1/06/2015

அரசுகளின் கவனத்திற்கு

                                         

அழிவதை நினைவில் தேக்கி 
   அலைந்திடும் உலகின் போக்கை
விழிகளில் உணரு கின்றோம் 
   விடைதனைத் தருவார் யாரோ?
மொழிந்ததை ஆய்ந்து நன்றே 
   முன்வரும் துயரை நீக்கு!   
தொழிலுறும் துாய்மை யாலே  
    தொடர்வினை அகலும் இங்கே !

பயிர்வளம் கருக நாளும்  
   படர்துயா் வந்தே சேரும்!
உயிர்வளம் தழைப்ப தெங்கே?
   உடனிதை  உணர்தல் நன்றே!
மயிரிழை போன்றே வாழ்வு!  
    மனமுதை உணா்தல் வேண்டும்! 
துயில்கிறார்  கவலை யின்றி
    துயரிதைத் தடுக்க வாரீர்!

கயவரை அடக்க எண்ணி 
  கழிச்செயல் புாிதல் ஏனோ? 
உயரிய நெறியை விட்டே
  உயிர்களைப் பறித்தல் ஏனோ? 
தயவுடன் அறியத் தந்தோம் 
   தருமத்தைக் காவல் செய்வீா்!
முயற்சியே இன்றி நாட்டை 
    முடக்குதல் கொடுமை அன்றோ?

குடிமனை எரியக் கண்டு 
    குமுறுது மனமும் இன்று !
மடிபவர் மனிதர் என்று 
   மனங்களும் உணர்தல் நன்று!
விடிவினை எதிர்கொள் ளத்தான் 
   விரைந்தொரு முடிவைத் தேடி 
அடிமையெம் அகத்தின் ஓசை 
    அயர்விலா தொலிக்கு திங்கே !

டைமைகள் இழந்த மக்கள் 
   உாிமையைப் பெறவே வேண்டும்!  
கடமையை உணர்ந்தே நாடு  
   கடன்தனைப் புாிதல் வேண்டும்!
மடமைகள் அறிவை மாய்க்க 
    மனிதனை மனிதன் மேய்ப்பான் 
இடரெலாம் நீங்கும் வண்ணம் 
     இனிதுறும் வழிகள் செய்வீர்! 
                                                                      
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:


  1. வணக்கம்!

    உலகியல் போக்கை உரைக்கும் விருத்தம்
    நலமியல் நல்கும் நமக்கு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. நல்ல கோரிக்கை.

    பாடல் அருமை தோழி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அனைத்தும் நிறைவேற வேண்டும் அம்மா...

    ReplyDelete

  4. விடமென அஞ்சா தென்றும்
    வடங்களை வீசும் முன்னே
    மடையென வெள்ளம் வந்தே
    முடைகளை செய்த போதும்
    படைகளை திரட்டி வந்து
    புரட்சியே வெடித்த பின்னும்
    திடம்மெலாம் கொண்டு நீயும்
    தடைகளை தகர்ப்பாய் பெண்ணே !

    ஆஹா அருமையான விருத்தம் தோழி ! வைத்த கோரிக்கைகளும் மிக மிக நன்றே மேலும் பல பாக்கள் படைக்க வாழ்த்துக்கள் தோழி ! மிக மிக ஆவலாக உள்ளேன். இனிய பாக்கள் அருந்த.

    ReplyDelete
  5. அருமை அருமை புகைப்படம் உள்பட..... வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வணக்கம் தோழி!

    இடர்கள் அகல எழுந்த விருத்தம்
    படர்க பணியாய்ப் பரந்து!

    அருமையான விருத்தம்! சிறந்த நற் கோரிக்கைகள்!
    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  7. அருமையான கவிதை சகோதரி! தங்களின் தமிழ் அழகையும், விளையாட்டையும் சொல்லவும் வேண்டுமோ!!!!? வார்த்தைகள் இல்லை சகோதரி! சுவைக்கின்றோம் தங்களின் இனிய தமிழையும், கருத்துக்களையும்!

    ReplyDelete
  8. எண்ணிய முடிதல் வேண்டும்!
    அருமை

    ReplyDelete
  9. உடைமைகள் இழந்த மக்கள்
    உாிமையைப் பெறவே வேண்டும்! = அருமை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. இன்றைய தேர்தல் முடிவு, உங்கள் கோரிக்கைகளை நிறைவேறச் செய்யுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் !
    த ம 8

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........