4/07/2017

இதுவே எமக்கான பாதை!

 

அப்பனுக்குப் பிரணவத்தின் பொருளு ரைத்த
.....ஆறுமுக சாமியையே எண்ணிப் பாரீர்!
இப்புவியில் நாமெல்லாம் ஞானி யன்றோ!
......எடுத்தெறிந்து பேசுவதற் கொன்றும் இல்லை!
தப்பாட்டம் ஆடுகின்றோம் இதுவே எம்மின்
......தலைக்கனம்தான் என்றவரும் புரிதல் நன்று!
நற்கருத்தைச் சொல்வதற்கு நாயைக் கூட
.....நாமிங்கே அனுமதித்தால் நன்மை உண்டு!

கிட்டாத வாய்ப்பதனால் எம்மை இன்று
.....கீழோர்  என்றவரும்  நினைக்கக்  கூடும்!
எட்டாத தூரத்தில் இல்லை யென்று
......எவர்முயற்சி செய்தாலும் வெற்றி உண்டு!
பட்டதெல்லாம் போதுமென்ற எண்ணம் மட்டும்
.....பகுத்தறிவுக் காகாத செயலாய்க் கொள்வீர்!
கெட்டகுடியும்   மேலோங்க வாய்ப்பும்  உண்டு!
.....கேள்விஞானம் இங்கிருந்தால் அதுவே போதும்!

இன்றெவரும் பிறக்கையிலே கற்றுக் கொண்டே
....இப்புவிக்கு வரவில்லை எண்ணிக் கொள்வீர்!
முன்ஜென்ம பாவமென்று முயற்சி இன்றி
......முடங்கிவிட்டால் மூலையில்தான் கிடைக்க வேண்டும்!
பின்நாளில் நாம்விட்ட பிழையை  எண்ணிப்
.......பிதற்றுவதால் ஆவதிங்கே ஒன்றும் இல்லை!
நன்மையொன்று  கிட்டவேண்டும் என்றால் நாளும்
......நாம்தேடி அடையவேண்டும் அதுதான் வாழ்க்கை!

பிள்ளையொன்று பால்குடிக்க முதலில் கற்கும்
.....பின்னாளில் பால்நிலவில் காலை வைக்கும்!
எள்ளளவும் முயற்சியின்றிக் கிடந்தி ருந்தால்
.....எட்டியடி வைப்பதற்கே பாதம் கூசும்!
துள்ளியெழு விரைந்திங்கு வெற்றி கிட்டும்!
......துணையாக உன்னைநீ அழைத்துச் சென்றால்!
பள்ளியிலே கற்றவர்தான் மேதை அன்று
......பயின்றுவந்த அனுபவத்தைப் பாட மாக்கு!

தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

  1. ஆவ்வ்வ் அம்பாளடியாள் நலமோ?... நீண்ட இடைவேளைக்குப் பின் மிக அருமையான ஒரு பாடல்..

    ReplyDelete
  2. நன்று. பாராட்டுகள்.....

    ReplyDelete
  3. அருமையான தன்னம்பிக்கைக் கவிதை.

    ReplyDelete
  4. ரசிக்க வைத்த கவிதை :)

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........