இரத்தம் பொங்கி வழிகிறதே!.
இருதயம் அங்கெ துடிக்கிறதே
உலகுக்கு ஒரு சாட்சி
உனக்குமா .இல்லை மனசாட்சி!
கடல் அன்னை அணைப்பாலே
கடுங் கோவம் தணிப்பவனே
உலகத்தின் சங்கதியை
ஓயாமல் பார்ப்பவனே
தமிழன்னை என்னிடத்தில்
தவறென்ன நீ கண்டாய்?
பொங்கிப் படைத்த இனம்
மங்களத்தை இழந்த பின்னும்
மங்காத ஒளிகொடுக்கும்
எம் தங்கமே உனக்கு
எங்கள் மீது கோவம் என்ன!
ஏற்றத் தாழ்விங்கே
எப்போதும் பாராமல்
எறிக்கின்ற உன் ஒளியில்
இடரின்றி வாழும் இனம்
இறைவன் என்று கொண்டாடும்
இன்னிலையிலும் ஏனோ
சரித்திரத்தில் இருந்து
எம் இனத்தை முற்றிலும்
அழித்திட நினைக்கும்
இந்தத் தரித்திர பலனை
நீயும் துடைக்க மறந்தாய்!
படைத்தவன் கணக்கில்
பஞ்ச பூதங்கள் அழிவதில்லை
உயிர் வளர்த்திடும் இவைகளும்
எமக்கெதிர் ஆனதென்ன!
ஊர்வனபோல் மனம்
உழன்றிடும் போதிலும்
நெஞ்சின்மேல்
தேர் வலம் வருவது முறைதானோ!
திருவடி தொழுதிடும்
அடியவர் மனங்களை
தீக்கிரை ஆக்குதல் சரிதானோ!
பாக்குடன் வெற்றிலை
பல வகைப் பழங்களும்
பாலொடு நெய்யும் நல்ல
பச்சை அரிசிப் பொங்கலும்
படைத்திட இன்னமும்
மனம் துடிக்கிறதே!.....இருந்தும்
சேற்றினிலும் மழையினிலும்
சிக்கித் தவிக்கும் இன்நிலையில்
ஒருவேளை சோற்றுக்கும்
உறங்க ஒர் இடத்திற்கும்
நாதியற்று எம்மினம்
நடுத் தெருவில் நிற்க்கிறதே!
.
.
மாடி கட்டி வாழ்ந்த இனம்
இன்று மண்டியிட்டு நிற்கையிலே
வேள்வியது உனக்களிக்க
வேறுவழி தெரியலையே!
ஆறாகிப் பெருகியோடும்
அத்தனை துன்பமும் இங்கே
நீறாகிப் போக எமக்கு இனி
நீதான் அருளல் வேண்டும்!
நவக்கிரக நாயகனே எமக்கு
நல்ல பலன் தந்தருள்வாய்
அடுத்து வரும் பொங்கலேனும்
எம் அகம் குளிரச் செய்திடுவாய்.
"..சேற்றினிலும் மழையினிலும்
ReplyDeleteசிக்கித் தவிக்கும் இன்நிலையில்
ஒருவேளை சோற்றுக்கும் .."
காலத்திற்கேற்ற நல்ல கவிதை.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
.....அடுத்து வரும் பொங்கலேனும்
ReplyDeleteஎம் அகங் குளிரச் செய்திடுவாய்....
கடைசியாய் கதிரவனையும்
கருணையால் கேட்டிடுவோம்
கனக்கும் சுமையெல்லாம்
களைந்திடுவான் நாளையவன் !!
நன்று தொடருங்கள் நற்பணி !!
மிக்க நன்றி தங்கள் இருவரினது
ReplyDeleteகருத்துகளுக்கும்,பாராட்டுகளுக்கும்........