8/31/2015

காத்தருள வா தாயே !

                                                           
கருமாரி அம்மாநீ கண்திறந்து பார்த்தால்    
வரும்துயரும்  ஓடாதோ வாழ்வில் !-இருள்போம்!
உலகத்தின் சக்தியே  உன்னால்தான்  இங்கே
கலகமும் அற்றுப்போம் காண்!


முத்தொளிரும் நம்நாட்டின் முன்வினையத் தீர்த்திடத்தான்
இத்தரையில் யாருள்ளார்  இங்குச்சொல்? !-சித்தம்
கலங்குதடி தாயேயெம்   கண்ணீரைப் பார்த்தும்
உலகத்தின் துன்பத்தை ஓட்டு !

ஓங்காரி ஒய்யாரி உன்னால்தான் இன்றிங்கே
நீங்காத துன்பமெல்லாம்  நீங்குமடி !-பாங்காய்
அடியெடுத்து வா..தாயே ! அன்றாடம் ஏங்கி
மடியுதே எம்மின் மனம் !

நாடிழந்து வீடிழந்து நம்பிக்கை தானிழந்து
ஓடியே  இன்றிங்கே  ஓடானோம் !-கூடி
வருந்துகின்றோம் வாழ்வெல்லாம் வந்ததுன்பம் போதும்!
அருமருந்தே வந்திங்(கு) அருள் !

பொல்லாதார் ஆட்டிவிக்கும் பொம்மையென்றும் ஆனோமே !
இல்லார்க்கும் இவ்வுலகில் இன்பம்நீ!-வல்ல
துணையின்றி வாழ்வேது ?  தூயவளே போதும்
அணைபோட்டுக் காத்தே  அருள் !

தாயுன்றன் நல்லருளால்   தாயகத்தை வென்றிடலாம்
பேய்களுமே ஓடிவிடும் பேச்சிழந்து  !-நாய்போல்
அலைகின்ற  இந்நிலைபோம்!   அன்னியரின் ஆட்சி
கலைத்தெம்மைக் காத்தே அருள் !


                                                                     
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

7 comments:

  1. அருமையான வெண்பாவும் வேண்டுதலும். துன்பம் துடைப்பாள் அத் தூயவள் நன்றி! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  2. இப்படி அழகாக பாடியழைத்தால் வராமல் இருப்பாங்களோ கண்டிப்பாக அருள் கிடைக்கும் தோழி.

    ReplyDelete
  3. தாயிடம் வேண்டினை தன்னருள் ஈந்திடுவாள்!
    சேயெமைக் காப்பாள் சிறந்து!

    அழகு வெண்பாக்களால் ஆராதை செய்தீர்கள் தோழி!
    கண்டிப்பாக அருளுவாள்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. எவ்வளவு அழகான வெண்பா!!!!!! இப்படி எல்லாம் எழுதினால், அந்தத் தமிழ் தாயும் கனிவாள்! கருமாரி அம்மாவும் கனிவார்!!!!!

    அருமை! சகோதரி!

    ReplyDelete
  5. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருமையான பா தோழி!
    தாயகம் வென்று அந்நியன் ஓட வாழ்த்துகள்

    ReplyDelete

  7. வணக்கம்!

    அன்னை அருள்வேண்டி இங்களித்த இன்வெண்பா
    என்னைப் புரட்டி இனிப்பூட்டும்! - பொன்னைநிகர்
    பொல்லழகு கண்டேன்! சுவையூறும் தேனுண்டேன்!
    வெல்லழகு கண்டேன் வியந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........