8/17/2015

வெண்பாக் கொத்து !

                                                               
                                                   
                                                   அன்னைநீ எனக்கு !


வெண்பாக் கொத்து !


குறள் வெண்பா 

அன்னைநீ  தெய்வம்  ! அருந்தமிழே! அன்புருவே!
இன்னருள்செய் நாளும் எனக்கு !

நேரிசைச்  சிந்தியல் வெண்பா 

அன்னைநீ பொன்மொழியாம்! அற்புதமாம் இவ்வுலகில்!
உன்னோடு சேர்ந்திருந்தால் உள்ளத்தில்  !-இன்பம்தான்
என்றுமில்லைத் துன்பம்  எனக்கு !


இன்னிசைச்   சிந்தியல் வெண்பா 

அன்னைநீ யேதான்என் ஆதியும் அந்தமும் !
என்னுயிராய் நிற்பவளே என்றுமெனை ஆதரிப்பாய் !
இன்றதுவே போதும் எனக்கு !


நேரிசை வெண்பா 

அன்னைநீ தான்என்றன்  ஆற்றலும் மூச்சாவாய் !
இன்னிசையாய் நின்றொளிரும்  இன்தேனே  !-உன்னருளால்
பொன்னழகு பெற்றிடலாம்  போதுமிந்த வையகத்தில்
என்னயினி  இன்னும் எனக்கு !


இன்னிசை வெண்பா 

அன்னைநீ காவியமாய் அன்புநிறை ஓவியமாய்
என்னுள்ளே தானிருப்பாய் எப்போதும் !உன்னழகைப்
பொன்னழகைக்  கண்ணெனவே போற்றுகின்ற பாட்டருள்வாய்
என்னுயிரே நாளும் எனக்கு!

பஃறொடை வெண்பா

அன்னைநீ முத்தல்லோ! அன்பேந்தி   முன்பிறந்த
பொன்மொழியைப் போற்றியிங்குப்  பாடிடவா ?-என்னாவி
உன்னோடு சங்கமிக்க ஊன்மறக்கும்! தேன்கசக்கும்!
என்னுயிர்க்கு நீதானே இன்பமிங்கே! -கன்னல்பூஞ்
சோலையுனைக் கண்டாலே சொக்கிநிற்கும் என்னுள்ளம்
காலையிளங் கீற்றாய்க்  களிப்பெய்தும்  !-ஆலையிட்ட
செங்கரும்பாய் ஆனேனே  செந்தமிழே நீவேண்டும்!
பொங்குதமிழ்ப்  பாட்டெழுதிப் போகத்தான் -மங்கையிவள்
காத்திருந்தாள்! பூத்திருந்தாள்! காலமெல்லாம் இங்குன்னைப்
பார்த்திருந்தாள்! பாப்புனைய பாருலகில் -கோர்த்துமலர்
தந்திடுவாய் என்றனுயிர்த்  தாகத்தை நான்தணிக்க
இந்நாளாம் பொன்நாள் எனக்கு !

                                                                 


இலக்கண விளக்கம் :

வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.

அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.


மேல் உள்ள வெண்பாக்கள் 'அன்னைநீ ', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன. 'எனக்கு' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.

இவ்வகையான வெண்பாக் கொத்தினைத் தாங்களும்  முறைப்படி பவில்வதற்கு இங்கே சொடுக்கவும் (இது எங்கள் ஆசான் கி .பாரதிதாசன் ஐயாவின் வலைப்பூ )http://bharathidasanfrance.blogspot.ch/2015/08/blog-post_4.html





தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

10 comments:

  1. அருமையான வெண்பாக் கொத்து தந்த சகோவுக்கு எமது பூங்கொத்து.

    ReplyDelete
  2. சிறப்பான வெண்பாக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அட! அருமை! கற்றுக் கொள்கின்றோம்....எத்தனை தமிழ் வல்லுநர்கள் இணையத்தில்...அருமை! மிக்க நன்றி!

    ReplyDelete
  4. வணக்கம் தோழி!

    வெண்பாக்கொத் தோடு விழித்தனை தாய்த்தமிழை!
    கண்போல் உனைக்காப்பாள் காண்!

    அருமையான வெண்பாக் கொத்து!
    வாழ்த்துக்கள் தோழி!

    த ம + வாக்கு இட்டேன் தோழி! சேர்ந்திச்சோ இல்லையோ தெரியல..:(

    ReplyDelete
  5. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. எழுத முயற்சிக்கிறோம். முடியவில்லை. இருந்தாலும் படித்து ரசித்தோம். நன்றி.

    ReplyDelete
  7. அருமை அம்மா...
    எனக்கெல்லாம் வெண்பா எழுதுவது என்பது முடியாத காரியம்...
    தங்களைப் போன்றோரின் எழுத்தை வாசித்து ரசித்தேன்...

    ReplyDelete
  8. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........