3/06/2014

தங்கத் தமிழே வா எழிலே




கட்டித் தங்கம் கண்ணுக்குள் 
காதல் செய்ய வந்தாளே! 
எட்டிச் சென்று நினைவலையை 
எங்கோ இழுத்துச் சென்றாளே!
புட்டிப் பாலை நான் அருந்த 
புகழ்ந்து பேசும் தாயைப் போல்   
கட்டிக் கொண்டே தோள் மீது 
காதல் மழையைப் பொழியாளோ!

கொஞ்சும் மழலைப் பேச்சழகி 
கொடுத்து வைத்த பேரழகி! 
நெஞ்சும் இனிக்க வந்தாளே 
நெருங்கிப் பழக மறந்தாளே! 
விஞ்சும் மனத்தின் ஆசைகளை 
விட்டுத் தள்ள முடியாது!
பஞ்சும் நெருப்பும் போலிங்கே 
பற்றிக்கொள்ள வர வேண்டும்! 

பாடித் திரியும் பறவைகளே  
பாசம் இதனைப் பார்த்தீரா?
வாடிக் கிடக்கும் மனநிலையை 
வருடிச்  சொல்ல மாட்டீரா?
தேடிப் பிடித்து அவளிடத்தில் 
தென்றல் போல எந்நாளும்
கூடிக் களிக்க  என்னோடு
கூட்டுச் சேர்த்து வைப்பீரா ?

காதல் தீயில் நான் வாட
கால மெல்லாம் கரைந்தோட
மோதல் மட்டும் நிலைத்திருந்தால்
மோகனப் புன்னகை தான் வருமா ?
சாதல் நன்று இதை விடவும்
சங்கத் தமிழே! ஆருயிரே!
ஓதல் வேண்டும் உன் நாமம் 
ஒளிந் திருக்க வேண்டாமே !
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

8 comments:

  1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ரசனையுடன் முடித்துள்ளீர்கள் அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. காதல் சுவை நனி சொட்டச் சொட்ட கவி செய்தீர்கள் . வாழ்க !

    ReplyDelete
  4. தமிழ்க்காதல் சுவைக்கிறது. பாராட்டுகள் தோழி.

    ReplyDelete
  5. அருஞ்சுவை சேர்த்தே
    அழகாய்க் கவிபாடி
    விருத்தத்தில் வைத்த
    நல்விருந்தில்
    இன்புற்றது
    என்னிதய இழையெல்லாம் !

    அருமை சகோ
    இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. "சங்கத் தமிழே ஆருயிரே
    ஓதல் வேண்டும் உன்னாமம்
    ஒளிந் திருக்க வேண்டாமே!" என்ற
    அடிகளை நானும் விரும்புகிறேன்!
    தமிழ் பற்றை ஊட்டும்
    பதிவுகளைத் தொடர்ந்து தாருங்கள்!

    ReplyDelete
  7. அருமையான கவிதை.....

    த.ம. +1

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே தங்கள் வரவும்
கருத்துமே என் அடுத்த ஆக்கத்திற்கு என்றுமே
வித்தாகும்.மிக்க நன்றி தங்கள் வரவுக்கும்
இனிய நற் கருத்திற்கும்!........