7/10/2011

கொடையிற் சிறந்த "கொடிவேல்"

ஏவாமற் பணிபுரிய ஈசன் எமக்களித்த
இருகரமே மூவா மக்களுள் முனிவரும்
நின்கருணை உளமறிவார்...........
 
நாவால் நாமுரைக்க முடியா நின்பணியது!..
காரிருளில் ஒருவிளக்காய் எமைக்காத்து 
நின்ற திருவிளக்கே வானுலகம் சென்றாலும் 
வையத்தே நின்புகழ் வாழ்வாங்கு வாழ 
வள்ளலே நாகேந்திரரே நின்பணி  பூவோடு 
மணமதுபோல் பூவுலகில் நிலைத்திருக்க 
நன்நாவுடைய மனிதரெல்லாம் 
நின்நன்றியை எடுத்துரைக்க வையத்தே
நின்வம்சமெல்லாம் தழைத்திருக்க மாறாது
மறையாது நின்பணி தொடர்ந்திருக்க
மறுபடியும் பிறந்து இங்கே வாழ்வாங்கு 
வாழ வாழ்த்துரைப்போம்....
 
என்ன இந்தப் பிறவியென இருளில்
கிடப்பவர் முன் தன்னை அழித்து ஒளிகொடுக்க
இத்தரணியிலே மெழுகினைப்போல்
கல்வியொடு கருணையும் கலந்து பிறந்த மானிடருள்
உன்னை ஒருவனாய் ஒளிகொடுக்கும் தலைவனாய் 
எண்ணி மகிழ இறைவன் எமக்களித்த வள்ளல் 
பெருந்தகையே எம் வாழ்வில் இன்பம் அளித்த 
நாகேந்திரரே எம்மையாம் இழந்த பின்னும் 
உன்பெயர் நிலைத்திருக்கக் கவிபாடிடுவோம்.... 
 
நெஞ்சமெனும் ஆலயத்தில் நிழல்
கொடுத்த தந்தையிடம்-தஞ்சமென
வந்தவர்க்குத்  தானம் கொடுத்தகரம்
பஞ்சமெனும் நிலைபோக்கி பாசமளிக்கும்
மனமுனை நெஞ்சுருக வாழ்த்துகிறோம்
நித்தமும் பணிபுரிந்த ஒப்பிலா அன்பின்
உணர்வுடைய அன்னையே!...தந்தையே!..
நின் ஊனுடல் மறைந்திடினும் எம் உள்ளத்தே
பெரும் பேருடனும் புகழுடனும் திகழும் மனம்
வாழ்க வாழ்கவென வாழ்த்துரைப்போம்....
 
தீவொடு தீவாய் திகளுமொரு நெடுந்தீவினிலே
பூவொடு நாரினைப்போல் பிணைந்தனர் நற்பணியில் 
பூவுலக நாயகனாம் புண்ணியனாம் 
நாகேந்திரரொடு செல்லம்மா கரம்பிடித்து 
சேவையினால் தன்தேவை மறந்த இனம் 
அல்லும் பகலும் இணைந்தன்பாய் இரு உயிரும் 
சொல்லில் அடங்காப் பணிபுரிந்தனரே!.......
கண்ணின் மணியெனக் காத்த நெடுந்தீவில் 
இன்னும் பலபிறவி எடுத்து இங்கே நலம்வாழ 
வாழ்த்துரைப்போம்...........
 
காரிருளில் ஒரு விளக்காய் 
கருணையுடைய திரு விளக்காய்
பார் புகழ வந்தபிதா நெடுந்தீவினிலே
நெஞ்சை நெகிழவைத்து நித்தமும் சேவைசெய்து 
எமை உத்தமராய் வாழ வைத்து
ஒளிகொடுத்த தெய்வமே உயர்திரு 
நாகேந்திரரே நின்உருமறைந்து போனாலும் 
வழிவழியாய் உன் கருணைக் கரம்கொடுத்த 
பொருள் மறவோம் புண்ணியனே உனது 
உடல்கொடுத்து எமக்களித்த வரம் மறவோம்
செந்தமிழன் சிரம் காக்க சேவையிலே தன்
தேவை மறந்த மாமனிதன் தேடித் தேடி 
வரம்கொடுத்த தெய்வமே உனது
மூச்சுக்காற்றில் முனிவரும் தன் தவம் துறப்பார் 
மன்னவனோ அவன்புகழில் ஒருகணம் 
மயங்கி நிற்பான் தன்னையொருவர் 
புகழுரைத்தால் அதைத்தவறு என்றே 
இவர் அறிவுரைப்பார்!...........
வெறும் சொல்லில் மட்டும் செயலைக் 
காட்டும் மனிதர் வாழும் இவ்வுலகில் 
பள்ளிப்பாலகரும் சொல்லி மகிழ்ந்திடக் 
கல்விக்கூடம் தந்த பிதா.......
தண்ணிக்கிணறுடன் இறைதாகம் தீர்த்திட 
கோவில் அமைய சேவை புரிந்த பிதா...
எம்மை உலகொடு இணைந்து  வாழ
இயந்திரப்படகை வரவழைத்தார் 
தன்னைநாடி வருவோரெல்லாம் 
தன்னுறவாக எண்ணி மகிழ்ந்தார் 
தானம் கொடுத்து தானும் மகிழ்ந்து 
எம் தலைவனைப்போல நின்றார்!..
வானம் இறைக்கும் நீரைப்போல 
தானும் கொடுக்கும் இடமறியார்
ஊசி முனையிலும் பொருளைத்தேடி
அலையும் மனிதர்கள் வாழும் உலகில் 
கொடையில் சிறந்த மனிதனதனால் 
கொடிவேல் என்று பெயரும் பெற்றார். 
 
(இதுவே எனது முதலாவது கவிதை அரங்கேற்றம்.
அடுத்த பதிவிலும் இன்னுமொரு வித்தியாசமான 
அனுபவத்தோடு சந்திக்கின்றேன் தொடருங்கள் 
உறவுகளே......) 
 
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

6 comments:

  1. முதல் கவிதைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. முதல் கவிதையே முத்து போல் இருக்கே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆஹா!!
    விளையும் பயிர் முளையிலே தெரியும்
    என சும்மாவா சொன்னார்கள்.
    மரபு மாறாமல் முதலிலேயே
    கவியுரைத்த உங்களின் இப்போது கவிக்கும் கருப்பொருட்களை
    சொல்லவேண்டுமா என்ன!!

    அருமை அருமை!
    என் வலைப்பக்கமும் வந்து செல்லுங்கள்!!

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் .தொடருங்கள்.

    ReplyDelete
  5. வெறும் சொல்லில் மட்டும் செயலைக்
    காட்டும் மனிதர் வாழும் இவ்வுலகில்
    பள்ளிப்பாலகரும் சொல்லி மகிழ்ந்திடக்
    கல்விக்கூடம் தந்த பிதா..//

    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.



    hot tamil actress gallery

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........