்மையினை உணர்தல் வேண்டும்!
அற்பமாயை உலகினிலே சிக்கிக் கொண்டே
.....அடுத்தவரைப் பகையாளி என்றெண் ணாதீர்!
ஏட்டிக்குப் போட்டியாக வளரும் ஆற்றல்
....எவர்த்தடுத்தும் நிற்காதென் றெண்ணிக் கொள்வீர்!
நாட்டிற்குள் திறமையினால் உச்சம் பெற்ற
.....நல்லவரை வாழ்த்துவதே நற்பண் பாகும்!
வீட்டிற்குள் எப்படியும் வாழ்தல் உண்டு
.....வியாபாரத் தளத்தினிலே உண்மை வேண்டும்!
போட்டியிலே சிலசமயம் தோல்வி வந்தால்
.....போராடி வெற்றிகொள்வீர் அதுவே தர்மம்!
அண்டங்கள் கடந்திங்கு நிற்கும் மாந்தன்
....ஆற்றலினை எவருமிங்கு அறிதல் நன்று!
மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவே நின்று
.....மகத்தான சாதனையைப் படைப்பார் வென்று!
எண்ணியிதை நாம்பார்க்கத் தவறும் போதே
......எண்ணத்தில் விரிசல்கள் வந்து சேரும்!
புண்பட்டுப் புரையோடி நிற்கச் செய்யும்
.......புரிந்துணர்வே அற்றசெயல் இதனால் ஓங்கும்!
நான்பெரிதே என்றெண்ணும் எண்ணம் கொண்டால்
.....நல்லதெது கெட்டதெது தெரியா திங்கே!
கூன்விழுந்த மனதினிலே தோன்றும் கோபம்
.....குற்றமற்ற எவரையுமே கொல்லத் தூண்டும்!
நோன்பிருந்து பெற்றபிள்ளை இவ்வா றென்றால்
....நொந்துபோகும் தாயுள்ளம் என்ன ஆகும்!
ஏன்பிறந்தோம் என்றெண்ணி வருந்த வைக்கும்
....இழிச்செயலை எவருமிங்குத் துறத்தல் நன்று!
வார்த்தைகள் சரளமாக வந்து வீழ
ReplyDeleteவடித்திட்ட கவிதையிது அருமை அருமை
சோர்ந்திடாது என்றுமினி இதனைப் போல
தினந்தோரும் கவிநூறு யாத்து நீயும்
பார்புகழும் கவியாகி பதிவர் உலகே
பெருமையுறச் செய்திடுவாய் அம்பாள் நீயே
சீர்மல்கும் மதுரைவாழ் அன்னை அருளால்
செம்மையெல்லாம் பெற்றுயர்வாய் இன்னும் மேலே
வணக்கம்!
Deleteஎப்போதும் போல் இப்போதும் என்னை ஊக்குவிக்கும்
தங்களுக்கு மிக்க நன்றி ரமணி ஐயா!
நன்று.... பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி அன்புச் சகோதரனே!
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றி அன்புச் சகோதரனே!
Deleteஅறிவுரை விருத்தம் அருமை கவிஞரே!
ReplyDeleteநன்றி
மிக்க நன்றி அன்புச் சகோதரனே!
Deleteஅருமை!! பல மாதங்கள் கடந்து தங்களிடமிருந்து அருமையான பாமாலை!!! வாசிக்கும் மகிழ்ச்சி!!
ReplyDeleteமிக்க நன்றி அன்புச் சகோதரனே!
Deleteநான்பெரிதே என்றெண்ணும் எண்ணம் கொண்டால்
ReplyDelete.....நல்லதெது கெட்டதெது தெரியா திங்கே!
என்ற
பாடலைப் புரிந்து கொண்டவர்
உலகை வெல்ல முடியுமே!
மிக்க நன்றி அன்புச் சகோதரனே!
Delete